முதலமைச்சராக முதல் நாள் - இந்த 5 விஷயங்கள் விஜயின் எதிர்கால அரசியலை உணர்த்துகிறதா?

விஜயின் அரசியல் பாதை எப்படி இருக்கும்? முதல் நாள் உணர்த்திய 5 விஷயங்கள்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், ஆ.நந்தகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே ஆற்றிய தனது முதல் உரை மற்றும் முதல் நாள் நடவடிக்கைகள் மூலமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பல்வேறு அரசியல் செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசு திட்ட அறிவிப்புகள், முந்தைய அரசின் நிதிநிலை குறித்த விமர்சனங்கள், மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினருக்கான வாக்குறுதி, கூட்டணி அரசியலுக்கான சைகை, "நான் சாதாரண மனிதன்" என்ற உணர்ச்சி ரீதியான அணுகுமுறை என விஜயின் முதல் உரை பல அடுக்குகளைக் கொண்ட அரசியல் அறிக்கையாக அமைந்தது.

உரையுடன் மட்டுமல்லாமல், அவரது முதல் நாள் நடவடிக்கைகளும் அரசியல் குறியீடுகளாகப் பார்க்கப்படுகின்றன. பதவியேற்பு விழாவிற்கு பிறகு தலைமைச் செயலகம் சென்று அதிகாரபூர்வ பணிகளை தொடங்கிய விஜய், பின்னர் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

திமுக - அதிமுக என சுமார் அறுபது ஆண்டுகளாக மாறி மாறி நீடித்த தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்கத்தை உடைத்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய், தனது முதல் நாளிலேயே அடுத்த கட்ட அரசியல் திசை என்ன என்பதை காட்ட முயன்றுள்ளார்.

விஜய்

பட மூலாதாரம், DIPR

திமுக அரசுக்கு முதல் அரசியல் தாக்கு

முதல்வராக ஆற்றிய உரையில் மிக முக்கிய அரசியல் செய்தியாக பார்க்கப்படுவது, முந்தைய அரசின் நிதிநிலையை விஜய் நேரடியாக விமர்சித்ததே.

முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும், வெள்ளை அறிக்கை வெளியிடனும் என்று நினைப்பதாகவும் கூறிய விஜய், மக்கள் தனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் அது உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

"தமிழக அரசின் நிதிநிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள விஜய்க்கு ஒரு கால அவகாசம் தேவைப்படும். அதை அவர் வெளிப்படையாகவும் கேட்டுள்ளார்," என்கிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

"ஆட்சியின் தொடக்கத்திலேயே பொருளாதார சவால்களுக்கு முன்னாள் அரசைப் பொறுப்பாக்கும் அரசியல் நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளார். இது, எதிர்காலத்தில் நிதி நெருக்கடி அல்லது வாக்குறுதிகள் அமலாக்கத்தில் ஏற்படக்கூடிய தாமதங்களுக்கு முன்கூட்டியே அரசியல் விளக்கத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது," என்கிறார் அரசியல் ஆய்வாளர் ராமு மணிவண்ணன்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"சித்தாந்த ரீதியான கட்சியாக இல்லாமல், பாஜக, திமுக, அதிமுக என மற்ற கட்சிகளை விமர்சித்தே வளர்ந்த கட்சியாகத்தான் தவெக உள்ளது. இந்த கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை பெற்றே அது தேர்தலில் வென்றது. இனியும் தனது எதிர்ப்பு அரசியலை அக்கட்சி தொடரும் என்பதை விஜயின் இந்த பேச்சு உணர்த்துகிறது.

இதுவரை திமுக எதிர்ப்பு அரசியலை அதிமுக முன்னெடுத்து வந்தது. தற்போது அந்த இடத்தை விஜய் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த நிலைப்பாடு, ஆட்சியில் ஏற்படும் அதிருப்திகளைச் சமாளிக்க உதவக்கூடும்," என்கிறார் ராமு மணிவண்ணன்.

இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதிலளித்தது, விஜயின் உரை அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை காட்டுகிறது.

"அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக தெரிவித்திருந்தோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதற்குப் பிறகுதான் நீங்கள் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்ப வேண்டாம்," என ஸ்டாலின் கூறியுள்ளார்.

விஜய்

பட மூலாதாரம், DIPR

ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் - பாஜக எதிர்ப்பு அரசியலா?

பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பங்கேற்பு முக்கிய கவனத்தைப் பெற்றது.

"'சகோதரர்' எனக் குறிப்பிட்டு ராகுல் காந்திக்கு விஜய் வழங்கிய முக்கியத்துவம், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான அரசியல் உறவை உருவாக்க முயல்கிறார் என்பதை காட்டுகிறது. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தேர்தலுக்கு முன்பே தவெகவின் விருப்பமாக இருந்தது. இப்போது அது சாத்தியமாகியுள்ளது.

ஆட்சியை காப்பாற்ற வேண்டிய தேவையும், எதிர்கால அரசியல் பாதையும் காரணமாக பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளார்," என்கிறார் ராமு மணிவண்ணன்.

"பாஜக எதிர்ப்பு தேசிய கூட்டணியில் எதிர்காலத்தில் விஜய் முக்கிய பங்காற்றலாம்," என்கிறார் ஓய்வு பெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராஜா.

"விஜயின் முதல் நாள் அரசியல், பாஜக எதிர்ப்பு மனநிலையுள்ள தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தது, பெரியார் நினைவிடத்துக்குச் சென்றது போன்றவை, திராவிட அரசியல் மரபை முழுமையாக மறுக்கும் பாதையில் விஜய் செல்லவில்லை என்பதற்கான சைகைகள்," என்கிறார் அவர்.

"விஜய் பெரியார் நினைவிடத்துக்குச் சென்றதை கொள்கை பிரகடனமாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாலும் பெரியார் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. விஜய்க்கும் பெரியார் தேவை," என்கிறார் ராமு மணிவண்ணன்.

பிற கூட்டணி கட்சிகளுக்கு விஜய் வழங்கிய முக்கியத்துவம் காலத்தின் கட்டாயம் எனக் கூறும் அவர், இந்த நிலைப்பாட்டின் போக்கு எதிர்காலத்தில் மேலும் தெளிவாக தெரியும் என்கிறார்.

"பாஜகவை கொள்கை ரீதியான எதிரி என விஜய் தொடர்ந்து கூறிவந்தாலும், திமுகவை எதிர்த்த அளவுக்கு பாஜகவை களத்தில் நேரடியாகவும் தீவிரமாகவும் விமர்சிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக போன்ற பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ள விஜய், இனி பாஜக மீதான தனது விமர்சனத்தை மேலும் கூர்மையாக்குவாரா அல்லது மத்திய அரசுடன் நேரடி மோதலைத் தவிர்த்து 'நிர்வாக சமநிலை' அரசியலைக் கடைபிடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்," என்கிறார் ராஜா.

விஜய்

பட மூலாதாரம், DIPR

சமூக நீதி, மதச்சார்பின்மை - திராவிட அரசியலுக்கு மாற்றா?

"இதுவொரு புதிய தொடக்கம். உண்மையான சமூக நீதி, மதச்சார்பின்மையின் புதிய காலம் தொடங்குகிறது" என்ற விஜயின் வார்த்தைகள், திராவிட கட்சிகள் நீண்ட காலமாக தங்களுடைய அரசியல் அடையாளமாக கூறிவரும் சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை அரசியலை புதிய வடிவில் தானும் பிரதிநிதித்துவப்படுத்தப்போகிறேன் என்ற அரசியல் அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

"தமிழ்நாட்டில் சிறுபான்மை வாக்குகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கே சென்றுவந்த நிலையில், அந்த சமூகத்திடம் நேரடி நம்பிக்கைச் செய்தியை விஜய் வழங்க முயன்றுள்ளார்," என்கிறார் ராஜா.

"திராவிட அரசியலுக்கு மாற்று என்ற அடையாளத்துடன் ஆட்சிக்கு வந்திருந்தாலும், பெரியாருக்கு மரியாதை செலுத்தியதன் மூலம் திமுகவின் பாரம்பரிய அரசியல் நிலப்பரப்புக்குள் விஜயும் உரிமை கோருகிறார்," என்கிறார் அவர்.

சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை என்பது ஒரு கட்சிக்கான தனிப்பட்ட கொள்கை அல்ல எனக் கூறும் ராமு மணிவண்ணன், தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக இருக்கும் இந்த அம்சங்களை விஜய் தனது அரசியல் முகவரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என்கிறார்.

விஜய்

பட மூலாதாரம், DIPR

'நான் தேவதூதன் அல்ல' - சினிமா பிம்பத்திலிருந்து விலகும் முயற்சியா?

"நான் தேவதூதன் அல்ல, நானும் சாதாரண மனிதன்தான்" என்ற விஜயின் வரி, அவரது முழு உரையிலும் மிக முக்கியமான அரசியல் தருணமாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சினிமாவில் "மீட்பர்" பிம்பத்துடன் இருந்த நடிகர், அரசியலில் அதே பிம்பத்தை மென்மையாக்கி, "உங்களின் மகன், சகோதரன்" என்ற அடையாளத்துக்கு மாற முயன்றுள்ளார் என்கிறார் ராமு மணிவண்ணன்.

"சினிமாவில் விஜய்க்கு இருந்த பிம்பத்தை நம்பி ஒரு பிரிவினர் வாக்களித்திருப்பார்கள். அவர்கள் நிஜவாழ்க்கையிலும் அதிரடி மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கலாம். அவர்களுக்கு 'சினிமா வேறு, நிஜவாழ்க்கை வேறு' என்ற கருத்தை விஜய் வெளிப்படுத்தியுள்ளார்," என்கிறார் அவர்.

ஆனால், நிஜத்தில் விஜயின் ஹீரோ பிம்பத்தை மென்மையாக்குவார்களே தவிர அது முற்றிலும் உடைவதை அவரது ஆதரவாளர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

விஜய்

பட மூலாதாரம், DIPR

கட்சியினருக்கான எச்சரிக்கை

"நாம் ஜெயித்துவிட்டோம் என ஆட்டம் ஆடலாம் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை எடுத்துவிடுங்கள்" என்ற விஜயின் எச்சரிக்கை, தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கான நேரடி அரசியல் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

"தனது கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரும்புகிறார் என்பதையும், ஆட்சியின் தொடக்கத்திலேயே எதிர்மறை விமர்சனங்கள் உருவாகாமல் தடுக்க முயல்கிறார் என்பதையும் இது உணர்த்துகிறது," என்கிறார் ராஜா.

''இங்கே ஒரே சென்டர்தான். என் தலைமையில் உண்டான சென்டர். இந்தப் பக்கம் ஒரு சென்டர், அந்தப் பக்கம் ஒரு பவர் சென்டர் அதெல்லாம் கிடையவே கிடையது,'' என உரையில் விஜய் கூறினார்.

''தமிழ்நாட்டு அரசியலில், குறிப்பாக புதிய ஆட்சிகள் அமைந்த பிறகு, குடும்பம், நெருங்கிய ஆலோசகர்கள் அதிகார மையங்களைச் சுற்றி "பவர் சென்டர்" அரசியல் உருவாகும் என்ற விமர்சனங்கள் அடிக்கடி எழுவது வழக்கம்.

தனது தலைமையில்தான் இறுதி முடிவுகள் எடுக்கப்படும், ஆட்சியிலும் கட்சியிலும் ஒரே கட்டுப்பாட்டு மையம் மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தை விஜய் வெளிப்படுத்த முயன்றுள்ளார். இது, கட்சிக்குள் அதிகார போட்டி அல்லது குழு அரசியல் உருவாகாமல் தடுக்க முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகப் பார்க்கலாம்'' என்கிறார் ராஜா.

ஆனால், ''தவெக தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது, இனி அதிகாரம் எவ்வாறு பகிரப்படுகிறது, முடிவெடுப்பில் யாருக்குச் செல்வாக்கு கிடைக்கிறது என்பதுதான் இந்தக் கருத்தின் உண்மையான அரசியல் அர்த்தத்தை எதிர்காலத்தில் தீர்மானிக்கும்.'' என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு