You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவள்ளூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் பிடிபட்டது எப்படி?
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரைக் காவல்துறை இன்று (ஜூலை 25) கைது செய்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரைக் காண்பிக்குமாறு பொது மக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்துப் பேசிய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், கைது செய்யப்பட்டுள்ள நபரின் அடையாளங்கள் தேடப்பட்ட நபருடன் பொருந்திப் போவதால் கைது செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். முப்பது வயது மதிக்கத்தக்க அந்த நபரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபரைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அது மட்டுமின்றி, தேடப்படும் நபரைப் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் இன்று காலையில் காவல்துறை அறிவித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான், தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் யார் என்பது குறித்த விவரங்கள் காவல்துறை இதுவரை வெளியிடவில்லை.
வழக்கின் பின்னணி என்ன?
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த 12ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று சனிக்கிழமை என்பதால் சுமார் 12.45 மணியளவில் வகுப்பு முடிந்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளார்.
அந்தப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் ஓரத்தில் சிறுமி நடந்து சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.
இதனால் சிறுமி தயங்கியபடியே செல்வது ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில ஊடகங்களில் வெளியானது. ஆனால், இந்தக் காட்சிகளையும் அதை வெளியிட்டது யார் என்பதையும் பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
முன்னதாக இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "ரயில் நிலையம் அருகே உள்ள மாந்தோப்பில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அவர் அழுதபடியே நடந்து சென்றபோது அருகில் இருந்தவர்கள் சிறுமியின் பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் அருள் கூறினார்.
"அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும் சிறுமியை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களோ, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்" என்றார்.
சம்பவம் நடந்த அன்று மதியமே சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக அருள் குறிப்பிட்டார்.
சிறுமியின் பெற்றோர் அதே பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூன்று பேரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
வழக்கில் தேடப்பட்ட நபர் கைது செய்யப்பட்டது எப்படி?
இந்த வழக்கில் காவல்துறை துரிதமாகச் செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், "பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர், என் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீசிட்டி ஆகிய பகுதிகளில் தீவிர விசாரணை நடந்து வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த வழக்கு குறித்து பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய காவலர் ஒருவர், குற்றம் சாட்டப்பட்ட நபரைப் பிடிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள் ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, "அந்த நபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள தாபா ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், கைதான நபரின் அடையாளங்கள் மேலதிக விசாரணைகளுக்குப் பிறகே வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய காவலர், "விடுமுறை நாட்களில் அந்த நபர் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பகுதியில் அடிக்கடி சுற்றி வந்துள்ளார். அதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன. அன்றும் அப்படி வந்திருந்த நேரத்தில்தான் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, குற்றம் நடந்த நேரத்தில் அந்த நபருக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அவர் ஹிந்தியில் பேசியதாகவும் சிறுமி குறிப்பிட்டார். அந்தத் தகவலின் அடிப்படையில், செல்போன் டவர் தகவல்களை ஆராயப்பட்டது. பிறகு, சிசிடிவி காட்சியில் பதிவான அதே ஆடையை அணிந்துகொண்டு அந்த நபர் தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் உள்ள தாபா ஒன்றில் பணியாற்றுவதாகத் தகவல் கிடைத்தது" என்று அவர் விவரித்தார்.
பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்த அடையாளங்களை உறுதி செய்ததோடு, புகைப்படத்தைக் காட்டியும் உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு