பாகிஸ்தானில் இந்துச் சிறுமி கட்டாய மத மாற்றமா? என்ன நடந்தது?

    • எழுதியவர், ஷூமைலா கான்
    • பதவி, பிபிசி உருது
    • இருந்து, கராச்சியில் இருந்து

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரோமிலா தேஜா மகேஸ்வரி எனும் சோனு என்ற சிறுமி கடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதே சமயம், ‘திருமணத்திற்காக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் ரோமிலா கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ரோமிலா தற்போது மகளிர் நல காப்பகத்தில் உள்ளார்.

தான் குப்பைகளை பிரிக்கும் தொழிலாளியாக பணியாற்றுவதாகவும், டிசம்பர் 19 நண்பகல் 12 மணியளவில் வீட்டிலிருந்து ரோமிலா கடத்தப்பட்ட போது தான் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் மூத்த சகோதரர் ராஜேஷ் தேஜா மகேஸ்வரி பிபிசியிடம் கூறினார்.

ரோமிலாவுக்கு 13 வயது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்து சோனுவை அழைத்துச் சென்றதாக மனைவி தன்னிடம் கூறியதாக ராஜேஷ் குறிப்பிட்டார்.

"மூன்று பேரில் ஒருவர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்று மனைவி என்னிடம் கூறினார். அவரை என் மனைவி தெளிவாக அடையாளம் கண்டுகொண்டாள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

‘திருமணத்திற்காக இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக’ கூறிய சிறுமி

"நான் அந்த ஊர் பெரியவர்களை சந்தித்து உதவி கேட்டேன். என் சகோதரியை திருப்பி அனுப்புங்கள் என்று சொன்னேன்,” என்று ராஜேஷ் குறிப்பிட்டார்.

கடத்தல்காரர்களில் ஒருவரின் தந்தைக்கு போன் செய்து, தனது சகோதரியை திருப்பி அனுப்ப மகனிடம் சொல்லுமாறு கேட்தாகவும் அவர் கூறினார்.

இந்த நபர்கள் (கடத்தியவர்களின் உறவினர்கள்) நான்கு நாட்கள் வரை முழு விஷயத்தையும் குழப்பி வைத்திருந்தனர் என்று ராஜேஷ் கூறினார். இதற்குப் பிறகு, எங்கள் சமூகத்தின் பெரியவர்கள் (மகேஸ்வரி நடவடிக்கைக் குழு) எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

கராச்சியின் புறநகரில் உள்ள ஷேர்ஷா சிந்தி பகுதியில் ரோமிலா வசித்து வந்தார்.

வேறு எந்த உதவியும் கிடைக்காததால், ரோமிலாவின் சகோதரர் ராஜேஷ் தேஜா டிசம்பர் 24 ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்தார். அர்ஷத் முஹம்மது சாலேஹ் மற்றும் இருவரின் பெயர்கள் இந்த எப்.ஐ.ஆர்.-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோமிலா மற்றும் ராஜேஷின் தாய் எட்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வயதான தந்தை தனது மகளைத் திரும்பப் பெற கடுமையாகப் போராடுகிறார்.

எப்.ஐ.ஆருக்குப் பிறகு, போலீசார் சிறுமியை (ரோமிலா) மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரோமிலா நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், 'திருமணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக' கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், 'இஸ்லாமுக்கு மதம் மாறியதற்கான சான்றிதழ்’ மற்றும் சிறுமியின் திருமண சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பிய நீதிமன்றம் 

ரோமிலா ‘சிறுமி’ என்றும், அவருக்கு 13 வயதுதான் ஆகிறது என்றும் ரோமிலாவின் தந்தையும், அவரது சகோதரரும் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜேஷ் தரப்பு வழக்கறிஞர் கிஷன் லால், ரோமிலாவின் பிறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து முறையிட்டார்.

ரோமிலாவை காப்பகத்திற்கு அனுப்பவும், சிறுமியின் வயதை உறுதிசெய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்குமாறும் நீதிமன்றம் கூறியுள்ளது.

வயது தொடர்பான விசாரணை அறிக்கை, வரும் புதன்கிழமைக்குள் வர வாய்ப்புள்ளது.

ரோமிலா கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து கராச்சியின் மகேஸ்வரி சமூகத்தினர், மௌலா மதாத் சாலையிலும், கராச்சி பிரஸ் கிளப்பிலும் போராட்டம் நடத்தினர்.

"இவர்கள் விஷமிகள்.இவர்களுக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மக்களை உருட்டி மிரட்டுகிறார்கள்" என்று மகேஸ்வரி நடவடிக்கை குழுவைச் சேர்ந்த சமூக சேவகர் நஜ்மா மகேஸ்வரி தெரிவித்தார்.

"13 வயது சிறுமி மதம் மாற முடியாது. 18 வயது பெண்ணை கூட வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முடியாது. அதனால் எங்கள் 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தை ஏற்கவைக்க முடியாது. அதை எதிர்ப்போம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்றார் அவர்.

"ரோமிலாவை காப்பகத்தில் சென்று சந்தித்தேன். ஆனால் தனக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. அவர் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தார். வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்." என்று ராஜேஷ் தேஜா குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: