You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தென்காசியில் பேருந்துகள் மோதல் - உயிர்பிழைத்தவர் கூறியது என்ன?
தென்காசியில் இரு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 6 பேர் பலியாகினர். சுமார் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள எலத்தூர் காவல்நிலையத்துக்குட்பட்ட துரைசாமிபுரத்தில் திங்களன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மதுரையில் இருந்து தென்காசி நோக்கிச் சென்ற பேருந்தும், தென்காசியில் இருந்து கடையநல்லூரை நோக்கிச் சென்ற பேருந்தும் மோதிக்கொண்ட இந்த விபத்தில், இரு பேருந்துகளின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் 5 பெண்கள், ஒரு ஆண் என குறைந்தது 6 பேர் பலியானதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
32 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அவர், தான் தற்போது அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ,விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்தவர்களின் முகவரி சேகரிக்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கமல்கிஷோர் பிபிசி தமிழிடம் கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பயணி ஒருவர் பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு