You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மாற்றி அனுப்பப்பட்ட சடலங்கள்' – ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்கள் வேதனை
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டிஷ் பெண்ணான ஷோபனா படேலின் மகன் பிபிசியிடம் பேசுகையில், அவரது உடல் பிரிட்டனுக்கு வந்த பிறகு, அவரது சவப்பெட்டியில் "வேறு நபரின் சடலங்களின் எச்சங்கள்" கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
விபத்தில் தனது பெற்றோர் இருவரையும் இழந்த மிட்டன் படேல் கூறுகையில், கலவையான எச்சங்களை அடையாளம் கண்ட பிரேத பரிசோதனை அதிகாரி, "இன்னும் எத்தனை பேர் உள்ளே இருக்கிறார்கள்?" என்று தெரிவித்ததாக கவலைப்படுகிறார்.
ஆமதாபாதில் ஜூன் மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். சடலங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவற்றில் சில தவறாக அனுப்பப்பட்டிருப்பதாக டெய்லி மெயில் புதன்கிழமையன்று (2025 ஜூலை 23) செய்தி வெளியிட்டது .
உயிரிழந்தவர்கள் அனைவரின் எச்சங்களும் "உகந்த தொழில்முறை ரீதியிலும்" கண்ணியத்துடன் கையாளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எழுப்பும் கவலைகளை நிவர்த்தி செய்ய, பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
அசோக் மற்றும் ஷோபனா படேல் ஜூன் 12 அன்று தங்கள் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளைப் பார்ப்பதற்காக பிரிட்டன் நோக்கி புறப்பட்டனர்.ஆமதாபாத்திலிருந்து கேட்விக் நோக்கிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தவர்களில் இந்த தம்பதியும் இருந்தனர்.
இது போன்ற சூழலில் தவறுகள் நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் இந்த தம்பதியின் மகன் மிட்டன், ஆனால் இந்தக் குழப்பம் "வெளிப்படையாக மிகவும் வருத்தமளிப்பதாக" கூறினார்.
"அவர்கள் (அதிகாரிகள்) சோர்வாக இருந்தனர், நிறைய அழுத்தம் இருந்தது. ஆனால் சரியான உடல்களை பிரிட்டனுக்கு அனுப்புவதற்கு ஒரு குறைந்தபட்ச பொறுப்பு இருக்க வேண்டும்."
"என் தாயுடன் சவப்பெட்டியில் வேறு நபர்களின் எச்சங்கள் இல்லை என்று எனக்கு எப்படித் தெரியும்?" என ஆதங்கப்படுகிறார் மிட்டன்.
தவறான உடல் எச்சங்கள் பிரிட்டனில் உள்ள அன்புக்குரியவர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு குடும்பத்தினரை டெய்லி மெயில் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றில் ஒரு குடும்பத்திற்கு முழுவதுமாக தவறான உடல் அனுப்பப்பட்டுள்ளது என அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட சவப்பெட்டியில் பலரின் உடல் எச்சங்களும் இருந்துள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், இந்த செய்தியைப் பற்றி அறிந்திருப்பதாகவும், "இந்த கவலைகள் மற்றும் பிரச்னைகள் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட தருணத்திலிருந்து பிரிட்டன் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்" என கூறியது.
மேலும் அந்த அறிக்கையில், "துயரமான அந்த விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுவப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளின்படி பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டனர்." என கூறப்பட்டுள்ளது.
"உயிரிழந்த அனைத்து சடலங்களும் மிகுந்த தொழில்முறை நேர்மையை பின்பற்றி, கண்ணியம் மற்றும் மரியாதையுடனும் கையாளப்பட்டன."
"இந்தப் பிரச்னை தொடர்பான எந்தவொரு கவலைகளையும் நிவர்த்தி செய்வதில் நாங்கள் பிரிட்டன் அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்." என அந்த அறிக்கை கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு