You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வலி ஏன் ஏற்படுகிறது? வலி நிவாரணி எடுத்துக்கொள்வது ஆபத்தா?
- எழுதியவர், பிரதிபா லட்சுமி
- பதவி, மருத்துவர்
வலி என்பது நம் உடலில் ஏதோ ஒன்று அசாதாரணமாக நடக்கிறது என உடல் தெரிவிக்கும் எச்சரிக்கை. அதை அலட்சியப் படுத்தினால், பிரச்னை மேலும் மோசமாகும். சில சமயங்களில் மரணத்திற்குகூட வழிவகுக்கும்.
எனவே வலியைக் குறைப்பது மட்டும் போதாது. அதற்கான மூலக்காரணத்தைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக, கையில் முள் குத்தி வலி ஏற்படும் போது நீங்கள் வலி மாத்திரை எடுத்துக் கொண்டால் வலியை உணராமல் இருக்கலாம். ஆனால் முள்ளால் தொற்று ஏற்படலாம். எனவே முதலில் முள்ளை அகற்றுவது அவசியம்.
நாம் அதிகம் கேள்விப்பட்ட குடல்வால் அழற்சியை எடுத்துக் கொள்வோம். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறும். தொற்று ஏற்பட்டால் தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவசியம் இருப்பின் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.
வலி கண்டறியப்படாவிட்டால் என்ன நடக்கும்?
நாள்பட்ட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர், தூக்கத்தில் மாரடைப்பால் உயிரிழப்பதைப் பற்றி கேள்விப்படுகிறோம். இதற்கு நோய் மற்றும் வலி அறியாமைதான் காரணம். அதாவது தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்பதை அறிய முடியாதவர்களால் அதற்கான சிகிச்சை பெற முடியாது.
வலி கண்டறியப்பட்டால், மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் சிகிச்சை எடுத்துக்கொள்ளப்பட்டால் உயிரைப் பாதுகாக்கலாம்.
சில நாட்களுக்கு முன் தங்களுடைய 10 வயது சிறுமியுடன் ஒரு பெற்றோர் என்னை சந்திக்க வந்தனர். அந்தச் சிறுமி கிரிக்கெட் பயிற்சி எடுத்துவருகிறார். அவருக்கு விளையாட்டின் போது கையில் திடீரென வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது. அந்த வலி தினமும் தொடர்ந்ததால் அவரால் கையை முழுமையாக நீட்ட முடியவில்லை.
எலும்பு இடப்பெயர்வு இருக்கலாம் என்று சந்தேகித்து, உடனடியாக எலும்பியல் நிபுணரிடம் செல்லுமாறு அறிவுறுத்தினேன். இதை அலட்சியப்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் குறைபாடுடன் வாழ நேரிடும். குறிப்பாக எலும்புகளில் வலி ஏற்படும் போது, ஓய்வு, அந்தப் பகுதியை அசைக்காமல் வைத்திருத்தல் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை செய்ய வேண்டும்.
சிலர் வலியை தாங்கிக்கொள்வது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை பெருமைக்குரிய விஷயமாக கருதக்கூடாது. அது உடல் வலி, மனவலி, சமூக வலி என எந்த வலியாக இருந்தாலும் அதற்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து களைய வேண்டும். இல்லாவிட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
எப்போது வெந்நீர், ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்?
வயதாகும் போது குளிர்காலங்களில் வலியும் மூட்டு வலியும் ஏற்படுவது இயல்பானதே. இந்த வலி காரணமாக தினசரி வேலைகளைச் செய்ய முடியாத போது சிலர் அதற்காக வலி நிவாரணி மருந்து எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில நேரங்களில் சிறுநீரகப் பிரச்னைகள் மற்றும் வயிற்று புண் போன்ற பல பிரச்னைகள் வருகின்றன.
எனவே மருந்து பயன்படுத்த வேண்டிய அளவிற்கு வலி தீவிரமாக இல்லாத போது ஐஸ் அல்லது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
வலி ஏற்படும் போது சிலர் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பார்கள், சிலர் ஐஸ் ஒத்தடம் கொடுப்பார்கள்.
இதில் எது சிறந்தது? இரண்டுமே ஓரளவுக்கு பயன்கொடுக்கக் கூடியதே.
வெந்நீர் ஒத்தடம் கொடுக்கும் போது அந்த இடத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, தசைப்பிடிப்பு நீங்கி வலி குறையும். ஐஸ் ஒத்தடம் கொடுக்கும் போது அந்த இடத்தில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் வீக்கம் குறைந்து வலி நீங்கும்.
மூட்டுகள் வீங்கி சிவப்பாக இருக்கும் போது, ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. ஐஸ் வீக்கத்தைக் குறைத்து, அசௌகரியம் அதிகரிக்காமல் தடுக்கும். ஆர்த்தரைட்டிஸின் ஆரம்ப நாட்களில் அல்லது வலி கடுமையாக இருக்கும் போது ஐஸ் ஒத்தடம் கொடுப்பது சிறந்தது.
மற்ற சந்தர்ப்பங்களில் அதாவது, தசைகள் இறுக்கமாக இருக்கும் போது, காலை நேர வலிகள், நாள்பட்ட வலிகள் போன்ற வீக்கமில்லாத வலிகள் இருந்தால் வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
அதே நேரம் சூடு மிதமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வெந்நீர் ஒத்தடம் வலியைக் குறைத்து மூட்டுகளை எளிதாக நகரச் செய்யும். அதே போல பாதங்களில் வலி அதிகமாக இருக்கும் போது, தினமும் சிறிது நேரம் வெந்நீரில் கால்களை நனைத்தால் வலி நீங்கும்.
பொதுவாக பலரும் பாதங்களில் வலியை உணர்வார்கள். இதைக் குறைக்க, மென்மையான காலணிகளை அணிவது நல்லது. வெளியில் செல்லும் போது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் போதும் மென்மையான காலணிகளை அணிய வேண்டும். அதிக உடல் எடை இருந்தால், அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதே போல கால்களுக்கான சில உடற்பயிற்சிகள் செய்யும் போது, சுற்றியுள்ள தசைகள் வலுப்பெறுவதோடு, வலியும் ஓரளவு குறையும்.
வலிக்கான சிகிச்சைகள்
வலி நிவாரணி மற்றும் ஓய்வு மூலம் தற்காலிக நிவாரணம் பெறலாம்.
நீண்ட கால நிவாரணத்திற்கு பிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
வலி தொடர்ந்தால் அவசியமிருப்பின் அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது.
நீண்ட கால பிரச்னைகளை தவிர்க்க வலியை அலட்சியப்படுத்தக் கூடாது. மேலும், தினமும் உடற்பயிற்சி செய்து, போதுமான அளவு வைட்டமின் டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிரச்னை தீவிரமடைவது போல தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
(இந்தக் கட்டுரையாளர் ஒரு மருத்துவர்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்