You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை போராட்டங்களால் நாட்டை விட்டு திரும்பி சென்ற 17 கப்பல்கள்
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போராட்டங்கள் காரணமாக, நாட்டிற்கு வருகை தந்த 17 கப்பல்கள் திரும்பி சென்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்;.
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுக ஊழியர்கள் போராட்டங்களை நடத்தவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக தமது சம்பளத்திலிருந்து அரசாங்கத்தினால் வசூலிக்கப்படும் வரியை ரத்து செய்துக்கொள்ளுமாறு கோரியே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கும், தனக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, துறைமுக ஊழியர்களே இதனை தன்னிடம் கூறியதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா தெரிவிக்கின்றார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து அரசாங்கத்தினால் எட்டப்பட்டுள்ள தீர்மானத்தை மாற்ற முடியாது என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் சம்பளம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்தை தாண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
''சாதாரண அரச ஊழியர்களை போன்றல்ல அவர்கள், அவர்களுக்கு சலுகைகள் உள்ளன. அவர்கள் மிகவும் அதிகபட்ச சம்பளத்தை பெற்றுக்கொள்ளும், சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள். மூன்று வேளை உணவு வழங்கப்படுகின்றது. அதேபோன்று, வருடாந்திர கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன." என துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் தொடர்பில் தகவல்களை நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடு இன்று 5 பில்லியன் ரூபா லாபத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, கடந்த கால போராட்டங்களின் பெறுபேறாக துறைமுகத்திற்கு வருகைத் தந்த 17 கப்பல்கள் திரும்பி சென்றுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
''இதுவே போராட்டத்தின் பெறுபேறு. அந்த கப்பல்களை மீள கொண்டு வருவதற்கு கப்பல் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, நான் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டேன். எனினும், அவற்றில் சில கப்பல்களை மாத்திரமே மீள நாட்டிற்கு கொண்டு வருவதற்கான இயலுமை எமக்கு கிடைத்தது. ஏனையவை பங்களதேஷ் போன்ற நாடுகளை நோக்கி சென்றன. எமக்கு பாரியதொரு வியாபாரம் இல்லாது போயுள்ளது. டுபாய், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளின் இலங்கைக்கான வியாபாரத்தை தம்வசப்படுத்திக் கொள்ள பார்த்துக்கொண்டிருக்கின்றன. அந்த நாடுகளின் துறைமுகங்களை வலுப்படுத்துவதே போராட்டத்தின் பெறுபேறாக அமைகின்றது. போராட்டத்தின் பெறுபேறாக எமது துறைமுகங்கள் வலுவிழக்கின்றன என்பதை நான் கூறிக் கொள்ள வேண்டும்." என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்