You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேசம்: ஷேக் ஹசீனா ராஜினாமா - இந்தியாவுக்குச் செல்ல தீர்மானித்தது ஏன்?
வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்பதை அங்குள்ள பிபிசி செய்தியாளர் உறுதி செய்துள்ளார்.
நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாவதை உணர்ந்த அவர், தனது சகோதரியுடன் வங்கதேசத்தை விட்டே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் உடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவை நோக்கிச் செல்வதாக பிபிசி பங்களா செய்தி வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தையே உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.
சில வீடியோக்களில், பிரதமர் இல்லத்தில் இருந்து நாற்காலிகள், சோஃபா போன்றவற்றை போராட்டக்காரர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் உள்ளன.
ஷேக் ஹசீனா இந்தியா வந்தது ஏன்?
வங்கதேசத்தில் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பாதுகாப்பு தேடி இந்தியா செல்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே, வங்கதேசத்திற்கு இந்தியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே பலன் பெற்றுள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசம் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் நட்பான அரசு அமைவது இந்தியாவுக்கு பலன் தரும் ஒன்று.
ஷேக் ஹசீனா தனது ஆட்சிக் காலத்தில், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராளிக் குழுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதிகார மட்டத்தில் நட்பை பலப்படுத்தினார். வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து பொருட்களை வங்கதேசம் வழியாக எடுத்துச் செல்ல அவர் அனுமதி கொடுத்தார்.
ஷேக் ஹசீனா 1996-ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக தேர்வான போதே இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா - வங்கதேசம் இடையே நெருக்கமான உறவு நிலவ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.
2022-ஆம் அண்டு இந்தியாவுக்கு வருகை தந்த போது, இந்தியா, இந்திய அரசு, இந்திய மக்கள் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றியதை அவர் நினைவுகூர்ந்தார்.
இந்தியாவுடன் ஷேக் ஹசீனாவுக்கு இருந்த நெருக்கமான உறவு, அவரை இந்தியா ஆதரித்தது ஆகியவை வங்கதேச எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தியா, வங்கதேச மக்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கக் கூடாது என்பது அவர்களது நிலைப்பாடு.
இடைக்கால அரசு - ராணுவ தளபதி
வங்கதேசத்தில் அசாரண சூழல் நிலவும் நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். குடியரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தில் அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு யார் தலைமையேற்பார் என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.
வங்கதேசத்தின் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்ய ராணுவ தளபதி உறுதியளித்தார். அங்கே, கடந்த சில வாரங்களாக நீடிக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)