'அடிமைகளின் பைபிள்' புத்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா?

    • எழுதியவர், ஜுவான் ஃபிரான்சிஸ்கோ அலான்ஸோ
    • பதவி, பிபிசி நியூஸ் முன்டோ

"எபிரேயர்களின் தேவனாகிய கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பி, 'என் மக்கள் வனாந்தரத்தில் எனக்கு ஆராதனை செய்யும்படி அவர்களை அனுப்பிவிடு' என்று சொல்லச் சொன்னார்."

மோசஸ் எகிப்திய மன்னன் பார்வோன் ராம்சேஸிடம் வைத்த இந்தக் கோரிக்கைதான், அடிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேலியர்களை எகிப்தின் அரசன் விடுவித்து, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குச் செல்ல அனுமதிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின் ஆரம்பம்.

ஹாலிவுட் இந்த கதையை திரைக்கு கொண்டுவருவதற்கு முன்பே 10 கொள்ளைநோய்கள், செங்கடல் பிளவுபடுதல் போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசய நிகழ்வுகள் இந்தக் கதையை பைபிளில் மிகவும் அறியப்பட்ட பிரபலமான கதைகளில் ஒன்றாக மாற்றியுள்ளன.

இருப்பினும், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளியிடப்பட்ட பரிசுத்த நூலின் ஒரு பதிப்பில், "கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின்" விடுதலையைப் பற்றிய 'யாத்திராகமம்' (விடுதலைப் பயணம்' Exodus) புத்தகத்தில் விவரிக்கப்பட்ட கதை இடம்பெறவில்லை. அடிமைத்தனத்தையும் ஒரு நபர் மற்றவரை ஒடுக்குவதையும் கண்டிக்கும் மற்ற பகுதிகளும் இல்லை.

அடிமைகளுக்கும் எஜமானர்களுக்கும் ஏற்ற ஒரு பதிப்பு

"பிரிட்டிஷ் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கறுப்பின அடிமைகளின் பயன்பாட்டிற்கான பரிசுத்த வேதாகமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்" (Select parts of the Holy Bible, for the use of the Negro Slaves, in the British West-India Islands). இது 1807 இல் லண்டனில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பு.

இருப்பினும், காலப்போக்கில், வரலாற்றாசிரியர்கள் இந்த நூலை "அடிமைகளின் பைபிள்" என்று மறுபெயரிட்டுள்ளனர்.

இந்த பதிப்பை 'கறுப்பின அடிமைகள் மதமாற்ற சங்கம்' (Society for the Conversion of Negro Slaves) என்ற அமைப்பு வெளியிட்டது. இது ஆங்கிலிக்கன் திருச்சபையைச் (Church of England) சேர்ந்த மிஷனரிகளின் அமைப்பாகும். இந்தக் குழு கரீபியன் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் காலனிகளில் உள்ள தோட்டங்களில் வேலை செய்ய ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளுக்கு மத போதனை செய்வதில் ஈடுபட்டது. ஆனால், அடிமை முறையை அவர்கள் கேள்வி கேட்கவில்லை.

"இந்த பைபிள் பதிப்பு, அடிமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் பெருமளவில் திருத்தப்பட்ட ஒரு நூலாகும்" என்று பிரிட்டிஷ் இறையியலாளர் ராபர்ட் பெக்போர்ட் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

"இது சுமார் 90% பழைய ஏற்பாட்டையும் மற்றும் 60% புதிய ஏற்பாட்டையும் நீக்கிய ஒரு நூலாகும்" என்று பர்மிங்காம் நகரில் உள்ள 'தி குயின்ஸ் ஃபவுண்டேஷன்' (The Queen's Foundation) மையத்தின் இன நீதியின் பேராசிரியரான அவர் விளக்கினார். இந்தக் மையம் புதிய ஆங்கிலிக்கன் மதகுருமார்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.

"மோசஸ் மற்றும் இஸ்ரேலியர்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட முழு வரலாறும் நீக்கப்பட்டது, அதேபோல் சுதந்திரம் அல்லது மனித விடுதலையைப் பற்றிய அனைத்து பகுதிகளும் நீக்கப்பட்டன. உதாரணமாக, அப்போஸ்தலர் பவுல் எழுதிய, 'கிறிஸ்துவில் அடிமையும் இல்லை, சுதந்திரமானவனும் இல்லை' என்ற பகுதி நீக்கப்பட்டது," என்றும் அவர் கூறினார்.

வாஷிங்டன் பைபிள் அருங்காட்சியக (Museum of the Bible of Washington) சேகரிப்புகளின் இயக்குநர் அந்தோனி ஷ்மிட் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார். அடிமைகளின் பைபிளின் சில எஞ்சிய பிரதிகளில் ஒன்று 2017-ல் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது.

"இது ஒரு குறிப்பிட்ட வாசகர்களை இலக்காகக் கொண்ட, பெரிய பகுதிகள் இல்லாத, சுருக்கப்பட்ட பைபிளாகும்" என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மத நிபுணரான அவர் கூறினார்.

வரலாறு முழுவதும் இந்த நடைமுறை பொதுவானது என்று ஷ்மிட் உறுதிப்படுத்தினார்.

"பொதுமக்களுக்கு எளிதாகப் புரியும்படித் திருத்தப்பட்ட மற்ற சுருக்கமான பைபிள்கள் எங்களிடம் உள்ளன. எடுத்துக்காட்டாக, குழந்தைகளுக்கான சில பைபிள்கள் எங்களிடம் உள்ளன, அதில் உள்ள உரைகள் படங்களாக மாற்றப்பட்டுள்ளன" என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தப் பதிப்பு வேறுபட்டது என்று அந்த நிபுணர் ஒப்புக்கொண்டார்.

"இதை வெளியிட்டவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களைக் கையாளும் நோக்கத்துடன் செய்தார்கள். மோசஸ் போன்ற கதைகள் மிகவும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை, அவை கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பியிருக்கலாம்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த பதிப்பிற்குப் பொறுப்பானவர்கள், எந்தெந்த உரைகளை வைத்திருக்க வேண்டும், எவற்றை நீக்க வேண்டும் என்று வரிக்கு வரி பைபிளைப் பார்க்கவில்லை என்றும் ஷ்மிட் கூறினார்.

"அவர்கள் வார்த்தைகளையோ அல்லது சொற்றொடர்களையோ நீக்கவில்லை, மாறாக அத்தியாவசியமற்றதாகக் கருதிய முழுப் பகுதிகளையும் நீக்கினர். உதாரணமாக, அவர்கள் யாத்திராகமம் புத்தகத்தின் பெரும்பகுதியை நீக்கினர், ஆனால் மற்ற பைபிள் நூல்களில் தோன்றும் மோசஸ் பற்றிய குறிப்புகளைத் தக்க வைத்துக் கொண்டனர்" என்று அவர் விளக்கினார்.

புராட்டஸ்டன்ட் பைபிள் பதிப்பில் 66 புத்தகங்கள் உள்ளன, கத்தோலிக்க பதிப்பில் 73 புத்தகங்கள் உள்ளன. ஒரு கிழக்கு ஆர்த்தடாக்ஸ் மொழிபெயர்ப்பில் 78 புத்தகங்கள் உள்ளன. ஆனால் வாஷிங்டன் பைபிள் அருங்காட்சியகத்தின்படி, "அடிமைகளின் பைபிளில்" சுமார் 14 புத்தகங்கள் மட்டுமே உள்ளன.

சூழலை மனதில் கொள்வது

பெக்போர்ட்டைப் பொறுத்தவரை, 'அடிமைகளின் பைபிள்' தோன்றிய வரலாற்றுத் தருணமானது, காலனிகளில் இருந்த அடிமை மக்கள் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்பதற்கான மற்றொரு ஆதாரம்.

"இது 1807 இல் வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தனது பேரரசில் அடிமை வர்த்தகத்தை ஒழித்தது. ஆனால் அடிமை முறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீடித்தது," என்று அந்த இறையியலாளர் சுட்டிக்காட்டினார்.

அதைத் தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில்: "தோட்டங்களில் அடிமைகள் எப்படித் தக்கவைக்கப்பட்டனர்? அடிமைத்தனத்தின் ஒரு அங்கமாக இருந்த வன்முறையைத் தவிர, அவர்களுக்கு ஒரு கருத்தியல் கட்டமைப்பு தேவைப்பட்டது. மேலும், வெள்ளை பேரினவாதத்தை ஆதரிக்கும் போலி அறிவியல் (pseudoscience) தோன்றுவதற்கு முன்பு, கடவுள் அடிமைத்தனத்தை ஆதரித்தார் என்ற கருத்தை ஊக்குவிக்க பைபிள் இன்றியமையாததாக இருந்தது."

"அடிமைகளே, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல, கள்ளமில்லாமல், பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்." – அப்போஸ்தலர் பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதத்தைச் சேர்ந்த இந்த பகுதி, இந்த பதிப்பில் காணப்படும் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வாசகங்களில் ஒன்றாகும்.

"இனவாத பயங்கரவாதத்திற்குச் சேவை செய்யவும், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களுக்கு, கடவுள் அவர்களின் மனிதத்தன்மையற்ற நிலையை ஆதரிக்கிறார் என்று பரிந்துரைக்கவும் பைபிளை மோசமாக்குவதே இதன் யோசனை" என்று பெக்போர்ட் கூறினார்.

ஷ்மிட், இந்த பைபிளின் பதிப்பு அந்தக் காலத்தின் சூழலின் பிரதிபலிப்பு என்று நம்புகிறார்.

"18ஆம் நூற்றாண்டு முழுவதும், சில கிறிஸ்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்களின் ஆன்மீக நலனில் அக்கறை கொண்டிருந்தனர். ஆனால் இது தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று பயந்த தோட்ட உரிமையாளர்கள் அவர்கள் மத போதனை பெறுவதை எதிர்த்தனர்," என்று அவர் கூறினார்.

"நில உரிமையாளர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள, ஆங்கிலிகன் மிஷனரிகள், அடிமைகளை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவது அவர்களை மிகவும் கீழ்ப்படிபவர்களாக இருக்கக் கற்றுக்கொடுக்கும் என்பதால், அவர்களை சிறந்த அடிமைகளாக மாற்றும் என்று வாதிட்டனர்," என்று வாஷிங்டன் பைபிள் அருங்காட்சியகத்தின் சேகரிப்புகளின் இயக்குனர் மேலும் கூறினார்.

ஆங்கிலிகன் திருச்சபையின் பங்கு

அடிமை வணிகத்தில் இங்கிலாந்து திருச்சபையின் பங்கு வரலாற்று ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, அதன் அமைப்புகளில் ஒன்றான 'வெளிநாடுகளில் நற்செய்தி பரப்பும் சங்கம்' (Society for the Propagation of the Gospel in Foreign Parts), பார்படாஸில் உள்ள கோட்ரிங்டன் (Codrington) தோட்டத்தின் பங்குகளை வைத்திருந்தது. அதில் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க அடிமைகள் வேலை செய்தனர் என்று பெக்போர்ட் நினைவு கூர்ந்தார்.

2023 இல், அப்போதைய கேன்டர்பரி ஆர்ச்பிஷப் மற்றும் ஆங்கிலிகன் திருச்சபையின் மிக உயர்ந்த மதகுருவான ஜஸ்டின் வெல்பி, ஒரு உள் விசாரணைக்குப் பிறகு, ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் கடத்தப்பட்டதில் திருச்சபையின் தொடர்புகளை ஒப்புக்கொண்டார்.

அடிமைத்தனத்தால் "வரலாற்று ரீதியாகப் பாதிக்கப்பட்ட" சமூகங்களின் நலனுக்கான திட்டங்களுக்கு நிதியளிக்க 135 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று வெல்பி அறிவித்தார்.

இருப்பினும், அடிமைத்தனத்தை பகிரங்கமாகக் கண்டித்த முதல் ஆங்கிலிக்கன் தலைவர்களில் ஒருவரான பிஷப் பீல்பி போர்டியஸுடன் (Beilby Porteus) (1731-1809) தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரு குழுவால் 'அடிமைகளின் பைபிள்' வெளியிடப்பட்டது என்ற உண்மை, இந்த அமைப்பு இந்த நடைமுறையைச் சீர்திருத்தவும், அகற்றவும் முயன்றது என்பதைக் காட்டுகிறது என்று ஷ்மிட் நம்புகிறார்.

"மிஷனரிகளுக்கு ஒரு முற்போக்கான பார்வை இருந்தது. அவர்கள் அடிமைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பணிச் சுமையைக் குறைக்கவும், அவர்களுக்கு மருத்துவ கவனிப்பை வழங்கவும், அவர்களின் குடும்பங்கள் பிரிக்கப்படுவதை தடை செய்யவும் விரும்பினர்," என்று அந்த நிபுணர் கூறினார்.

எவ்வாறாயினும், உடனடியாக அடிமைத்தனத்தை ஒழிக்க மத குருமார்கள் வாதிட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை என்று அவர் ஒப்புக்கொண்டார்.

"இது படிப்படியாக, ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகளில் நடக்கும் என்று அவர்கள் இலக்கு வைத்திருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ஷ்மிட் விளக்கினார்.

அப்போதைய ஆங்கிலிகன் திருச்சபை "கிறிஸ்தவ அடிமைத்தனத்திற்காக" வாதிட்டது என்று குறிப்பிட்ட பெக்போர்ட்டும் இதேபோன்ற கருத்தைக் கொண்டுள்ளார்.

"கிறிஸ்தவ அடிமைத்தனம் என்பது அடிமை முறையைப் பராமரிக்கவும், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், காலப்போக்கில் அந்த அமைப்பைச் சீர்திருத்தவும், அதை ஒழிக்கவும் செய்யப்பட்ட ஒரு முயற்சியாகும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பைபிளின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டபோது இந்த சர்ச்சைக்குரிய உரை கரீபியனில் உள்ள பிரிட்டிஷ் காலனிகளில் இருந்த கரும்புத் தோட்டங்களில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆவண ஆதாரங்கள் மட்டுமே இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர்.

இருப்பினும், அமெரிக்காவின் தெற்கில் உள்ள பருத்தி பண்ணைகளிலும் இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பெக்போர்ட் மற்றும் ஷ்மிட் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு என்ன?

கத்தோலிக்க திருச்சபையில் ஒரு "அடிமைகளின் பைபிள்" இருந்ததா? "இல்லை" என்று ஸ்பெயினில் உள்ள கொமிலாஸ் (Comillas) மற்றும் சான் டமாசோ (San Damaso) பல்கலைக்கழகங்களின் திருச்சபைகளின் வரலாற்றுப் பேராசிரியர் ஜீசஸ் ஃபோல்காடோ பிபிசி முண்டோவிடம் உறுதிப்படுத்தினார்.

"அடிமைத்தனத்தை ஆதரிப்பதற்காக ஆங்கிலிக்கன் திருச்சபை பைபிளிலிருந்து நீக்கப்பட்ட அதே நூல்களைத்தான் ஐரோப்பாவில் உள்ள பல திருச்சபை தலைவர்களும் போப் ஆண்டவர்களும் அடிமைத்தனத்தை கண்டிக்கப் பயன்படுத்தினர்," என்று பாதிரியாரும் இறையியல் முனைவருமான அவர் கூறினார்.

1537 இல், போப் மூன்றாம் பவுல் 'சப்லிமிஸ் டேயஸ்' (Sublimis Deus) என்ற போப்பாண்டவரின் ஆணைச் சட்டத்தை வெளியிட்டார். அதில், "அனைத்து இனங்களைச் சேர்ந்த அனைத்து மனிதர்களும் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும், தங்களுக்குத் தாங்களே எஜமானர்களாக இருக்க வேண்டும், யாரையும் அடிமைப்படுத்த அனுமதி இல்லை" என்று அறிவித்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, போப் எட்டாம் அர்பன் யாரையாவது அடிமைப்படுத்தும் எந்தவொரு கத்தோலிக்கரையும் மதத்தில் இருந்து விலக்குவதாக எச்சரித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள் இந்த நிலைப்பாட்டுடன் இருந்தபோதிலும், அமெரிக்காவில் உள்ள ஸ்பானிஷ், போர்த்துகீசிய மற்றும் பிரெஞ்சு கட்டுப்பாடுகளில் இருந்த திருச்சபையேகூட அடிமைத்தனத்தை நடைமுறைப்படுத்தியது.

"உண்மையில், போப் அடிமைத்தனத்தைக் கண்டித்தார், ஆனால் அமெரிக்காவில் உள்ள பல சபைகள் அடிமைகளை வைத்திருந்த முரண்பாடு இருந்தது," என்று ஃபோல்காடோ உறுதிப்படுத்தினார்.

"இருப்பினும், ஹிஸ்பானிக் அமெரிக்காவில் இருந்த அடிமைத்தனத்தை ஆங்கிலம் பேசும் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடன் ஒப்பிட முடியாது," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

ஏன்? "மத சபைகள் அடிமைகளை வைத்திருந்தன, ஆனால் அவர்களின் நிலைமைகள் அந்தக் காலத்தின் காஸ்டியாவில் (Castilla) இருந்த கூலித் தொழிலாளர்களின் நிலைமைகளுக்கு ஒத்ததாக இருந்தது: அவர்களுக்கு விடுமுறை நாட்கள் இருந்ததுடன், வெளியே செல்லவும், திருமணம் செய்யவும் அனுமதிக்கப்பட்டது, இருப்பினும் அவர்கள் முழுமையாகச் சுதந்திரமானவர்கள் அல்ல," என்று அவர் விளக்கினார்.

இன்று, புனித நூலின் இந்த சர்ச்சைக்குரிய பதிப்பின் சில பிரதிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஒன்று நாஷ்வில்லில் உள்ள ஃபிஸ்க் பல்கலைக்கழகத்தின் (Fisk University) நூலகத்தில் உள்ளது. மற்ற இரண்டு பிரதிகள் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் கிளாஸ்கோ பல்கலைக்கழகங்களில் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு