ஆர்சிபி முதலிடம்: கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்று மும்பையை வெளியேற்றியது எப்படி?

RCB vs MI, Krunal Pandya

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 39/3 என்ற நிலையில் களமிறங்கிய குருனால் பாண்டியா தன் அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கினார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 54வது போட்டியில் இன்று (மே 10) மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ராய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.

இந்த சீசன் ஆர்சிபி அணியின் 'ஹோம்' ஆட்டங்கள் பெங்களூருவில் மட்டுமல்லாமல், ராய்ப்பூரிலும் ஆடப்படுகின்றன. அந்த வகையில் ராய்ப்பூரில் இந்த சீசன் நடக்கும் முதல் போட்டி இது.

இந்த சீசன் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அவர்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை அவர்கள் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், சூர்யகுமார் யாதவே கேப்டனாக செயல்படுகிறார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா அரைசதம் அடித்தார். ஆர்சிபி பௌலர்களில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசிப் பந்தில் இலக்கை எட்டியது. குருனால் பாண்டியா 46 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். மும்பை இந்தியன்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது ஆர்சிபி. 6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தன.

புவனேஷ்வர் குமார் அபார பந்துவீச்சு

மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பவர்பிளேவில் பெரும் சவாலாக விளங்கினார் புவனேஷ்வர் குமார். அவருடைய பந்துவீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது மும்பை இந்தியன்ஸ்.

முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரியான் ரிக்கில்டன் விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். 2 ரன்கள் எடுத்திருந்த ரிக்கில்டன், மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த ரஜத் பட்டிதாரிடம் கேட்ச் ஆனார்.

முதல் ஓவரில் விக்கெட் வீழ்ந்திருந்தாலும், ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் அதிரடி காட்டினார் ரோஹித் ஷர்மா. அந்த ஓவரில் அவர் 1 பவுண்டரியும், 2 சிக்ஸர்களும் அடித்தார். அதனால் அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தன. இருந்தாலும் அடுத்த ஓவரிலேயே வந்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் புவனேஷ்வர் குமார்.

ஆட்டத்தின் 3வது ஓவரில் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் என இரண்டு பெரிய பேட்டர்களை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார் அவர். 5வது பந்தில் புவனேஷ்வர் குமார் 'நக்கில் பால்' வீச, ரோஹித் ஷர்மா பேட்டை நீட்ட, பந்து எட்ஜாகி கீப்பர் ஜித்தேஷ் ஷர்மாவின் கிளவுஸிற்குள் நுழைந்தது. அடுத்த பந்தோ அவுட்ஸ்விங்கர் - சூர்யகுமார் யாதவுக்கும் எட்ஜ் - ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச். 28/3 என்ற நிலையில் தடுமாறியது மும்பை இந்தியன்ஸ்.

ரியான் ரிக்கில்டன், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என 4 முக்கிய மும்பை இந்தியன்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரியான் ரிக்கில்டன், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என 4 முக்கிய மும்பை இந்தியன்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்

மும்பையைக் காப்பாற்றிய நமன் தீர் - திலக் கூட்டணி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நமன் தீர் - திலக் வர்மா இருவரும் நிதானமாக விளையாடி மும்பையை சரிவிலிருந்து மீட்கத் தொடங்கினார்கள். ராஷிக் சலாம் வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் திலக் வர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் சுயாஷ் ஷர்மா. அதைப் பயன்படுத்திக்கொண்ட திலக் வர்மா ஒரு பெரிய இன்னிங்ஸைக் கட்டமைத்தார்.

இருவரும் அவர்களுக்கு ஏற்ற பந்துவீச்சாளர்களையும், பந்துகளையும் தேர்ந்தெடுத்து ஆடினார்கள். ராய்ப்பூர் மைதான பவுண்டரி எல்லை சற்று பெரியது என்பதால் மிகவும் கவனமாகவும் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து விளையாடினார்கள்.

இந்த ஜோடி 57 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தது. 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நமன் திர், ராஷிக் சலாம் பந்துவீச்சில் போல்டானார். அவர் அதிரடியாக ஆடத் தொடங்கியிருந்த நிலையில் ராஷிக் வீசிய 'ஸ்லோயர் பாலை' சரியாகக் கணிக்காமல் அவுட் ஆனார்.

அடுத்து வந்த திலக் வர்மா 10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ரொமாரியோ ஷெபர்ட் பந்துவீச்சில் வெளியேறினார்.

சிறப்பாக விளையாடிய திலக் வர்மா இந்த சீசனில் தன்னுடைய 2வது 50+ ஸ்கோரை (1 அரைசதம், 1 சதம்) எடுத்தார். 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த அவர், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் போல்டானார்.

டெத் ஓவர்களில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சிக்கனமாகப் பந்துவீசியதோடு விக்கெட்டுகளும் வீழ்த்தியதால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. சிறப்பாகப் பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் திலக் வர்மா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் திலக் வர்மா

அசத்திய மும்பை வேகப்பந்துவீச்சாளர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்தப் போட்டியின் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தீபக் சஹர் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார் விராட் கோலி. தான் சந்தித்த முதல் பந்திலேயே மிட் ஆஃப் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. அவர் எல்எஸ்ஜி அணிக்கெதிரான முந்தைய போட்டியில் 2 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆகியிருந்தார்.

தன்னுடைய அடுத்த ஓவரில் தேவ்தத் படிக்கல் விக்கெட்டையும் கைப்பற்றினார் சஹர். 11 பந்துகள் சந்தித்த படிக்கல் 12 ரன்கள் எடுத்தார். 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கார்பின் பாஷ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்தடுத்த விக்கெட்டுகளால் தடுமாறிய ஆர்சிபி பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது.

4வது விக்கெட்டுக்கு ஜேக்கப் பெதெல் மற்றும் குருனால் பாண்டியா இருவரும் ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். பெதெல் நிதானமாக ஸ்டிரைக் ரொடேட் செய்து கொடுக்க, சீரான இடைவெளிகளில் பவுண்டரிகள் அடித்தார் குருனால் பாண்டியா. இந்த ஜோடி 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தது. 27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பெதெல் கார்பின் பாஷ் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஜியேஷ் ஷர்மா (12 பந்துகளில் 18 ரன்கள்), டிம் டேவிட் (முதல் பந்தில் டக் அவுட்) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார் கார்பின் பாஷ். இதனால் 131/6 என்ற நிலைக்கு ஆர்சிபி சென்றது. அதனால், ஆட்டத்தில் பரபரப்பு கூடியது.

26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார் கார்பின் பாஷ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார் கார்பின் பாஷ்

குருனால் பாண்டியாவின் போராட்டம்

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருக்க, குருனால் பாண்டியா நிலைத்து நின்று விளையாடி ஆர்சிபி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 32 பந்துகளில் அவர் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அவர் ஒருகட்டத்தில் கடுமையான தசைபிடிப்பால் அவதிப்பட்டார். அதனால், அவரால் ஓட முடியவில்லை.

ஆர்சிபி வெற்றி பெற 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது 18வது ஓவரை அல்லா கசன்ஃபர் வீசினார். இரண்டாவது பந்தை குருனால் பாண்டியா தூக்கி அடிக்க, அதை பவுண்டரி எல்லையில் பிடித்து, திலக் வர்மாவிடம் வீசினார் நமன் தீர். ஆனால், நமன் தீர் பந்தை தூக்கிப் போடுவதற்கு முன்பாகவே எல்லைக்கோட்டை மிதித்துவிட்டார் என்று நினைத்துப் பந்தைப் பிடிக்காமல் விட்டார் திலக். அதனால் ஒரு கேட்ச் வாய்ப்பு கைநழுவியது. கசன்ஃபர் ஓவரை முழுமையாக சந்திக்கவேண்டும் என்பதால், அந்தப் பந்தில் குருனால் பாண்டியா ரன் ஓடவில்லை.

இருந்தாலும், மூன்றாவது பந்திலும் ஐந்தாவது பந்திலும் பெரிய சிக்ஸர்கள் அடித்தார் அவர். கடைசிப் பந்தையும் அவர் சிக்ஸர் அடிக்க முயன்று தூக்கி அடித்தார். ஆனால், வெகுதூரம் ஓடிச் சென்று கேட்ச் செய்தார் திலக் வர்மா. 46 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 73 ரன்கள் எடுத்தார் குருனால் பாண்டியா.

கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா மிகச் சிறப்பாகப் பந்துவீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால், கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது.

4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 73 ரன்கள் அடித்தார் குருனால் பாண்டியா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 73 ரன்கள் அடித்தார் குருனால் பாண்டியா

டிராமாக்கள் நிறைந்த கடைசி ஓவர்

கடைசி ஓவரை வீசிய ராஜ் பவா, எடுத்ததும் வைட் வீசினார். மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் ரொமாரியோ ஷெபர்ட் ரன் எதுவும் எடுக்கவில்லை. ஆனால், அந்தப் பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதோடு ஆர்சிபி அணிக்கு ஃப்ரீ ஹிட்டும் கிடைத்தது. மூன்றாவது முறையாக வீசப்பட்ட அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது.

இரண்டாவது பந்தை பவா ஆஃப் சைட் வெளியே வீச, அதை ராஷிக் தார் அடிக்கவில்லை. இருந்தாலும் 'பை' மூலம் 1 ரன் எடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல், ஆஃப் சைட் நன்கு வெளியே சென்ற அந்தப் பந்தை வைட் என்றார் நடுவர். மீண்டும் இரண்டாவது பந்தை வீசிய அவர் இம்முறை ஷெபர்டை ஏமாற்றி டாட் பால் ஆக்கினார்.

4 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மூன்றாவது பந்தில் ரொமாரியோ ஷெபர்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் ராஜ் பவா. 11 பந்துகள் சந்தித்த ஷெபர்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஆர்சிபி வெற்றிக்கு 3 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கினார் புவனேஷ்வர் குமார். அந்தப் பந்தை ராஜ் பவா வைட் ஆக வீச, 3 பந்துகளில் 9 தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஃபுல் லென்த்தில் வெளியே வீசப்பட்ட பந்தை கவர் திசையில் சிக்ஸராக்கினார் புவனேஷ்வர் குமார்.

ஐந்தாவது பந்தில் சிங்கிள் வர, கடைசிப் பந்தில் ஆர்சிபி அணிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்தப் பந்தை நேராக பௌலரின் கைக்கே அடித்தார் ராஷிக் தார். ஆனால், பவா அந்தப் பந்தைப் பிடிக்காமல் விட்டுவிட 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அதனால் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியின் முடிவின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தன.

டாஸில் கேப்டன்கள் சொன்னது என்ன?

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். காரணம் வெளிப்படையானது, ஆடுகளம் கடினமாகவும் நன்றாகவும் இருக்கிறது. அவர்களை எவ்வளவு கட்டுப்படுத்த முடியுமோ அந்தளவு கட்டுப்படுத்திவிட்டு, பிறகு இலக்கைத் துரத்த முயற்சிப்போம். இது ஒரு புதிய மைதானம், மைதானத்தின் வெளிப்பகுதி (outfield) சிறப்பாக உள்ளது, எனவே அனைவரும் இந்தப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். நாங்கள் ஒரு சில போட்டிகளில் தோற்றிருக்கிறோம், ஆனால் கடந்த காலத்தைப் பற்றி நினைக்காமல் தற்போதைய தருணத்தில் இருப்பது மற்றும் நமது பலத்தின்படி விளையாடுவது முக்கியம். எனவே மற்ற அணிகளை விட எங்களைப் பற்றித்தான் நாங்கள் அதிகம் கவனம் செலுத்துவோம்." என்று கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தப் போட்டியில் வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். பெரிய மைதானம், களிமண் ஆடுகளம். மற்றும் ஸ்கோர் போர்டில் ரன்களைக் குவிப்பது எப்போதும் எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். நாங்கள் அதே அணியுடன் தான் விளையாடுகிறோம். பந்துவீச்சு குறித்து நாங்கள் எப்போதும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். பந்துவீச்சாளர்களுக்கு இது சவாலான விஷயம் தான். நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களை மேம்படுத்திக்கொள்ளவும், சிறப்பாகச் செயல்படவும் முயற்சி செய்து வருகிறோம்." என்று கூறினார்.

பிளேயிங் லெவனில் யார்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தப் போட்டிக்கான ஆர்சிபி அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: ஜேக்கப் பெதெல், விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா, ராஷிக் தார்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: மங்கேஷ் யாதவ், ஜோர்டான் காக்ஸ், வெங்கடேஷ் ஐயர், ஸ்வப்னில் சிங், தேவ்தத் படிக்கல்.

மும்பை இந்தியன்ஸ்

இந்தப் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கில்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா, நமன் திர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, வில் ஜேக்ஸ், ராஜ் பவா, கார்பின் பாஷ், தீபக் சஹர், அல்லா கசன்ஃபர், ஜஸ்ப்ரித் பும்ரா.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: டிரென்ட் போல்ட், ரகு ஷர்மா, மயாங்க் ராவத், ராபின் மின்ஸ், ஷார்துல் தாக்கூர்.