You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஷோக்ஜி கொலை பற்றி செளதி இளவரசரிடம் கேள்வி - டிரம்ப் கோபமாக கூறியது என்ன?
- எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர்
- பதவி, பிபிசி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2018ல் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு "எதுவும் தெரியாது" என்று கூறினார்.
இளவரசர் முகமது பின் சல்மானை வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.
ஆனால், 2021ல் வெளியான அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டில், 2018ல் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் கஷோக்ஜியின் கொலைக்கு வழிவகுத்த நடவடிக்கைக்கு இளவரசர் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. டிரம்பின் கருத்துகள் அந்த மதிப்பீட்டுக்கு முரணாகத் தோன்றின.
எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்த பட்டத்து இளவரசர், வெள்ளை மாளிகையில் பேசியபோது, கஷோக்ஜியின் மரணத்தை விசாரிக்க செளதி அரேபியா " முறையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தது" என்றும், இந்த சம்பவம் "வேதனையானது" என்றும் கூறினார்.
அந்தக் கொலை சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவுக்கு முதல் முறையாக அவர் வருகை தருகிறார். அச்சம்பவம், அமெரிக்கா – செளதி உறவுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'விஷயங்கள் நடந்துவிட்டன'
செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், கஷோக்ஜி கொலை குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் டிரம்ப் கடுமையான முறையில் பதிலளித்தார்.
"நீங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய ஒருவரைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்," என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
"நீங்கள் கூறும் அந்த மனிதரை நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு அவரைப் பிடித்திருந்தாலும் பிடிக்கவில்லை என்றாலும், சில விஷயங்கள் நடந்துவிட்டன"
"ஆனால் இந்த சம்பவத்தைப் பற்றி [பட்டத்து இளவரசருக்கு] எதுவும் தெரியாது," என்று வலியுறுத்திய டிரம்ப், "எங்கள் விருந்தினர்களை நீங்கள் சங்கடப்படுத்த வேண்டியதில்லை"என்றும் குறிப்பிட்டார்.
மறுபுறம், பட்டத்து இளவரசர் இந்த படுகொலைச் சம்பவம் "வேதனையானது" என்றும் "பெரிய தவறு" என்றும் கூறி, அதைப் பற்றி விசாரிக்க செளதி அரேபியா "தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தது" என்றார்.
ஜோ பைடன் ஆட்சியில் 2021ல் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறை அறிக்கை, இஸ்தான்புல்லில் கஷோக்ஜியை "பிடிக்க அல்லது கொல்ல" ஒரு திட்டத்திற்கு பட்டத்து இளவரசர் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவித்தது.
ஆனால் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை வெளியிட மறுத்தது.
அவரது படுகொலைக்குப் பிறகு பல செளதி அதிகாரிகளுக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், அவற்றில் எதுவும் பட்டத்து இளவரசரை நேரடியாக குறிவைக்கவில்லை.
எஃப்-35 போர் விமானம்
டிரம்பின் கருத்துகளுக்கு பதிலளித்த, இறந்த ஜமால் கஷோக்ஜியின் மனைவி ஹனான் பிபிசி நியூஸ்நைட்டுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பட்டத்து இளவரசரை பாதுகாப்பது, தனது கணவரின் கொலையில் பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஏற்கனவே பொறுப்பேற்றுக்கொண்ட விதத்துடன் பொருந்தவில்லை என்று தெரிவித்தார்.
"2019 ஆம் ஆண்டு '60 மினிட்ஸ்' நிகழ்ச்சியில், இந்த பயங்கரமான குற்றத்துக்கான பொறுப்பை பட்டத்து இளவரசரே ஏற்றுக்கொண்டார்" என்பதை அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், பட்டத்து இளவரசரை தான் சந்திக்க விரும்புவதாகவும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தனது கணவரின் கொலைக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் ஹனான் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் வாஷிங்டன் டிசி பகுதியில் வசித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை டிரம்ப் மற்றும் முகமது பின் சல்மான் இடையிலான சந்திப்பில், சிவில் அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, மற்றும் அமெரிக்காவில் செளதியின் முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 600 பில்லியன் டாலர் முதலீடு 1 டிரில்லியன் டாலராக உயர்த்தப்படுவதாக பட்டத்து இளவரசர் தெரிவித்தார்.
டிரம்பின் சொற்களை எதிரொலிக்கும் வகையில், அமெரிக்கா "உலகின் பிரபலமான நாடு" எனவும், "நீண்டகால வாய்ப்புகளை" உருவாக்கியதற்காக அமெரிக்க அதிபரைப் பாராட்டுவதாகவும் பின் சல்மான் கூறினார்.
மேம்பட்ட எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்பனை செய்வது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.
ஏற்றுமதிக்கான உரிமங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என டிரம்ப் கூறினாலும் செளதிக்கும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டினுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என தான் எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு, சில இஸ்ரேலிய அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் எஃப்-35 போர் விமானங்களை வைத்திருக்கும் ஒரே நாடு தற்போது இஸ்ரேல் மட்டும் தான் என்பதால், "தனித்துவமான ராணுவ முன்னிலை" குறையும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
செளதிக்கு வழங்கப்படும் எஃப்-35 போர் விமானம், இஸ்ரேல் பயன்படுத்தும் விமானங்களைப் போலவே இருக்கும் என அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
''செளதி அரேபியா ஒரு சிறந்த கூட்டாளி. இஸ்ரேலும் ஒரு சிறந்த கூட்டாளிதான்" என்று டிரம்ப் கூறினார்.
"உங்களுக்கு குறைந்த திறன் கொண்ட விமானங்கள் தரப்பட வேண்டும் என்று சிலர் விரும்புவதை நான் அறிவேன். ஆனால் எனது பார்வையில், இரு நாடுகளும் மிக உயர்ந்த தரத்திலானவற்றைப் பெற தகுதியானவை" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
மனித உரிமை மீறல்கள் காரணமாக செளதியை தனிமைப்படுத்துவேன் என கூறிய பைடன், பட்டத்து இளவரசரை அமெரிக்காவுக்கு வரவேற்கவில்லை.
ஆனால் 2022ல், பிற விவகாரங்களில் ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக பைடன் செளதி அரேபியாவுக்குச் சென்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு