பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ஏஜென்டுகள் 2 கொலை செய்ததாக புகார் - இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மெரில் செபாஸ்டின்
- பதவி, பிபிசி நியூஸ் கொச்சி
இரண்டு பாகிஸ்தான் குடிமக்களை இந்திய ஏஜென்டுகள் 2023ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மண்ணில் கொன்றதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" என்று கூறியுள்ளது.
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்தியா அதை மறுத்துள்ளது.
இந்த இரண்டு கொலைகளுக்கும் இந்திய ஏஜென்டுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து "நம்பகமான ஆதாரங்கள்" இருப்பதாக பாகிஸ்தான் கடந்த வியாழக்கிழமை கூறியது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை "தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரசாரம்" என்று கூறியுள்ளது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் ராவல்கோட் நகரில் முகமது ரியாஸ் மற்றும் அக்டோபரில் சியால்கோட் நகரில் ஷாஹித் லத்தீப் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தது.
அதில் ஒருவர் ஒரு மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் ஒரு மசூதிக்கு வெளியே கொல்லப்பட்டார் என்று கூறியது.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கொல்லப்பட்டவர்கள் யார் அல்லது இந்திய அரசு அதன் பரம எதிரியின் எல்லைக்குள் கொலைகளை நடத்த ஏஜென்டுகளை அனுப்பியதாகக் கூறப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
வெளியுறவு செயலாளர் முகமது சைரஸ் காஜி இந்தக் கொலைகளை "ஏற்றுக்கொள்ள முடியாதது" மற்றும் "இறையாண்மையை மீறும் செயல்" என்று கூறினார்.
"இந்தப் படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட இரண்டு இந்திய ஏஜென்டுகளின் தொடர்பு குறித்த ஆவண, நிதி மற்றும் தடயவியல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன," என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியதற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் எழுப்பிய குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானை "பயங்கரவாதம், திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத பன்னாட்டு நடவடிக்கைகளின் மையம்," என்று விமர்சித்தது.
சீக்கியர்களின் கொலைகளுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான்

பட மூலாதாரம், X/@MEAIndia
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவும் பல நாடுகளும் பாகிஸ்தான் அதன் பயங்கரவாதம் மற்றும் வன்முறை கலாசாரத்தால் விழுங்கப்படும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் காஜி, "கனடாவிலும் அமெரிக்காவிலும் எழுந்த குற்றச்சாட்டுகள், சீக்கியர்களின் கொலைகள் மற்றும் கொலை முயற்சிகள் சம்பந்தப்பட்டது என்றாலும், அதேபோன்ற முயற்சிகள்தான் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளன,” என்று கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், காலிஸ்தான் அல்லது தனி சீக்கிய நாட்டிற்காக வாதிடும் நியூயார்க்கை சேர்ந்த ஓர் அமெரிக்க குடிமகனைப் படுகொலை செய்ய இந்தியர் ஒருவர் திட்டமிட்டதாகவும் அந்த சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் அமெரிக்கா கூறியது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட நிகில் குப்தா ஓர் இந்திய அரசாங்க அதிகாரியால் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அதிகாரி குறித்த விவரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை, அதிகாரி மீது குற்றம்சாட்டப்படவும் இல்லை.
படுகொலை சதித்திட்ட விவகாரத்தை இந்தியாவிடம் உயர்மட்ட அதிகாரிகளுடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகை கூறியது.
"அமெரிக்க அரசாங்கத்தால் எழுப்பப்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக" ஓர் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக இந்தியா கூறியது.
ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு சீக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதில் இந்திய அரசாங்கத்தை இணைக்கும் "நம்பகமான" ஆதாரங்கள் இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய சில மாதங்களுக்குப் பிறகு இந்தச் செய்தி வந்துள்ளது. அந்தக் கொலையில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுத்தது.
இந்தக் குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. காலிஸ்தான் இயக்கம் 1980களில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பஞ்சாப் மாநிலத்தை மையமாகக் கொண்ட வன்முறை கிளர்ச்சியுடன் இந்தியாவில் உச்சத்தில் இருந்தது.
இது பலவந்தமாக அடக்கப்பட்டது, இப்போது இந்தியாவில் இந்தக் கோரிக்கை பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள சீக்கிய புலம்பெயர்ந்தோரிடையே இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












