ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்

புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் அந்த அறிக்கையில், "ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது.

இன்று டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்) மேலாக உள்ளது.

பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையின் தேசிய கலை மையத்தில் வைக்கப்படும். மகாராஷ்டிர அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.

அவரது உடல் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக என்.சி.பி.ஏ-வில் வைக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

அவரது மறைவுக்கு ஜார்கண்ட் மாநில அரசும் ஒருநாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பிரியாவிடை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

உதவியாளராக இருந்து தலைவராக உயர்ந்தவர்

ரத்தன் டாடா 1937ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ஜாம்ஷெட்ஜி டாடாவின் பேரனான நாவல் டாடா.

கடந்த 1955ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

உயர்கல்விக்குப் பிறகு, 1962ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். அதில் பல பதவிகளை வகித்த பின் 1974-இல் டாடா நிறுவனத்தின் இயக்குநரானார்.

கடந்த 1975ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் மேம்பட்ட வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

பின்னர் 1981ஆம் ஆண்டு டாடா நிறுவனங்களின் தலைவராக நியமிகப்பட்டார் ரத்தன் டாடா.

அதன்பின் 1991ஆம் ஆண்டு, ஜே.ஆர்.டி டாடாவுக்குப்பின் டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளைகளுக்குத் தலைவரனார். அந்த பதவியில், டாடா நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யத் துவங்கினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ‘டாடா நானோ’ என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது அவரது பெரும் திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியது.

கடந்த 2012ஆம் ஆண்டு, 50 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தபின்னர், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் டாடா சன்ஸ்-இன் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)