You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிடிஆர் தியாகராஜன் விளக்கம்: "நான் பேசியதாக பகிரப்படும் ஆடியோ 'போலி', மெளனம் காக்க இதுதான் காரணம்"
அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ 'போலி' என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன்.
சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றவாறு ஒருவர் பேசுகிறார்.
அந்த ஆடியோவில் பேசியவர் தமிழ்நாடு நிதியமைச்சர் தியாகராஜன் தான் என்று சவுக்கு இணையதள ஆசிரியரும் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஊழியருமான சங்கர் தெரிவித்திருந்தார். அந்த ஆடியோவை வெளியிட்டது தாம் தான் என்றும் இதுபோல மேலும் சில ஆடியோக்களை விரைவில் வெளியிடப்போவதாகவும் சங்கர் கூறியிருந்தார்.
இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையானது.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும், சர்ச்சை ஆடியோ குறித்து முதல்வர் உரிய விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவரது அமைச்சர் பதவி கூட பறிக்கப்படலாம் என்று சில ஊடகங்கள் விவாதங்களை நடத்தின.
இந்த நிலையில், அமைச்சர் பிடிஆர். தியாகராஜன் சர்ச்சை காணொளி தொடர்பாக மூன்று பக்க விளக்கத்தை தமது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
மாநில அமைச்சரவையில் நான் வகிக்கும் துறைகள், ஆடம்பரமாகவோ முழு சக்தியுடனோ வசதியுடனோ சமூக ஊடகங்களில் தொடர்ந்து மும்முரம் காட்டவும் அங்கு நிகழும் மூர்க்கத்தனமான சேறுபூசல்களுக்கு மறுப்புகளை வெளியிடுவதற்கும் என்னை அனுமதிக்கவில்லை.
பட்ஜெட் அலுவல்களில் மும்முரம்
அதிகபட்ச தாக்கத்தை பெறக்கூடிய மற்றும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடிய துறைகளில் கவனம் செலுத்துவது மட்டுமே மனசாட்சியுள்ள அரசு ஊழியரின் அடையாளம் என்று நான் நம்புகிறேன். இதனாலேயே (முதல் முறை அமைச்சர் என்ற முறையில்) எனக்கு முதல்வர் ஒதுக்கிய பல பொறுப்புகளின் முழு வீச்சையும் உணர்ந்து ஜூன் 2017இல் தொடங்கப்பட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து ராஜிநாமா செய்தேன்.
மார்ச் 20, 2023 முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் நான் முழுமையாக ஈடுபட்டு அர்ப்பணிப்புடன் இயங்குகிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாலை அமர்வின் போது நான்கு துறைகளுக்கான துணை மானிய கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, வெளியே தவறான முறையில் ஜோடிக்கப்பட்ட 26 நொடிகள் ஓடக்கூடிய ஆடியோ பரப்பப்பட்டது. 55 துறைகளின் மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவேற்றப்பட்டவுடன் 4,13,639 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை, பட்ஜெட் காரணமாக தேங்கிய கோப்புகளில் நான் கவனம் செலுத்தினேன். இதனால் இன்றைய தேதியில் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை.
எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் இன்றியமையாத பேச்சுரிமைக்கான வலுவான ஆதரவாளராக இருப்பவன் நான். என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்காக நான் இதுவரை போலீசில் கூட புகார் செய்யவில்லை. அவதூறு வழக்கு போடவில்லை. ஒரு முறை மட்டுமே எப்ஐஆர் (எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தபோது) பதிவு செய்திருக்கிறேன். எனது குடும்பத்தில் இறந்த முன்னோர் பற்றி தீங்கிழைக்கும் வகையிலும் எளிதில் ஏற்க முடியாத அவதூறு தகவல்களையும் வெளியிட்டதால் அந்த புகாரை பதிவு செய்தேன். இன்று வரை அந்த வழக்கை கூட நான் தொடரவில்லை. மக்களின் நல்ல தீர்ப்பை நம்பும் ஓர் அரசியல்வாதி என்ற முறையில், இன்றைய சமூக ஊடகங்களில் நடக்கும் அவதூறு பிரசாரத்திற்கு மறுப்புகளை வழங்குவது ஆபத்தான நெருப்புக்கு ஆக்ஸிஜனை வழங்குவது போன்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவன் நான்.
"குற்றச்சாட்டுகள் புதிதல்ல"
கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் என் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் அதிகப்படியாக செயல்படுவதாகவும், இடையூறு செய்பவராகவும் என் வேலையைச் செய்ய தகுதியற்றவர் போலவும் மற்றவர்கள் மூலம் மறைமுகமாக ஊழல் செய்வது போலவும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இறுதியாக தனிப்பட்ட முறையில் ஊழல் செய்ததாக கூறப்பட்டது (உதாரணமாக, நான் கையெழுத்திடும் ஒவ்வோர் கோப்பிற்கும் 1% கமிஷன் வாங்குவதாக). நல்ல குணாதிசயத்தின் தனிச்சிறப்பை தொடர்ச்சியாக நான் கொண்டிருப்பதால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்கும் நான் ஒருபோதும் எதிர்வினையாற்றவில்லை.
இப்போது, பொதுவெளியில் என்னை வில்லனாக சித்தரிப்பதில் தோல்வியடைந்ததால், எனக்கு எதிரானவர்களின் உத்தியில் மாற்றம் தெரிகிறது; தனிமையில் சிலுவையில் அறையப்பட்டவன் போலவும் ஊழலை எடுத்துரைப்பவர்களுக்கு இணங்காதவன் போலவும் கட்சியில் தனிமையாக பலி கொடுக்கப்பட்டவன் போலவும் என்னை சித்தரிக்க அவர்கள் முயன்றுள்ளனர். பொது வாழ்வில் நான் எதைச் செய்தாலும் அது என் தலைவரான திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தான் என்றும் எங்களைப் பிரிக்கும் எந்த தீய முயற்சியும் வெற்றி பெறாது என்பதையும் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
ஒரு சமூக ஊடக பதிவு இப்போது வருத்தமளிக்கும் விகிதத்தில் மீண்டும் வெளியிடப்பட்டதால், இந்த நேரத்தில் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்: இது நேர்மையற்ற அரசியல் நபர்களால் மீண்டும், மீண்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய ஊடகங்களான ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவற்றின் செயலைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன். இதுபோன்ற புனையப்பட்ட, தீங்கிழைக்கும் மூன்றாம் நிலை தகவலை (ஒருவரது கட்டுரை, ஒருவரின் கருத்துகள், சித்தரிக்கப்படும் ஆடியோ, தெரியாத நபருடன் நடந்ததாக கூறப்படும் உரையாடல்) அவை வெளியிடுகின்றன. பொதுவெளியில் கிடைக்கும் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் அந்த ஆடியோ உண்மையானது அல்ல என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஊடகங்களுக்கு வேண்டுகோள்
இந்த நேரத்தில் இரண்டு விஷயங்களை கூறி முடிக்க விரும்புகிறேன்:
1. எளிதில் அணுகக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ கிளிப்புகளை உருவாக்கும் திறனுடன், இன்னும் அதிகமான தீங்கிழைக்கும் உள்ளடக்கத்துடன் கூடிய ஆடியோக்கள் அல்லது வீடியோக்கள் இனி வரும் நாட்களிலோ மாதங்களிலோ வந்தால் கூட அவற்றைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நான் ஏற்கெனவே @ptrmadurai என்ற என் ட்விட்டர் பக்கத்தில் புகழ்பெற்ற திரைப்படமான "The Great Escape" இல் இருந்து ஒரு உதாரணத்தை மறு ட்வீட் செய்துள்ளேன்.
2. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துபவையாக செயல்பட வேண்டிய பாரம்பரிய ஊடகங்கள், முதல்நிலை தகவல் அல்லது குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட இரண்டாம் நிலை தகவல்களை மட்டுமே தெரிந்த மூலங்களிலிருந்து சரிபார்த்து ஒருவரை குற்றம்சாட்ட வேண்டும் அல்லது புகார் கூற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மூன்றாம் நிலை தகவல்களை சரிபார்க்காமல் ஒளிபரப்பும் ஆன்லைன் தளங்களின் ஒளிபரப்பால் அவற்றின் நிதி தேவை வேண்டுமானால் பூர்த்தி ஆகலாம். ஆனால் இது ஜனநாயகத்தில் பாரம்பரிய ஊடகங்களின் அந்தஸ்தை சிதைக்கிறது. இத்தகைய திசைதிருப்பல்கள் யாருக்கும் உதவாது மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வை பாதிக்கும் முக்கிய விஷயங்கள் மீதான அர்த்தமுள்ள பொது விவாத திறன்களை அவை தடுக்கும்.
இந்த சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய எனது ஒரே அறிக்கை இதுதான். இதுபோன்ற தீங்கிழைக்கும் அவதூறுகளை புறக்கணித்துவிட்டு எனது இயல்பான பணிக்குத் திரும்புவேன். நிச்சயமாக, இத்தகைய அவதூறுகள் அதிகபட்ச சகிப்புத்தன்மையின் நிலையைக் கடக்க வேண்டும். இந்த விஷயங்களில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண பல மாதங்கள் ஆகும் என்பதை உணர்ந்தாலும், இதுபோன்ற செயல்கள் அப்பட்டமான பொய்கள் மற்றும் ஏமாற்றும் போக்குக்கு மேலும் விளம்பரத்தைத் தரும் என்பதை உணர்ந்ததால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்