You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை
- எழுதியவர், பால் கிர்பி மற்றும் ராபர்ட் கிரீனால்
- பதவி, பிபிசி செய்திகளுக்காக
அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் ஜெர்மனியின் ஸ்டுட்ஹாஃப் நகரில் இருந்த நாஜி வதை முகாமில் தனது பதின்ம வயதில் 1943 முதல் 1945 வரை தட்டச்சராக பணிபுரிந்துள்ளார். நாஜி குற்றங்களுக்காக கடந்த சில தசாப்தங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் பெண் இவர்தான். இவருக்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர் உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. சிவில் பணியாளராக இருந்த போதிலும் வதை முகாம்களில் என்ன நடக்கிறது என்பதை முற்றிலும் அறிந்தவராகவே அவர் இருந்தார் என்பதை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் நிலவிய மோசமான சூழலால் யூதர்கள், யூதர் அல்லாத போலந்து குடிமக்கள், போரில் பிடிபட்ட சோவியத் வீரர்கள் உள்ளிட்ட 65 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 10,505 பேர் கொல்லப்பட உதவியாகவும், மேலும் 5 பேரின் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகவும் இம்கார்ட் ஃபியூஷ்னர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன. அப்போது அவர் 18 அல்லது 19 வயது மட்டுமே நிரம்பியவர் என்பதால் சிறப்பு சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். தற்போதைய போலந்தின் டான்ஸ்க் நகருக்கு அருகே ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் அடைபட்டிருந்த ஆயிரக் கணக்கானோரை கொலை செய்ய 1945ம் ஆண்டு முதல் விஷவாயு மூலம் கொல்வது உள்பட பல முறைகள் பின்பற்றப்பட்டன.
வடக்கு ஜெர்மனியில் உள்ள இட்ஸெஹோ நகர நீதிமன்றம், வதை முகாமில் இருந்து உயிருடன் மீண்டவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தது. அவர்களில் சிலர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்துவிட்டனர். 2021-ம் ஆண்டு செப்டம்பரில் விசாரணை தொடங்கிய போது, ஓய்வுக்கால இல்லத்தில் இருந்து தப்பிவிட்ட இம்கார்ட் ஃபியூஷ்னரை ஹம்பர்க் நகர தெருவில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் நாஜி கொலைக் கருவியாக செயல்பட்டதாக 1955-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அதன் கமாண்டர் பால் வெர்னர் ஹோப்பே 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். நாஜி வதை முகாமில் காவலராக பணிபுரிந்ததே அங்கு நடந்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்தது தான் என்று ஜான் டெம்ஜான்ஜூக் வழக்கில் தீர்ப்பு வெளியானதும், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அதுபோன்ற ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அந்த தீர்ப்புதான் சிவில் பணியாளரான இம்கார்ட் ஃபியூஷ்னரை விசாரணைக் கூண்டில் ஏற்றியது. வதை முகாம் கமாண்டரிடம் நேரடியாக பணியாற்றிய அவர், வதை முகாமில் அடைபட்டிருந்த கைதிகள் மீதான அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்புடையவராக இருந்தார்.
விசாரணையின் போது, அவர் தமது மௌனத்தைக் கலைக்கவே 40 நாட்களாயின. ஒரு நாள் திடீரெனப் பேசிய அவர், "நடந்த விஷயங்களுக்காக என்னை மன்னியுங்கள்" என்று கூறினார். "ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் அந்த நேரத்தில் இருந்தமைக்காக வருந்துகிறேன் என்று மட்டுமே இப்போதைக்கு என்னால் கூற முடியும்" என்றார் இம்கார்ட் ஃபியூஷ்னர். ஹோப்பெயின் அலுவலகத்தில் பணிபுரிந்த பல தட்டச்சர்களுள் அவரும் ஒருவர் என்பதால், அவருக்கு என்ன தெரியும் என்பது குறித்த சந்தேகங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு இம்கார்ட் ஃபியூஷ்னரை விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஹிட்லரின் எஸ்.எஸ். படைப் பிரிவுத் தலைவராக பணிபுரிந்த ஹெய்ன்ஸ் ஃபுர்ஷிஸ்டம் என்பரை அவர் மணம் புரிந்தார். இருவரும் ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில்தான் சந்தித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. வடக்கு ஜெர்மனியில் உள்ள சிறிய நகரில் அரசு அலுவலராக அவர் பணிபுரிந்தார். அவரது கணவர் 1972-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
வதைமுகாமில் இருந்து உயிருடன் மீண்ட ஜோசஃப் சாலமோனோவிச், நீதிமன்றத்தில் விசாரணையின் போது நேரில் சென்று சாட்சியம் அளித்தார். 1944-ம் ஆண்டு அவரது தந்தை விஷ ஊசி செலுத்தி கொல்லப்படும் போது அவர் 6 வயது சிறுவனாக இருந்தார். விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அலுவலகத்தில் வெறுமனே அமர்ந்து கொண்டு, என் தந்தையின் இறப்புச் சான்றிதழ் மீது முத்திரை இடுபவராக இருந்தாலும் கூட அங்கு நடந்த ற்றங்களில் இம்கார்ட் ஃபியூஷ்னருக்கு மறைமுகமாக தொடர்பு உண்டு" என்றார்.
ஸ்டுட்ஹாஃப் வதைமுகாமில் இருந்து மீண்ட மன்ஃபிரெட் கோல்ட்பெர்க் என்பவரோ, தீர்ப்பளிக்கப்பட்ட நேரம் தான் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறுகிறார். பிபிசியிடம் பேசிய அவர், "97 வயது மூதாட்டியை சிறையில் அடைக்க முடியாது என்பதை முன்கூட்டியே தெரியும் என்பதால் இதனை ஒருவித அடையாள தீர்ப்பாகவே கருத முடியும்" என்று கருத்து தெரிவித்தார். "காலம் கடந்ததாக இருப்பினும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் இது அமைய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நடந்த குற்றங்களுக்காக நடந்த கடைசி விசாரணை இம்கார்ட் ஃபியூஷ்னருடையதாகவே இருக்கும். ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் நாஜிக்கள் புரிந்த கொடூர குற்றங்கள் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் அண்மையில் முடிவுக்கு வந்தன. அந்த வதை முகாமில் காவலராக பணிபுரிந்த ஒருவருக்கு அங்கு நடந்த குற்றங்களில் தொடர்பு இருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற போதிலும் அவர் தற்போது விசாரணைக்கு உகந்த நிலையில் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. 5 ஆயிரம் கொலைகளுக்கும் மேல் உடந்தையாக இருந்ததாக எஸ்.எஸ். முகாம் காவலர் புரூனோ டேவுக்கு 2020-ம் ஆண்டு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2011-க்குப் பிந்தைய நாஜி குற்ற வழக்குகள்
- ஜான் டெமியாநியூக் - சோபிபோர் வதை முகாமில் 28,000 க்கும் மேற்பட்ட யூதர்கள் கொலையில் உடந்தையாக இருந்தமைக்காக 2011ல் 5 ஆண்டு தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மேல்முறையீட்டின் பேரில் விடுவிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டே தனது 91-வது வயதில் இறந்தார்.
- ஆஸ்கர் கிரானி - ஆஷ்விட்ஸில் வதை முகாமில் புத்தகக் காப்பாளரான இவர், 3 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு உடந்தையாக இருந்தார் என்று 2015ல் தண்டிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் சிறைக்குச் செல்லவில்லை, மேல்முறையீட்டு மனு விசாரணையின் போதே 2018ல் தனது 96 வயதில் இறந்துவிட்டார்.
- ரெய்ன்ஹோல்ட் ஹானிங் - அவுஷ்விட்ச் வதை முகாமில் எஸ்.எஸ். காவலராக இருநத இவர், யூதர் படுகொலைக்கு உதவி புரிந்ததாக 2016ல் தண்டனை பெற்றார். ஆனால், மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த போதே அடுத்த ஆண்டு தனது 95-வது வயதில் மரணமடைந்தார
- ஃபிரெட்ரிக் கார்ல் பெர்ஷே - நோ யெங்காமே வதை முகாமின் முன்னாள் காவலரான இவர், பிப்ரவரி 2021ம் ஆண்டு அவரது 95 வயதில் அமெரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஜெர்மன் வழக்குரைஞர்கள் கைவிட்டனர். அவரது தற்போதைய கதி என்னவென தெரியவில்லை.
- ஜோசப் எஸ் - சாக்சென்ஹவுசன் வதை முகாமில் 3,500 க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொலைக்கு உதவி புரிந்ததாக 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 101 வயதான அவர், ஜெர்மனியில் நாஜி கால போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட மூத்த நபர் ஆவார், ஆனால் வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்