You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானிக்கு 'ஒரு ரூபாய்க்கு 1,000 ஏக்கர் நிலம்' - பிகாரில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம், அதற்கு ஆண்டு வாடகை ஒரு ரூபாய் மட்டுமே.
நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானியின் நிறுவனமான அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு அனல் மின் நிலையம் அமைப்பதற்காக பிகார் அரசு அந்த நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது.
ஆனால் பாகல்பூர் மாவட்டத்தின் பிர்பைன்டியில் உள்ள இந்த நிலம் தொடர்பாக ஒரு பிரச்னை எழுந்துள்ளது.
இந்த நிலம் இப்போது அரசியல் தளத்தில் விவாதப் பொருளாக மாறிவிட்டது.
பிகார் அரசும் பாஜகவும், அதானி பயன்பெறும் வகையில் செயல்படுகின்றனர் என காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மறுபுறம், பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. "உரிய நடைமுறைகளை பின்பற்றியே அதானி இந்தத் திட்டத்தை பெற்றதாக" பிகார் அரசு கூறுகிறது.
அதானி நிறுவனத்திற்கு திட்டத்தை வழங்குவதைத் தவிர்த்து, வழங்கப்பட்டுள்ள நிலத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் பெற பிபிசி பலமுறை அதானி குழுமத்தைத் தொடர்பு கொண்டும், இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
'ஒரு ரூபாய்க்கு ஆயிரம் ஏக்கர் நிலம்'
பாட்னாவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாகல்பூர்.
பாகல்பூரைக் கடந்தால், கஹல்கான் எனும் ஊரை அடையலாம். அங்கு தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) அனல் மின் நிலையத்தையும், அவற்றின் உயரமான புகைபோக்கிகளையும் காண முடிகிறது.
ஆனால் பிர்பைன்டியை நோக்கிச் செல்லும்போது, காட்சிகள் மாறுகின்றன. ஆயிரக்கணக்கான பசுமையான மா மரங்களை தூரத்திலிருந்து பார்க்கும்போது, அந்தப் பகுதி முழுவதுமே ஒரு தோட்டம் தான் என்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.
பிப்ரவரி 2025இல், பாகல்பூரில் உள்ள பிர்பைன்டியில் 2400 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான புதிய திட்டத்தை பிகார் அரசு முன்மொழிந்தது.
இந்த அனல் மின் நிலையம் கட்டண அடிப்படையிலான போட்டி ஏலம் மூலம் அமைக்கப்படும் என்று மாநில அரசு முடிவு செய்தது.
ஜூலை 16, 2025 அன்று நடந்த ஆன்லைன் ஏலத்தில் அதானி பவர் லிமிடெட் நிறுவனம் ஒரு கிலோவாட்/மணிக்கு (kilowatt/hour) ரூ.6.075 (6 ரூபாய், 7.50 பைசா) என்ற மிகக்குறைந்த விலையை முன்மொழிந்து திட்டத்தை வென்றது.
இந்தப் போட்டி ஏலத்தில், டோரண்ட் பவர் லிமிடெட் ஒரு கிலோவாட்-மணி ரூ.6.145-க்கும், லலித்பூர் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் ரூ.6.165-க்கும், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி லிமிடெட் ரூ.6.205-க்கும் மின்சாரம் வழங்க முன்வந்தன.
அதானி பவர் லிமிடெட் ஏலத்தை வென்ற சுமார் 20 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 5, 2025 அன்று பிகார் மாநில அமைச்சரவை கூடியது.
இந்தக் கூட்டத்தில், ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு (அதானி பவர் லிமிடெட்) வருடத்திற்கு 'ஒரு ரூபாய்' கட்டணத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலம் அதானி பவர் நிறுவனத்திற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
"நிலத்தின் உரிமை பிகார் அரசின் எரிசக்தித் துறையிடம் முழுமையாக இருக்கும்" என்று பிகாரின் தொழில்துறை அமைச்சர் நிதிஷ் மிஸ்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசியல் குற்றச்சாட்டுகளும் பதில்களும்
அதானி பயன் பெரும் வகையில் பாஜக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார்.
"பாகல்பூரில் உள்ள பிர்பைன்டியில், ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் 1050 ஏக்கர் நிலம், 10 லட்சம் மா, லிச்சி மற்றும் தேக்கு மரங்கள் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபிசியிடம் பேசிய பாஜகவின் ஓபிசி மோர்ச்சா தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் நிகில் ஆனந்த், "பிகார் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் கட்சி ஒருவித பயத்துடனும், விரக்தியுடனும் இருப்பதைப் பார்க்க முடிகிறது" என்று கூறினார்.
"பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை பிகார் உருவாக்கி வருகிறது. பிகாரில் மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் செயல்முறைகள் முற்றிலும் வெளிப்படையானவை. முறையான தகுதி இல்லாத யாருக்கும் டெண்டர் ஒதுக்கப்படாது" என்று அவர் கூறினார்.
"காங்கிரஸ் அதானியை குறிவைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது, ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், அதானியின் நிறுவனங்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக இரட்டை வேடம் போடுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்" என்று நிகில் ஆனந்த் கூறினார்.
பிகாரின் தொழில்துறை அமைச்சர் நிதிஷ் மிஸ்ரா பிபிசியிடம் பேசுகையில், "நாட்டின் அனைத்து மாநிலங்களும் இதைச் செய்கின்றன. பெரிய முதலீடுகளுக்கு நிலம் மலிவான விலையில் வழங்கப்படுகிறது. பிர்பைன்டியில் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை 2010-11ஆம் ஆண்டிலேயே தொடங்கியது" என்று கூறினார்.
"ஏலம் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டது. நாட்டின் நான்கு பெரிய நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. அதானி குழுமம் மாநில அரசுக்கு மலிவான விலையில் மின்சாரம் வழங்க இந்த ஏலத்தில் முன்மொழிந்து. அதன் பிறகு அவர்களுக்கு இந்த திட்டம் கிடைத்தது" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சிபிஐ (எம்எல்) செப்டம்பர் 21-ஆம் தேதி ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது, அதில் இந்த ஆலை பிகார் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் ரூ. 5,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்றும், அப்பகுதியில் தண்ணீர் பிரச்னையை உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அக்கட்சி போராட்டங்களையும் நடத்தியது.
பிகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) ஆலை குறித்து கேள்விகளை எழுப்பி, பாஜகவை விமர்சித்துள்ளது.
"அரசாங்கம் எல்லா வகையிலும் அதானிக்குச் சாதகமாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் செய்தது போலவே, பிகார் விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்க இப்போது அவர்கள் வந்துள்ளனர். எங்கள் கட்சி இதை எதிர்க்கிறது" என்று ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் சித்தரஞ்சன் ககன் கூறினார்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பிகார் தொழில்துறை அமைச்சர் நிதிஷ் மிஸ்ரா, "மிகக் குறைந்த விலையில் ஏலம் கேட்டதன் அடிப்படையில் இந்தத் திட்டம் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது" என்றார்.
நிலம் எப்படி கையகப்படுத்தப்பட்டது?
2010 மற்றும் 2012க்கு இடையில் பிகார் அரசு பிர்பைன்டியின் ஐந்து பஞ்சாயத்துகளில் நிலத்தை கையகப்படுத்தியது. மொத்தம் 988.33 ஏக்கர் நிலம் சுமார் 900 விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.
"பிகாரில் மின்சாரத்தின் தேவையை உணர்ந்து, பல இடங்களில் அனல் மின் நிலையங்களை கட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் கீழ், பிர்பைன்டியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது," என்று பாகல்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) நவால் கிஷோர் சௌத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.
"நாங்கள் 97 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு பணம் செலுத்தியுள்ளோம். இதில் பெரும்பாலானவை 2015க்கு முன்பு பிகார் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. பிகார் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் பெயரில் விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கப்பட்டது, பின்னர் அந்த ஆணையம் நிலத்தை மின்சாரத் துறையிடம் ஒப்படைத்தது," என்று அவர் விளக்குகிறார்.
இழப்பீடு பெறாத விவசாயிகள் 'நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ஆணைய வாரியம்' (LARA Court) அல்லது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் நிலுவையில் இல்லை என்றால், உடனடியாக பணம் பெற விண்ணப்பிக்கலாம்." என்று அவர் கூறினார்.
விவசாயிகள் கூறுவது என்ன?
அரசாங்கக் கூற்றுகளுக்கு மாறாக, பிர்பைன்டியில் பல விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு இன்னும் முழுமையான மற்றும் முறையான இழப்பீடு கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
இந்த கையகப்படுத்துதலில் ஷேக் ஹமீது என்பவர் மூன்றே கால் ஏக்கர் நிலத்தை இழந்துள்ளார். இந்த நிலத்திற்கு ஈடாக, அவருக்கு அரசாங்கத்திடமிருந்து சுமார் இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
"இந்தப் பணத்தின் ஒருபகுதியை நாங்கள் 2014ஆம் ஆண்டு வாக்கில் பெற்றோம். ஆனால் இன்னும் 50 சதவீத பணம் இன்னும் பெறப்படவில்லை" என்று அவர் கூறுகிறார்.
மற்ற விவசாயிகளைப் போலவே, ஷேக் ஹமீதின் மகன் எஜாஸ் அகமதுவும் இந்தத் திட்டம் குறித்து கேள்விகளை எழுப்புகிறார். "கையகப்படுத்திய சமயத்தில் வெளிப்படைத்தன்மை என்பது இருக்கவில்லை. எங்களுக்கு ஒரே இடத்தில் நான்கு மாம்பழத் தோட்டங்கள் உள்ளன, ஆனால் ஒரு பழத்தோட்டத்திற்கான நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ. 62 லட்சம் என்ற விகிதத்தில் இழப்பீடு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் மற்றொரு பழத்தோட்டத்திற்கு ஏக்கருக்கு ரூ. 82 லட்சம் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டது." என்று அவர் கூறுகிறார்.
பிர்பைன்டியில் வசிக்கும் முகமது அஸ்மத், "எனக்கு சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது, அதை அரசாங்கம் 2012-இல் எடுத்துக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இழப்பீட்டுத் தொகை கிடைத்தது. ஆனால் 20 சதவீத பணம் இன்னும் வரவேண்டியுள்ளது" என்று கூறுகிறார்.
குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள்
விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த பாகல்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) நவால் கிஷோர் சௌத்ரி, "கணக்கெடுப்பின் போது, கையகப்படுத்தப்படும் நிலத்தில் உள்ள அசையாச் சொத்துக்கள் அதாவது வீடுகள் மற்றும் மரங்கள் ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" என்று கூறுகிறார்.
"இழப்பீடு அதற்கேற்ப மதிப்பிடப்படுகிறது. அரசாங்கம் ஏற்கனவே இதைச் செய்துவிட்டது. எனவே, என்ன வழங்கப்பட்டது, என்ன வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கே இப்போது இடமில்லை." என்றார்.
வெவ்வேறு இழப்பீடுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பிர்பைன்டியில் நிலம் கையகப்படுத்தல் இரண்டு பிரிவுகளாக நடந்தது. 2010ஆம் ஆண்டில், பழைய சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் 2013இல், புதிய சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் கிடைக்கும் தொகை அவர்களின் தனிப்பட்ட அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. நிர்வாகம் சட்டத்தின்படி செயல்பட்டுள்ளது."
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த பாகல்பூர் நில கையகப்படுத்தல் அதிகாரி ராகேஷ் குமார், 'பிகார் நில கையகப்படுத்தல் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு கொள்கை 2007-இன்' கீழ், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
தரிசு நிலத்தின் விலை ஏக்கருக்கு ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது.
விவசாய நிலத்திற்கு இழப்பீடு வழங்கிய அதே வேளையில், நிலத்தில் உள்ள மரங்களுக்கான இழப்பீடும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளதாக ராகேஷ் குமார் கூறுகிறார்.
எத்தனை மரங்களை வெட்ட வேண்டியிருக்கும்?
பிகார் அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் நிலத்தில் இந்த ஆலையை நிறுவுவதற்கு ஏராளமான மரங்களை வெட்ட வேண்டியிருக்கும்.
இந்த பிர்பைன்டி நிலத்தில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்த்தியான மாம்பழத் தோட்டங்கள் உள்ளன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான மா மரங்கள் உள்ளன. இங்கு விளையும் மாம்பழங்கள் மிகவும் பிரபலமானவை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அனல் மின் நிலையம் அமைப்பதற்காக 10 லட்சம் மரங்கள் வெட்டப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன.
இந்த ஆலைக்காக 1 மில்லியன் மரங்கள் வெட்டப்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த பாகல்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) நவால் கிஷோர் சௌத்ரி, "ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இவ்வளவு மரங்களை வளர்க்க முடியாது. நிலம் கையகப்படுத்தும்போது, ஒவ்வொரு வீடும், நிலத்தில் உள்ள ஒவ்வொரு மரமும் கணக்கிடப்படும்" என்று கூறுகிறார்.
"எங்கள் தரவுகளின்படி, அங்கு சுமார் 10,500 மரங்கள் உள்ளன. இந்தக் கணக்கெடுப்பு 2013க்கு முன்பு செய்யப்பட்டது. தற்போதைய ஆண்டு 2025. இடைப்பட்ட காலத்தில் யாராவது தாங்களாகவே மரங்களை நட்டிருந்தால் அதைப் பற்றி எங்களால் ஏதும் கூற முடியாது." என்று நவால் கிஷோர் கூறினார்.
மாநில தொழில்துறை அமைச்சர் நிதிஷ் மிஸ்ராவும் இதே கருத்தையே எதிரொலிக்கிறார். "நிலம் கையகப்படுத்தும் நேரத்தில், அங்கு சுமார் 10,000 மரங்கள் இருந்தன. அவை அனைத்தும் வெட்டப்படாது. மின் உற்பத்தி நிலையப் பகுதியிலும் (300 ஏக்கர்) நிலக்கரி கையாளும் பகுதியிலும் ஒரு சில மரங்கள் மட்டுமே வெட்டப்படும்" என்று அவர் கூறுகிறார்.
"அதற்குப் பதிலாக, 'கட்டாய காடு வளர்ப்பின்' கீழ் 100 ஏக்கரில் ஒரு பசுமைப் பகுதி உருவாக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
மரங்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து சர்ச்சை நிலவுகிறது. அனல் மின் திட்டத்திற்கான ஏலம் தொடர்பான அரசாங்க ஆவணத்தை பிபிசி பெற்றுள்ளது. அதில், கையகப்படுத்தப்பட்ட சுமார் 400 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,00,000 மரங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசி குழு மாம்பழத் தோட்டங்களை அடைந்தபோது, மரங்களின் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கண்டது.
சுற்றுச்சூழல் பிரச்னை
மரங்களை அகற்றுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது குறித்த கேள்விக்கு, பாகல்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) நவால், "அது செயல்பாட்டில் உள்ளது. அனுமதி பெற்ற பின்னரே பணிகள் முறையாக செய்யப்படும்" என்றார்.
இந்த மரங்கள் வெட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளன.
'கிசான் சேத்னா ஏவம் உத்தன் சமிதி'-யின் தலைவர் ஷ்ரவன் குமார், இந்த விஷயத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு (கொல்கத்தா அமர்வு) எடுத்துச் சென்றுள்ளார்.
"அனல் மின் நிலையத்தை அமைப்பது சுமார் 10 லட்சம் மரங்களை வெட்டுவதற்கு வழிவகுக்கும், இது சுற்றுச்சூழல் ரீதியில் மிகவும் ஆபத்தானது என்பதால், அனல் மின் நிலையத்தை தடை செய்ய வேண்டும்" என்று அவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய அவர், "இந்தப் பகுதியிலிருந்து 20 கி.மீ சுற்றளவில் ஏற்கனவே இரண்டு அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன - இதுபோன்ற சூழ்நிலையில், புதிய அனல் மின் நிலையம் மாசுபாட்டை மேலும் அதிகரிக்கும்" என்றார்.
மரங்களை வெட்டுவது குறித்து பிகார் மாநில மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் அதானி பவர் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து பதிலைப் பெற பிபிசி பல முறை முயற்சித்தது, ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், மரங்களை வெட்டுவது தொடர்பாக தற்போது எந்த விண்ணப்பம் அல்லது கோரிக்கையும் தனக்கு வரவில்லை என்று பாகல்பூர் வனப் பிரிவு அதிகாரி ஸ்வேதா குமாரி கூறுகிறார்.
விவசாயிகள் கவலை
செப்டம்பர் 15-ஆம் தேதி பிரதமர் மோதி பூர்ணியாவுக்கு வந்தார். அங்கிருந்து, பிர்பைன்டியில் அதானி குழுமத்தின் அனல் மின் நிலையத்திற்கு காணொளி மூலம் அவர் அடிக்கல் நாட்டினார்.
இது உள்ளூர் விவசாயிகளின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஷேக் ஹமீத் தனது தோட்டத்தில் உள்ள மா மரங்களைக் காட்டி, "எங்கள் நிலத்தில் 125 மா மரங்கள், 45 தேக்கு மரங்கள், 10-15 நாவல் மரங்கள் மற்றும் சுமார் 10 பிஜு மா மரங்கள் உள்ளன" என்று கூறுகிறார்.
முகமது அஸ்மத் சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் மா மரங்களை நட்டு வைத்துள்ளார்.
"அரசாங்கம் ஒரு தொழிற்சாலையை அமைக்கப் போகிறது, அதேசமயம் என்னுடைய வாழ்வாதாரம் ஏற்கனவே இந்த நிலத்தில் உள்ளது. இது ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வருமானம் அளிக்கிறது. மரங்கள் இல்லையென்றால், நான் எங்காவது ஒரு தொழிலாளியாக வேலை செய்ய வேண்டியிருக்கும். நாங்கள் இங்கு இவ்வளவு மரங்களை வளர்த்திருக்கிறோம், ஆனால் அரசாங்கம் அவற்றை எங்களிடமிருந்து பறிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
வீடுகளை இடிக்க நோட்டீஸ்
அனல் மின் நிலையத்திற்காக மரங்கள் வெட்டப்படுவது மட்டுமல்லாமல், பல வீடுகளையும் இடிக்க வேண்டியிருக்கும், ஏனெனில் இவையும் திட்டத்திற்கு இடையூறாக உள்ளன.
பிர்பைன்டியில் உள்ள கமல்பூர் கிராமத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 50 வீடுகளுக்கு 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனது வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்ற பயம் அனில் யாதவின் கண்களில் தெளிவாகத் தெரிகிறது. ஆறு சகோதரர்களும் 50 உறுப்பினர்களும் கொண்ட இந்தக் குடும்பம் 15 நாட்களுக்குள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
"அரசாங்கம் நிலத்திற்கு தசமத்திற்கு (Decimal) ரூ.40,000 (1 தசமம் = ஒரு ஏக்கரில் 1/100 பங்கு) இழப்பீடு வழங்குகிறது, அதே நேரத்தில் வெளியே நிலம் வாங்குவதற்கான செலவு தசமத்திற்கு ரூ.2 லட்சம் ஆகும். அரசின் இழப்பீட்டுத் தொகையை வைத்து வேறெங்கும் வீடு கட்ட முடியாது" என்று அவர் கூறுகிறார்.
அனிலின் அண்டை வீட்டுக்காரரான ரீனா குமாரிக்கும் இதே பயம் உள்ளது. "அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை மிக குறைவாக உள்ளது. எங்கள் குழந்தைகளுடன் நாங்கள் எங்கே போவோம்?" என்று ரீனா கூறுகிறார்.
தங்களது வீடுகளை இழப்பது குறித்த அச்சம் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு அதிகரிக்கிறது.
"இது என்ன மாதிரியான வளர்ச்சி? இது எங்களுக்கு அநீதி. எங்கள் சொந்த வீடுகளில் இருந்து நாங்கள் வெளியேற்றப்படுகிறோம். அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு வந்தனர், ரிப்பன் வெட்டி வெளியேறினர். வீடற்றவர்களாக மாற்றப்படுபவர்களிடம் பேச யாரும் வரவில்லை" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
"எந்தச் சூழ்நிலையிலும் எங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாட்டோம். அரசாங்கம் முதலில் எங்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும், அதைப் பற்றி யாரும் பேசவில்லை" என்று அவர் கூறுகிறார்.
ரீனாவின் இந்தக் கேள்வியை பாகல்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) நவால் முன் வைத்தோம்.
அதற்கு பதிலளித்த அவர், "யாருடைய வீடுகளை எல்லாம் இடிக்க வேண்டிய தேவை உள்ளதோ, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பொதுமக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறோம். அவர்கள் வேறு எங்காவது வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். எந்த அரசாங்கத் திட்டத்தின் கீழ் அவர்கள் பயனடைய முடியும் என்பதை நாம் பார்க்கலாம்" என்றார்.
ஆனால், வளர்ச்சி என்பது தங்கள் வீடுகளை அழித்துவிடும் என்றால், இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என்று பிர்பைன்டி மக்கள் கூறுகிறார்கள்.
அரசாங்கத்திற்கும் நிறுவனத்திற்கும் இது ஒரு திட்டம், ஆனால் இங்குள்ள குடும்பங்களுக்கு அவர்களது வாழ்க்கை தொடர்பான ஒரு மிகப்பெரிய கேள்வியாக மாறிவிட்டது. தங்கள் வீட்டைக் காப்பாற்றுவதா அல்லது வேறு எங்காவது புதிதாக வாழ்வைத் தொடங்குவதா? என்பதே அந்த கேள்வி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு