மத்தியில் பாஜக அரியணை ஏற உதவிய இரு திராவிடக் கட்சிகளும் இன்று விலகி நிற்பது ஏன்? முழு பின்னணி
தமிழகத்தில் நரேந்திர மோதியுடன் தமது தலைவர்கள் சிரித்துப் பேசும் புகைப்படங்கள் மிகப்பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவை தர்மசங்கடத்தில் தள்ளியுள்ளன.
இந்த புகைப்படங்கள் தேர்தல் பிரசார களத்தில் எதிரொலிக்கின்றன. இரு கட்சிகளும் கூட்டத்தில் கைதட்டல் பெறுவதற்கு இப்புகைப்படங்களை பயன்படுத்துகின்றன.
இந்தியாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த பாஜக, மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால், வட இந்தியாவில் கணிசமான வெற்றிகளை பெறும் பிரதமர் நரேந்திர மோதியுடன் தங்கள் தலைவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டுவதை கூட தற்போது திராவிட கட்சிகள் தயங்குவது ஏன்? பாஜகவுடன் ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாக திமுகவும் அதிமுகவும் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்வது ஏன்?
தமிழ்நாடு எப்போதுமே பாஜகவுக்கு சவாலாக இருப்பது ஏன்? திமுக, அதிமுகவுடன் அதன் கடந்த கால உறவு என்ன? அதற்கு வரலாறு மற்றும் தரவுகள் பற்றி அறிவது அவசியம்.
இந்த முறை அதிமுக நரேந்திர மோதியுடன் இல்லை. மறுபுறம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட முடியும் என்றும் அதிக இடங்களில் வெல்ல முடியும் என்றும் பாஜக நம்புகிறது.
அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியேற அண்ணாமலையின் பேச்சுக்களை பாஜக கண்டிக்காததை ஒரு காரணமாக குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. அண்ணாமலை பாஜகவின் கனவுகளை நிறைவேற்றுவார் என மோதி - அமித் ஷா கூட்டணி நம்புகிறது .
இந்நிலையில், பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் தற்போது உருவாகியுள்ள கூட்டணியில் அமமுக, பாமக, தமாக, ஓபிஎஸ் அணி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. பாஜக தரப்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன், ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட எல்.முருகன், ஏற்கெனவே எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறன்றனர். அதன் கூட்டணியின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா, டிடிவி தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இப்படி நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியுள்ள பாஜவுக்கு இது ஒரு திருப்புமுனை தேர்தலாக அமையுமா? அல்லது தமிழ்நாடு பாஜகவுக்கு வழக்கமான பாணியில்தான் பதில் சொல்லப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



