ஒரே மகள் தவிர ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துவிட்டு பேரனைத் தேடும் 'குமரன் ஏழுமுகம்'

- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஒரு மகளை தவிர, ஏனைய அனைவரையும் மண்ணுக்கு பலிகொடுத்து, தனிமனிதனாக நிலைகுலைந்திருக்கும் குமரன் ஏழுமுகத்தின் நிலை எழுத்துகளால் விவரிக்க முடியாதது.
இலங்கையில் கண்டி மாவட்டத்தின் நாவலபிட்டி நகருக்கு சொந்தமான பரகல்ல பகுதியில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட மண்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள பாடசாலையொன்றில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமிலேயே நாம் குமரன் ஏழுமுகத்தை சந்தித்தோம்.
யாரோ ஒருவரின் வருகையை எதிர்பார்த்திருக்கும் வகையில் அமர்ந்திருந்த குமரன் ஏழுமுகம், யார் என்று நாம் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம்.
அப்போது அவர் குறித்து அவர்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை தந்தன.
குடும்பத்தில் ஒரு மகளை தவிர, ஏனைய அனைவரையும் மண்ணுக்கு பலி கொடுத்து, தனியாக அந்த முகாமில் அமர்ந்திருந்தார் குமரன் ஏழுமுகம்.
இரட்டை குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்த நிறைமாத கர்ப்பணியான அவரது மகள், மருமகன், மனைவி, பாட்டி, பேரன் என அனைவரையும் இயற்கைக்கு பலிகொடுத்துள்ளார்.
பேரன் தவிர்ந்த ஏனைய அனைவரது உடல்களும் பிரதேச மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டன. என்ற போதிலும், பேரனை தேடும் குமரன் ஏழுமுகத்தின் தேடல் இன்றும் தொடர்கின்றது.
பாரிய மலைத் தொடர் ஒன்று. இந்த மலைத் தொடருக்கு கீழ் அமைந்திருந்த லயின் குடியிருப்பிலுள்ள வீடொன்றே குமரன் ஏழமுகத்தின் வீடும் அமைந்திருந்துள்ளது.
பிரதான வீதியிலிருந்து சுமார் 10 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த லயின் குடியிருப்பு அமைந்திருந்தது.

இந்த லயின் குடியிருப்பில் 8 வீடுகள் இருந்த நிலையில், இன்று அந்த இடத்தில் வெறும் பாரிய கற்களே காணப்படுகின்றன.
மலை உச்சியிலிருந்து வந்த பாரிய கற்கள், லயின் குடியிருப்பின் மீது வீழ்ந்துள்ளன.
இந்த மண்சரிவு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இன்னும் 5 பேரை தேடும் பணி பிரதேச மக்களினால் தொடர்கின்றது.
இவ்வாறு தேடப்பட்டு வரும் ஐவரில், குமரன் ஏழுமுகத்தின் பேரனும் ஒருவர்.
தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள முகாமிலிருந்து நாம் அவரை மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அழைத்து சென்ற போது, இடையில் ஒரு புதைகுழியை பார்த்தோம்.
அந்த இடத்தில் சற்று நின்ற ஏழுமுகம், அந்த புதைக்குழி பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
''என்னுடைய சொந்தங்களை இங்கு தான் புதைத்திருக்கின்றேன்'' என சொல்லி கண்ணீர் விட்டார்.
அதனைத் தொடர்ந்து, மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சென்று, தனது வீடு அமைந்திருந்த இடத்தில் அவர் தனது பேரனை தேடிக் கொண்டிருந்தார்.
எம்முடன் உரையாடிய தருணங்களில், அவரின் கண்கள் பேரனையும் தேடும் வகையில் இருந்ததை அவருடன் உரையாடிய எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அன்று என்ன நடந்தது என்பதை இதன் போதே அவர் எம்மிடம் கூறினார்.
''மழை வருதுனு சொல்லி மனைவி கதைச்சிட்டு இருந்தாங்க. வெள்ளம் வருது வெள்ளம் வருதுனு சொல்லிட்டே இருந்துச்சு. 6.30 மணி போல தான் பேசிக்கிட்டு இருந்தேன். நாங்கள் எங்க போயிட்டு தங்குவது? எங்க போயிட்டு இருப்பது? என்று சொல்லி தெரியலனு சொன்னாங்க. 7 மணி போல போன் ஒன்றும் வேலை செய்யவில்லை. ஒன்றுமே இல்லை. என்னுடைய இன்னுமொரு மகள் கண்டில இருக்காங்க. மகளுடைய கூட்டாளி (தோழி) சொல்லி தான் தெரியும். வீடு எல்லாம் உடைஞ்சு. ஒன்னுமே இல்லை. ஒருத்தருமே இல்லை என்று அவங்க சொல்லியிருக்காங்க. கண்டிக்கு வந்து, கண்டில இருந்து கம்பளைக்கு நடந்தே வந்தேன். உடைஞ்ச ரோட்ல நடந்து வந்தேன்.'' என தான் எதிர்கொண்ட சம்பவத்தை குமரன் ஏழுமுகம் பிபிசி தமிழிடம் கூறினார்.
கடும் மழை... வீதிகள் தடைப்பட்டிருந்த தருணத்தில், குமரன் ஏழுமுகம், கண்டியிலிருந்து கம்பளை நகருக்கு நடந்தே சென்று, அங்கிருந்து பரகல்ல தோட்டத்திற்கு கடும் மழைக்கு மத்தியில் நடந்தே சென்றுள்ளார்.
கிட்டத்திட்ட 40 கிலோமீட்டர் நடந்து சென்ற போது, பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அவரின் சொந்தங்களின் உடல்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

''எல்லாமே ரெடி பண்ணி தேவாலயத்தில் வைத்திருந்தார்கள். அப்புறம் ஒவ்வொருத்தராக இந்த இடத்தில் கொண்டு வந்து கொடுத்தார்கள். மண்டை எல்லாம் நொறுங்கி இருந்தது. ஒன்னுமே முழுசா இல்லை. எல்லாமே நொறுங்கியிருந்தது. மகளை பார்த்தால் நார்மலாக இருந்தது. ஆனால் தலை எல்லாம் நொருங்கி இருந்தது. வேறு யாரும் இல்லையே...'' என மனம் நொந்து அன்றைய தினம் தான் எதிர்கொண்ட அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டார் குமரன் ஏழுமுகம்.
எதிர்காலம் குறித்தும் குமரன் ஏழுமுகம் எம்மிடம் கருத்து வெளியிட்டார்.
''மற்ற பிள்ளை இருக்கின்றது. அந்த பிள்ளையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இருக்கனும். வீடு ஒன்று தேவை. அதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் அந்த பிள்ளை கல்யாணம் கட்டவில்லை. எல்லாரையும் இழந்து துக்கத்தோடு தான் இருக்கின்றேன். இனி பார்க்க வைக்க யாருமே இல்லை. ஒரே பிள்ளை தான் இருக்கு. அந்த பிள்ளையை பார்க்க வேண்டும். ரொம்ப கவலையோடு தான் இருக்கின்றேன்.'' என குமரன் ஏழுமுகம் தனது எதிர்காலத்தை எண்ணி கண்ணீர் விட்டு அழுதார்.
எஞ்சியுள்ள ஒரு பெண் பிள்ளையின் எதிர்காலமே தனது எதிர்கால எண்ணம் என்ற ஒரே ஒரு எதிர்கால சிந்தனையுடன் இனிவரும் வாழ்நாட்களை கடக்கும் எதிர்பார்ப்புடன் குமரன் ஏழுமுகத்தின் வாழ்க்கை பயணம் தொடர்கின்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












