You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறும் டிரம்ப் - உண்மை நிலையைக் காட்டும் விளக்கப் படங்கள்
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் "அனைத்து நாடுகள்" மீதும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்துள்ளார். இந்த நாளை, அமெரிக்காவின் 'விடுதலை நாள்' என்று அவர் வர்ணித்துள்ளார்.
ஏற்கெனவே அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு, கார்கள் மீது இறக்குமதி வரி (சுங்க வரி) விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது.
இதனால், உலகளவில் வர்த்தகப் போர் ஏற்படும் என்றும் உலகளவில் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் பதற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவை இந்த வரி விதிப்பை எதிர்கொள்ள பதில் நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன.
ஒரு நாடு வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளே சுங்க வரி எனப்படும். இது, அரசுக்கு வருவாயை அதிகரிப்பதோடு, அதை ஒத்த உள்ளூர் பொருட்களுக்கு சந்தையில் நன்மை பயக்கின்றன.
இந்தியாவை "வரிகளின் மன்னன்" என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், பிற நாடுகளின் இறக்குமதிகள் மீது இந்தியாவில் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது, அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவற்றை இந்த விளக்கப் படங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அப்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான செய்தியாளர் சந்திப்பில், "இந்தியா என்ன வரி விதிக்கிறதோ அதையே அமெரிக்காவும் விதிக்கும்," என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
உலகளவில் ஒப்பீட்டளவில் இந்தியா இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி விதிக்கிறது.
இறக்குமதி பொருட்கள் மீது இந்தியா 17% வரி விதிக்கும் நிலையில், அமெரிக்கா 3.3% வரி விதிக்கிறது என உலக வர்த்தக மையத்தின் தரவுகள் கூறுகின்றன.
- உலகையே அச்சுறுத்தும் டிரம்பின் 'வரி விதிப்பு' ஆயுதம் எவ்வாறு செயல்படும்? எளிய விளக்கம்
- இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்
- டிரம்ப் நடவடிக்கைகளால் இதுவரை இல்லாத அளவுக்கு ஐரோப்பா அதிக குழப்பத்தில் உள்ளதா? ஏன்?
- புதின் மீது டிரம்ப் எரிச்சலடைவது ஏன்? அவரது கடும் கோபத்திற்கு என்ன காரணம்?
அரிசி, ஆமணக்கு எண்ணெய், தேன், மிளகு ஆகியவற்றை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
அமெரிக்காவில் இருந்து பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை சீனாவுடன் அதிகமாக உள்ளது. சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 24.7 சதவீதமாகவும், கனடாவுடன் 5.6 சதவீதமாகவும் உள்ளது.
ஆனால் இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 3.8 சதவீதம் மட்டுமே. அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறை விஷயத்தில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா அதிகளவில் மருந்துகள் இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையில் மருந்துகளே 24% பங்கு வகிக்கின்றன.
பிரதமர் மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே ஜனவரி மாதம் நடந்த தொலைபேசி உரையாடலில், அமெரிக்காவிடம் இருந்து அதிகளவிலான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று பிரதமர் மோதிக்கு டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் இந்தியா, அமெரிக்கா இடையிலான இரு தரப்பு வர்த்தகம் முறையாக நடைபெற வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதாவது, அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என டிரம்ப் விரும்புகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு