You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுகவை குடும்ப கட்சி என விமர்சித்த ஜே.பி. நட்டா - கோவை பாஜக பொதுக்கூட்ட உரை - 10 தகவல்கள்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று கோவை வந்திருந்தார்.
இன்று பிற்பகலில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கோவையில் இருந்து தான் தொடங்குகிறது என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதை பிரதிபலிக்கும் வகையில், கட்சியின் பொதுக்கூட்ட மேடை நாடாளுமன்ற கட்டட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் ஜே.பி.நட்டா பேசுகையில், "தமிழ்நாடு பழமையான மொழி மற்றும் கலாசாரத்தை கொண்டது. இங்கு காணப்படும் கொண்டாட்டங்களை பார்க்கும்போது அடுத்த தேர்தல்கள் பாஜகவுக்கு ஆதரவாக அமையும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை," என்று கூறினார். அவர் பேசிய உரையின் முக்கிய அம்சங்களை இங்கே வழங்குகிறோம்.
- பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரை இந்த நாட்டின் ஜனாதிபதி ஆக்கியுள்ளது பாஜக. பட்டியல் சமூகம், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஆளுநர்கள், அமைச்சர்கள் ஆக்கியுள்ளோம்.
- பாஜக ஆட்சியில் பட்டியல், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அமைச்சரவையில் உள்ளார்க்ள். ஐஐடிகள், மருத்துவ கல்லூரிகளை பல்வேறு மாநிலங்களில் பாஜக தொடங்கியுள்ளது. அதில் தமிழகம் தான் அதிக அளவிலான பங்களிப்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
- முன்னர் தடுப்பூசிகளுக்காக 20 ஆண்டுகள் வரை காத்திருந்தோம். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்தியா 9 மாதங்களில் 2 தடுப்பூசிகளை சொந்தமாக தயாரித்துள்ளது. அத்துடன் நூறு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது. அதில் 46 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு வழித்தடம், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு கூடுதல் நிதி ஓதுக்கீடு என தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது மத்திய அரசு.
- இந்திய நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கரங்களில் இல்லை. திமுக ஒரு பிராந்திய கட்சி இல்லை, அது ஒரு குடும்ப கட்சி.
- பிராந்தியத்திற்கும் திமுகவிற்கு சம்பந்தமே இல்லை. அதுவும் முதல் குடும்பத்திற்கான கட்சி மட்டுமே. அந்த குடும்பத்தில் மற்றவர்களுக்கு இடமில்லை.
- DMK என்றால் 'dynasty, money, katta panchayat' (திமுக என்றால் வாரிசு, பணம், கட்டப் பஞ்சாயத்து.) செய்வது மட்டுமே. இதுதான் திமுகவின் அரசியல்.
- நமக்கு தேசம் முதலாவது, கட்சி இரண்டாவது, தன்னலம் என்பது கடைசி தான். ஆனால் திமுகவினருக்கு குடும்பம் முதலாவது, கட்சி இரண்டாவது, தேசம் கடைசி தான். Nation last மட்டுமில்லை, Nation lost. நாம் ஒற்றுமையை முன்னிறுத்துகிறோம். அவர்கள் பிரிவினை செய்கிறார்கள்.
- பாரத ஒற்றுமை யாத்திரை என ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார். ஆனால் இந்தியாவை பிரிக்கும் சக்திகளை உடன் வைத்துக் கொண்டு செல்கிறார். பிரிவினைவாதிகளை ஆதரித்தற்கு காங்கிரஸ் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரித்தாளும் சூழ்ச்சி, வாக்கு வங்கி அரசியல் தான் அவர்களின் கொள்கை.
- தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என்கிற கோஷத்தை எழுப்புபவர்கள் ராகுல் காந்தியுடன் இருக்கிறார்கள். நீங்கள் பாரத்தை உடைக்கும் சக்தி, நாங்கள் தான் பாரத ஒற்றுமை சக்தி. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
- திமுக கருணாநிதி மற்றும் பிள்ளைகளுக்கான கட்சி, காங்கிரஸ் காந்தி மற்றும் பிள்ளைகளுக்கான கட்சி. நான் அடுத்த முறை வரும்போது கோவை மற்றும் நீலகிரியில் தாமரை மலர வேண்டும்." என்று நட்டா பேசினார்.
கொங்கு பகுதி புறக்கணிப்பு: அண்ணாமலை
மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், "தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் கொங்கு பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன," என்று குற்றம்சாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "நீலகிரி கோவையிலிருந்து பாஜக நாடாளுமன்றத்திற்கு செல்வது புதிதல்ல. இந்தியாவில் பெரு நகரங்கள் அனைத்தும் வளர்கிறது. ஆனால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் வளரவில்லை.
நீலகிரிக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரி பாஜக கொடுத்தது. கோவை, நீலகிரிக்கு பாஜக வாரிக் கொடுக்கிறது. ஆனால் அவை எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை. நீலகிரியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் 2ஜி வழக்கில் குற்றவாளியாக இருந்தவர். டான்டீ நிறுவனத்தை பாஜக தலையிட்டு தான் காப்பாற்றியது.
மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் மக்களுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை. 2024இல் அதை சரி செய்ய வேண்டும்.
ஜே.பி.நட்டா அகில இந்திய அளவிலான நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இந்த மண்ணிலிருந்து தொடங்கியுள்ளார். திமுக ஆட்சியில் கொங்கு பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்குவதில் கூட கொங்கு மண்டலத்திற்கு பாரபட்சம் காட்டியது திமுக.
கொங்கு பகுதியில் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது. திமுக ஆட்சி பட்டத்து இளவரசருக்கான ஆட்சி. பொங்கல் தொகுப்பில் வெறும் அரிசியும் சர்க்கரையும் கொடுக்கிறார்கள். கரும்பு, வெல்லம் கொடுக்கவில்லை. இதை நம்பி கரும்பு விளைவித்த விவசாயிகள் தவிக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற திமுக தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமது என்பது திமுகவின் கனவு கோட்டை. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக 400 எம்.பிக்கள் உடன் பாஜக ஆட்சி அமைக்கும்.
இரண்டு முறை தமிழகம் தவறு செய்துவிட்டது. இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து 25 எம்.பிக்கள் பாஜகவுக்கு வருவார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் பயணத்தை ஜே.பி.நட்டா இங்கு தொடங்கியுள்ளார். நீலகிரி, கோவை என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெல்ல வேண்டும்," என்று பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், "ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் அடிப்படையில் காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோதி ஒரு மாத காலம் நடத்திக் காட்டினார். பிரதமர் ஐ.நா சபையில் கலியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை கூறி தமிழுக்கு பெருமை சேர்த்தார். தமிழுக்கு பெருமை சேர்க்க பாஜக தொடர்ந்து வேலை செய்து வருகிறது" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்