You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிடிஆரிடம் இருந்து பறிக்கப்படுகிறதா நிதித்துறை? ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ஆதரவு ஹேஷ்டேக்
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக அமைச்சரவை நாளை (மே 11) மாற்றி அமைக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அத்துறையில் இருந்து மாற்றப்பட்டு அவருக்கு வேறு துறை ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் #IStandWithPTR என்ற ஹேஷ்டேக்குடன் பலரும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளது. இதில் மன்னார்குடி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார். அதே நேரத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனுடன் அமைச்சர்கள் சிலரின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குடும்பத்தில் உள்ள சிலர் குறித்து பிடிஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோக்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதன் உண்மைத்தன்மையை பிடிஆர் உறுதிப்படுத்தவில்லை. தொழில்நுட்ப உதவியுடன் தமது குரல் போன்ற பேச்சை சில விஷமிகள் வெட்டி, ஒட்டி பகிர்ந்ததாக அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.
இந்த விவகாரம் திமுகவிலும் தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் நிதியமைச்சர் பதவியில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விடுவிக்கப்பட்டு வேறு துறைக்கு நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், பிடிஆர் தியாகராஜன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளன.
இது தொடர்பாக அரசு வட்டாரங்களில் வெளிவந்த தகவல்களின்படி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறையில் இருந்து மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு நிதித்துறை அமைச்சராகவும், தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள். அமைச்சரவையில் இடம்பெறவுள்ள டிஆர்பி ராஜா, தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பிடிஆருக்கு சமூக வலைதளத்தில் பெருகும் ஆதரவு
இந்நிலையில், பிடிஆர் நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் ஊகங்களாக வெளியாகி வருவதால், ட்விட்டர் சமூக ஊடகத்தில் #IstandwithPTR என்ற ஷேக்டேக் உடன் பிடிஆருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிடிஆரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கூடாது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சிக்கு நஷ்டம், கட்சிக்கு லாபம்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சர் பதவியில் இருந்து வேறு பதவிக்கு மாற்றினால் அது திமுகவுக்கு ஒருவேளை சாதகமாக அமைந்தாலும் தமிழக அரசுக்கு பாதகம்தான் என்று கூறுகிறார் பத்திரிகையாளர் ப்ரியன்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த விவகாரத்தை கட்சி, ஆட்சி என இரண்டு தரப்பில் இருந்து பார்க்க வேண்டும். முதலில் ஆட்சி ரீதியாக பார்த்தால், பிடிஆர் தான் போட்டியிட்ட இரண்டு தேர்தலில் வாக்குக்கு காசு கொடுக்காமல் வெற்றி பெற்றவர். மோசமாக இருந்த தமிழ்நாட்டின் நிதி நிலையை சரி செய்வதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நிதி மேலாண்மையை பொறுத்தவரை அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அமைச்சரவைக்கு ஒரு பலமாகவே அவர் இருக்கிறார்," என்கிறார்.
"பிடிஆரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கி வேறு துறைக்கு அமைச்சராக்குவது என்பது நிச்சயம் அரசுக்கு பின்னடைவுதான். நிதி மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்ற அவரை வேறு துறைக்கு அமைச்சராக்குவது கூட அவரது திறமையை வீணடிப்பது போன்றதுதான். ஆனால், இதனால், பிடிஆருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஒன்றும் கிடையாது. அவர் தொடர்ந்து இயங்கிக்கொண்டேதான் இருப்பார்.
கட்சி ரீதியாக பார்க்கும்போது, `திமுக ஃபைல்ஸ்' என்ற பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சூழலில் பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ, நிச்சயம் கட்சிக்கு பெரிய பாதிப்புதான். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். இதனால்தான் முதலில் இது மட்டமான அரசியல் என்று முதல்வர் தெரிவித்தார். தற்போது, பிடிஆரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கி வேறு அமைச்சரவையை கொடுத்துவிட்டு, பின்னர் அவரை மொத்தமாக அமைச்சரவையில் இருந்து நீக்க அதிகம் வாய்ப்பு உள்ளது` என்கிறார்.
அமைச்சர்களை நம்பி திமுக இல்லை
இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "அமைச்சர்களை நம்பி திமுக இல்லை.நிதியமைச்சர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை," என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மத்திய அரசுக்கு எதிராக திமுக வைக்கும் அனைத்து வாதங்களும் திமுக என்ற கட்சி சார்ந்தவை. சமீபத்தில் முதலமைச்சர் பேசிய இரண்டு மேடைகளில் கூட அவர் மத்திய அரசையும், ஆளுநரையும் கடுமையாக விமர்சித்தார். எனவே, திமுகவில் இருக்கும் அனைவருக்கும் ஒரே உணர்வுதான். அது நிதியமைச்சராக இருந்தாலும் சரி, எந்த அமைச்சராக இருந்தாலும் சரி. திமுகவுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அமைச்சர்களுக்கு என்று கொள்கைகள் எதுவும் இல்லை.
யார் நிதியமைச்சராக இருந்தாலும் நிலுவைத் தொகையை கேட்கத்தான் போகிறார்கள். புள்ளி விவரங்களை வைத்து பேசத்தான் போகிறார்கள். எனவே, பிடிஆர் மாற்றப்பட்டால் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சகமே அழிந்துவிடும் என்ற நிலை எல்லாம் இல்லை. நுணலும் தன் வாயால் கெடும் என்று ஒரு பழமொழி உள்ளது. அதுதான் பிடிஆருக்கு பொருந்தும். ஆடியோ விவகாரத்தில் தான் பேசவில்லை என்றால் பிடிஆர் வழக்கு தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாதபோதே அவர்தான் பேசினார் என்ற எண்ணம் ஏற்பட காரணமாகி விடுகிறது. எனவே அவரின் செயலால்தான் அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறதே தவிர, அவரை துறை மாற்றுவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை," என்கிறார்.
யார் இந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?
தமிழ்நாடு நிதியமைச்சராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தா பி.டி.ராஜன், பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். கேம்ப்ரிஜ், ஆக்ஸ்ஃபோர்டு ஆகிய இடங்களில் பட்டம் பெற்றவர்.
இவரது மகனும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தந்தையுமான பிடிஆர் பழனிவேல்ராஜன், திமுக ஆட்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இத்தகைய பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன் இளமை காலத்தில் அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.
திருச்சி என்.ஐ.டி.யில் வேதிப் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்த அவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு முதுகலை படிப்பை முடித்த பிடிஆர், நியூயார்க்கின் பஃபல்லோ பல்கலையில் பொறியியல் உளவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் முதுகலை பட்டம் முடித்தார்.
2001இல் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பணியாற்றினார். பங்குச்சந்தையின் தலைநகர் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் நிதி மேலாண்மை குறித்த அனுபவங்களை பெற்றவர் இவர்.
தந்தைதொகுதியில் போட்டியிட்டு வெற்றி
தனது தந்தை பிடிஆர் பழனிவேல் ராஜன் போட்டியிட்டு வென்ற மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் 2016இல் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜன். 2021இல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நிதி நிர்வாகத்தின் அவருக்கு இருக்கும் உலகளாவிய அறிவு, அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் முக்கியமான நிதித் துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.
பிடிஆர் எதிர்கொண்ட சர்ச்சைகள்கள்
பிடிஆர் பழனிவேல் நிதியமைச்சர் பதவியை ஏற்றதில் இருந்து சர்ச்சைகளையும் தொடர்ந்து சந்தித்தே வருகிறார். ஜி.எஸ்.டி. விவகாரத்தில் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் எழுப்பினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், லக்னெளவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தபோது அதில் மாநில நிதியமைச்சரான நீங்கள் ஏன் பங்கேற்வில்லை என்று கேட்கப்பட்டபோது, அவர், "வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். உரிய நேரத்தில் லக்னெள செல்ல இயலவில்லை," என்று செய்தியாளர்களிடம் கூறினார். சமூக ஊடகத்தில், ஜி.எஸ்.டி கவுன்சிலை விடவும் வளைகாப்பு விழா அவசியமா என்ற விமர்சனம் எழுந்தது.
இலவசம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் அளித்த பதில்கள் சமூக ஊடகத்தில் பரவலாக பேசப்பட்டன.
இதேபோல், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது பிடிஆர் தியாகராஜன் பயணித்த வாகனம் மீது பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் செருப்பை வீசினார். இது தொடர்பாக பிடிஆர் தனது சமூக ஊடக பக்கத்தில், செருப்பை தொலைத்த சிண்ட்ரெல்லா தனது செருப்பைத் திரும்பப் பெற விரும்பினால், எனது ஊழியர் அதை உங்களுக்காக பத்திரமாக வைத்துள்ளார்` என்று பதிவிட்டிருந்தார்.
இதேபோல், தன்னை பிடிஆர் ட்விட்டரில் 'பிளாக்' செய்து விட்டார் என்று 2021இல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டு, அது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், துர்நாற்றத்தை தவிர்க்க ஒருவர் ஜன்னல்களை தாழிட்டுக் கொள்ளும் சாதாரண மனிதரைப் போல உங்களைப் போன்றவர்களை நான் 'பிளாக்' செய்து விடுவேன். உங்களிடம் 'நல்லவர்' என்ற சான்றிதழைப் பெறுவதில் பொருளில்லை. தயவு செய்து என் நேரத்தை வீணாக்காதீர்கள்,'' என பழனிவேல் தியாகராஜன் பதில் பதிவிட்டார்.
இதேபோல், கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று அவர் கூறியதும், மக்களையும் முதலமைச்சரையும் திருப்திப்படுத்த வேண்டியதுதான் தனக்கு முக்கியம், வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி பதிலளித்ததும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைகளின் உச்சமாக, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாயின. அதில், உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றவாறு ஒருவர் பேசுகிறார்.
ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்த போதிலும், ஆடியோவில் பதிவாகி இருப்பது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரல்தான் என்று அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். அந்த சர்ச்சை ஓயாத நிலையில், தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்படும் தகவல் உறுதியாகியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்