இந்திய அரசு வெளியிட்ட ஜிடிபி புள்ளிவிவரங்களில் குளறுபடியா? ஐ.எம்.எஃப் அறிக்கையால் புதிய சர்ச்சை

அண்மையில் இந்திய அரசு, 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (real GDP) 8.2% வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 5.6% வளர்ச்சியைவிட அதிகம் என்றும் கூறியுள்ளது.

இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரம் என்ற தனது நிலையை இந்தியா மேலும் பலப்படுத்தியுள்ளது.

ஒருபுறம் இந்தியா தனது 2030-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டை 7.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவித்துள்ள நிலையில், மறுபுறம், ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தனது சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் ஜிடிபி மற்றும் தேசிய கணக்குகள் தரவுகளின் தரத்திற்கு 'சி' தரவரிசையை அளித்துள்ளது.

இதையடுத்து, ஜிடிபி புள்ளிவிவரங்கள் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டும்போது, ஐ.எம்.எஃப். 'சி' தரவரிசையை வழங்கியது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது.

இந்த விவாதத்தை பாஜக நிராகரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுக்குப் பதிலளித்த பாஜகவின் அமித் மாளவியா, "பலவீனமான ஐந்து' பொருளாதாரங்களில் ஒன்று என்ற நிலையில் அவர் இந்தியாவை விட்டுச் சென்றார். ஆனால், நாடு தற்போது அப்படி இல்லை என்பதை அவரது கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என்பதால் முன்னாள் நிதியமைச்சர் பீதியைப் பரப்புவது கவலையளிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், "ஐ.எம்.எஃப். தனது வருடாந்திர ஆய்வில் இந்தியாவின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கு ஏன் 'சி' கிரேடு வழங்கியது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

காங்கிரஸ் இதற்காக அரசை விமர்சித்துள்ள நிலையில், காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள பாஜக, இந்த விவகாரத்திற்கு அடிப்படைக் காரணம் "2011-12ஆம் ஆண்டே இதற்கான அடிப்படை ஆண்டாக (Base Year) இருப்பதுதான். பல ஆண்டுகளாக தொழில்நுட்ப அளவுகோல்கள் காரணமாக இந்தத் தரவரிசை மாறவில்லை" என்று கூறியுள்ளது.

காங்கிரஸின் தகவல் தொடர்புப் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. தனியார் முதலீட்டில் புதிய வேகம் இல்லாமல், அதிக ஜிடிபி வளர்ச்சி விகிதம் நிலையானதாக இருக்காது," என்று தெரிவித்துள்ளார்.

"ஐ.எம்.எஃப். கருத்துப்படி, இந்தியாவின் தேசிய கணக்குகள் மற்றும் பணவீக்கப் புள்ளிவிவரங்கள் அமைப்பு சாரா துறை, மக்களின் செலவு முறைகள் போன்ற முக்கிய அம்சங்களைப் பிரதிபலிக்கவில்லை," என காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, "கடந்த ஆண்டும்கூட இந்தியாவுக்கு ஐ.எம்.எஃப். 'சி' கிரேடுதான் வழங்கியது. ஆனாலும் எதுவும் மாறவில்லை," என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, "ஐ.எம்.எஃப்-இன் தரவரிசை பல ஆண்டுகளாக மாறவில்லை" என்றும், தொழில்நுட்ப அளவுகோல்கள் காரணமாகப் பல ஆண்டுகளாக 'சி' கிரேடாகவே உள்ளது என்றும், ஜிடிபி புள்ளிவிவரங்கள் போலியானவை அல்ல என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எஃப் அறிக்கையில் என்ன உள்ளது?

நவம்பர் 26 அன்று, ஐ.எம்.எஃப். இந்தியாவைப் பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், கண்காணிப்புக்குப் போதுமான தரவுகள் இல்லாத காரணத்தால் இந்தியாவுக்கு 'சி' கிரேடு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

பொதுவாக, ஐ.எம்.எஃப். தனக்குக் கிடைக்கும் தரவுகளை நான்கு தரவரிசைகளாகப் பிரிக்கிறது.

  • முதலாவது தரவரிசை ஏ கிரேடு. அதாவது, கண்காணிப்புக்குப் போதுமான தரவுகள் இருப்பதை இது குறிக்கிறது.
  • இரண்டாவது தரவரிசையில், தரவுகளில் சில குறைபாடுகள் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்தமாக அவை கண்காணிப்புக்குப் போதுமானவையாக இருப்பதைக் குறிக்கிறது.
  • தரவுகளில் சில குறைபாடுகள் இருந்தால், அவை கண்காணிப்புச் செயல்முறையை ஓரளவுக்குப் பாதிக்கின்றன. அப்படி இருந்தால், அது மூன்றாவது தரவரிசையில் வருகிறது.
  • இறுதியாக, கடுமையான குறைபாடுகள் உள்ள, கண்காணிப்பைப் பெரிதும் பாதிக்கக்கூடிய தரவுகளைக் கொண்டவை, நான்காவது தரவரிசையில் வகைப்படுத்தப்படுகின்றன.

இந்தியா குறித்து ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய கணக்குகளின் புள்ளிவிவரங்கள் சரியான வகைப்பாட்டில், போதுமான விவரங்களுடன் கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் முறையியல் குறைபாடுகள் இருப்பது, அவற்றின் கண்காணிப்புக்குத் தடையாக உள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசு பயன்படுத்தும் தரவு 2011-12ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும், இந்த அடிப்படை ஆண்டு இப்போது பொருத்தமானதாக இல்லை என்றும் ஐ.எம்.எஃப். கூறுகிறது.

மேலும், உற்பத்தியாளர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தாமல், மொத்த விலைக் குறியீடுகளை இந்தியா பயன்படுத்துகிறது என்றும், இதனால் தரவுகளில் வேறுபாடு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த அமைப்பில் உள்ள நிதி சார்ந்த பரஸ்பர இணைப்பு பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் எக்ஸ் பதிவுக்கு அளித்த பதிலில், பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா, "தொழில்நுட்ப சிக்கலுக்கான காரணம் 2011–12ஐ அடிப்படை ஆண்டாக நிர்ணயித்ததுதான். காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த இந்த அடிப்படை ஆண்டினை மத்திய அரசு ஏற்றுக்கொண்டபோது, முரண்பாடாக அவர்களே அதில் குறைபாடு இருப்பதாகக் கூறினர்" என்றார்.

அதோடு, "இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, வரவிருக்கும் பிப்ரவரி 2026இல் 2022-23 தொடரில் மாற்றங்களைச் செய்யவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது" என்றும் அமித் மாளவியா தெரிவித்தார்.

மேலும், சீரான இடைவெளி மற்றும் சரியான நேரத்தில் தரவுகளை வழங்குவதற்காக இந்தியாவுக்கு 'ஏ' கிரேடு கிடைத்தது கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிபுணர்களின் கருத்து

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர் அருண் குமார், ஜிடிபி புள்ளிவிவரங்கள் குறித்துப் பல ஆண்டுகளாகக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.

பிரபல பத்திரிகையாளர் கரண் தாபருடன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 2011-12 தொடரின் ஜிடிபி புள்ளிவிவரங்களை ஆரம்பத்தில் அரசே ஏற்கவில்லை என்று கூறினார்.

"பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சுமார் மூன்று லட்சம் நிறுவனங்கள் 'ஷெல் நிறுவனங்கள்' என்று கூறி மூடப்பட்டன. ஆனால், புள்ளிவிவரங்களில் அதன் தாக்கம் தெரியவில்லை. சேவைத் துறை கணக்கெடுப்பின்போது, சுமார் 35% நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட இடத்தில் இல்லை என்று கண்டறியப்பட்டது. அப்படியானால், தரவு எப்படி சரியாக இருக்கும்? தரவுகளில் இவை அனைத்தையும் பிரதிபலிக்க வேண்டும்," என்று அருண் குமார் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, "2019இல் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததாக ஓர் அறிக்கை வந்தது. அதன் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. எனவே புள்ளிவிவரங்கள் குறித்துக் கேள்விகள் எழுவது இயல்புதான்" என்றும் அவர் விளக்கினார்.

கடந்த சில ஆண்டுகளில் அமைப்பு சாரா துறை ஒன்றன் பின் ஒன்றாகத் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் கூறுகிறார் அருண் குமார்.

"முதலில் பண மதிப்பிழப்பு, பின்னர் பல சிக்கல்கள் இருந்த ஜிஎஸ்டி, அதன் பிறகு வங்கி சாரா நிதித் துறை சிக்கலில் சிக்கியது, அதைத் தொடர்ந்து கோவிட் பெருந்தொற்று அமைப்பு சாரா துறையை மோசமாகப் பாதித்தது."

"இத்தகைய சூழ்நிலையில் ஜிடிபி கணக்கிடும் முறை நான்கு முறை மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது ஒருமுறைகூட மாற்றப்படவே இல்லை. ஐ.எம்.எஃப் செய்த செயலால், ஒரு சில விஷயங்கள் மட்டுமே சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

"ஒருபுறம் அரசு அமைப்பு சாரா துறையைப் பற்றி சுயாதீனமாக மதிப்பீடு செய்யவில்லை. மறுபுறம் அது ஒழுங்கமைக்கப்பட்ட துறையைப் போலவே வளர்ந்து வருவதாக நம்புகிறது. ஆனால், ஏற்பட்ட பாதிப்புகளால் அமைப்பு சாரா துறை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை அப்படியிருக்க, வீழ்ச்சியடைந்து வரும் துறையின் புள்ளிவிவரங்கள் வளர்ந்து வரும் துறையின் புள்ளிவிவரங்களைப் போலவே பார்க்கப்படுகின்றன," என்று பேராசிரியர் அருண் குமார் கூறுகிறார்.

ஜிடிபி கணக்கிடும் முறையில் பல குறைபாடுகள் உள்ளதை ஐ.எம்.எஃப். தெளிவாகக் கூறியுள்ளதாக பொருளாதார விவகார நிபுணரும் 'தி வயர்' நிறுவனத்தின் நிறுவன உறுப்பினருமான எம்.கே. வேணு கூறுகிறார்.

"இந்தியா தன்னை ஒரு பெரிய பொருளாதாரமாகவும், வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் காட்டிக் கொள்கிறது. இந்த அறிக்கை அதன் உலகளாவிய பிம்பத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறுகிறார்.

"ஐ.எம்.எஃப். தனது அறிக்கையில் தரவுகளில் உள்ள இடைவெளிகளைக் குறிப்பிட 'சைசபிள் டிஸ்கிரிபன்ஸிஸ்' (பெரிய அளவிலான குறைபாடுகள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது" என்று எம்.கே. வேணு கூறுகிறார்.

இந்தியா முன்பு 'பி' கிரேடில் இருந்தது, ஆனால் இப்போது 'சி' கிரேடுக்கு வந்துவிட்டது, இது ஒரு நேர்மறையான அறிகுறி அல்ல என்று அவர் கூறுகிறார்.

"கடந்த ஐந்தாறு வருடங்களாக அரசு தரவுகளைத் தவறாக மாற்றியமைப்பதை நான் பார்த்து வருகிறேன். அரசு தரவுகளைத் திரித்துக் காட்டுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

கோவிட் பேரிடருக்குப் பிறகு, வளர்ச்சி புள்ளிவிவரங்களை அரசு சரியாகக் காட்டவில்லை என்று பொருளாதார நிபுணர்களும், வல்லுநர்களும் கூறுகின்றனர்.

"ஒன்று ஒழுங்கமைக்கப்பட்ட துறை, அதாவது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், மற்றொன்று அமைப்பு சாரா துறை. இங்கு என்ன நடக்கிறது என்றால், ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் தரவு பார்க்கப்படுகிறது. மேலும் அமைப்பு சாரா துறையும் (அதாவது 90% சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும்) அதே வேகத்தில் வளர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது," என்று எம்.கே. வேணு விளக்குகிறார்.

ஆனால், அவரது கூற்றுப்படி, உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட துறை வளர்ந்தாலும், முறைசாரா துறை அந்த அளவுக்கு வளரவில்லை. "இதன் காரணமாக ஜிடிபி புள்ளிவிவரங்களின் கணக்கீடு தவறாக உள்ளது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு