குஜராத்தில் 'சொர்க்கத்திற்கு செல்லும் பாதை' - இந்த அழகிய இடம் எங்கே உள்ளது?
அழகிய இந்த சாலை 'சொர்க்கத்திற்குச் செல்லும் பாதை (Road to Heaven)' என்று அழைக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திலுள்ள இந்த சாலை கவ்டா மற்றும் தோலாவிரா நகரங்களை இணைக்கிறது.
இருபுறபும் கடல் சூழ்ந்துள்ள நிலப்பரப்புக்கு நடுவே செல்லும் இந்த நீண்ட சாலையை அதன் அழகின் காரணமாக சொர்க்கத்திற்கு செல்லும் பாதை, அதாவது 'ரோடு டு ஹெவன்' என்று சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அழைக்கிறார்கள், இந்த பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
சொர்க்கத்திற்கு செல்லும் வழி

பட மூலாதாரம், Parth Gor/BhujBloggers
இந்த பெயர் தோன்றியது குறித்த சுவாரசியமான சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், "புஜ் ப்ளாக்கர்ஸ்" (BhujBloggers) பார்த், "2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் என்னுடைய குழுவோடு இந்த பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தேன். அப்போது தவறுதலாக இந்த பாதையில் நாங்கள் வந்தோம். அப்போது இந்த சாலை கொஞ்சம் மோசமாக இருந்தது. ஆனால் கடலுக்கு நடுவே பார்க்கவே அழகாக இருந்தது."
"நான் உடனே என்னுடைய ட்ரோன் மூலம் இந்த சாலையை வீடியோ, போட்டோ எடுத்தேன். அந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு இந்த சாலை சொர்க்கத்திற்கு போவது போல இருந்தது. அதனால் இன்ஸ்டாகிராமில் இதை ஷேர் செய்து, இது 'சொர்க்கத்திற்குச் செல்லும் பாதை' போல இருக்கிறதா எனக் கேட்டேன்."

பட மூலாதாரம், Parth Gor/BhujBloggers
"நிறைய பேர் அந்த போட்டோ, வீடியோவுக்கு லைக் செய்து, அதை ஒத்துக்கொண்டார்கள். அப்படித் தான் இந்த சாலைக்கு சொர்க்கத்திற்கு செல்லும் வழி என பெயர் வந்தது. அதற்கு பிறகு குஜராத் சுற்றுலாத்துறையும் இந்த சாலைக்கு அதையே பெயராக வைத்தார்கள்."
"நான் வீடியோ எடுத்தது ஆகஸ்ட் மாதம். அந்த நேரத்தில் சூரிய ஒளியால் சாலைக்கு இருபுறமும் பளப்பளப்பாக இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால் இந்த இடம் அப்படியே கண்ணாடி மாதிரி பிரதிபலிக்கும். அதை வீடியோவாக எடுத்து நான் சோசியல் மீடியாவில் போட்டதும் வைரல் ஆகிவிட்டது. இந்த மாதிரி உலகத்திலேயே இரண்டு இடம் தான் இருக்கிறது, ஒன்று பொலிவியாவில் இருக்கும் சலர் டி உயுனி, இன்னொன்று நம் நாட்டில் இருக்கும் 'சொர்க்கத்திற்குச் செல்லும் பாதை", என்று கூறினார்.
இப்போது இந்த இடம் குஜராத் மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக சுற்றுலாவை சார்ந்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகியுள்ளது.
இந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் உள்ளூர்வாசி ஒருவர் பேசுகையில், "இங்கு வரும் சாலை தரமாக இருக்கிறது. அதனால் நிறைய சுற்றுலா பயணிகள் இங்கே வருகிறார்கள். இந்த வெள்ளை பாலைவனத்தை பார்க்க நிறைய மக்கள் வருவதால் தொழில் நன்றாக நடக்கிறது, வருமானம் நன்றாக கிடைக்கிறது.

பட மூலாதாரம், Parth Gor/BhujBloggers
இங்கு தாங்கும் விடுதி நடத்திவரும் பிரவீன் சவ்டா நம்மிடம் பேசுகையில், "இங்கு 6 வருடமாக நான் ரிசார்ட் நடத்தி வருகிறேன். நான் இங்கு தொழில் ஆரம்பிக்கும் போது 'சொர்க்கத்திற்குச் செல்லும் பாதை' என்ற பெயர் எதுவும் இல்லை. போன வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து தொழில் நன்றாக நடக்கிறது. இங்கு வரும் எல்லோருக்கும் பூமியில் புதிதாக ஏதோ ஒரு இடத்திற்கு வந்தது போல இருக்கும்.
மழை காலத்தில் ரோட்டுக்கு இரண்டு பக்கமும் தண்ணீர் நிற்கும். பனி காலத்தில் இரண்டு பக்கமும் வெள்ளை பாலைவனம் போல இருக்கும். 35 கி.மீ நீளமுள்ள இந்த ரோட்டில் வண்டி ஓட்டும் போது மிகவும் திரிலிங்காக இருக்கும். அதுமட்டுமில்லாமல் தோலாவிரா பழங்கால நகரமும் இங்கே இருக்கிறது. அதோடு கலாசாரம், உணவு முறையும் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்து இருக்கிறது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "அதனால் பல ஊர்களில் இருந்து மக்கள் இங்கே வருகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கான வசதியும் இந்த பகுதியில் மேம்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் நல்ல சுற்றுலாத் தளமாக மாற்ற மாநில அரசும் நிறைய முயற்சி எடுத்து வருகிறார்கள்." என்று கூறுகிறார் பிரவீன் சவ்டா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



