காணொளி: மீண்டும் ஒரு பனிப்புயல் - அமெரிக்க மக்களை வாட்டும் கடுங்குளிர்

காணொளிக் குறிப்பு, மீண்டும் ஒரு பனிப்புயல் - அமெரிக்க மக்களை வாட்டும் கடுங்குளிர்
காணொளி: மீண்டும் ஒரு பனிப்புயல் - அமெரிக்க மக்களை வாட்டும் கடுங்குளிர்

அமெரிக்காவின் பெரும்பாலான இடங்கள் தற்போது இப்படித்தான் காட்சியளிக்கின்றன. திரும்பும் திசையெல்லாம் பனி சூழ்ந்து காணப்படுகிறது.

அதிகரித்து வரும் குளிர், கடும் பனிப்பொழிவு போன்ற காரணங்களால் இதுவரை குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழலில் 11,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக 'பிளைட் அவேர்' தகவல் தெரிவித்துள்ளது.

நியூயார்க்கின் கிழக்கு நதி உரைந்து போயுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான CBS-ன் தகவல்படி, மிசூரி மற்றும் இல்லினாய்ஸின் சில பகுதிகளில் 35.5 செ.மீ, ஓஹாயோ பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 60.9 செ.மீ, மாசசூசெட்ஸ், நியூயார்க்கின் ஹட்சன் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் 55.8 செ.மீ அளவுக்கும் பனி பொழிந்துள்ளது.

பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 8 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி தவித்ததாக அமெரிக்காவின் poweroutage.us. இணையதளம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் தற்போது நிலவும் இந்த ஆபத்தான சூழல், பல நாட்கள் நீடிக்கும் எனவும் இதனால் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், சுமார் 18 கோடி பேர் பாதிக்கப்படலாம் எனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தேசிய வானிலை மையத்தின் வானிலை ஆய்வாளர் அலிசன் சாண்டோ CBS செய்தியிடம் பேசுகையில், "இந்த பனிக்கட்டிகள் மிக மிக மெதுவாகவே கரையும். மேலும் இது மீட்பு முயற்சிகளுக்கும் தடையாக உள்ளது." என தெரிவித்தார்.

இதற்கிடையில், மற்றொரு குளிர்கால புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுபற்றி எக்ஸ் தள பதிவில், "இந்த வார இறுதியில் கிழக்கு அமெரிக்காவை தாக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க குளிர்கால புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "இந்த புயல் கடந்த சில நாட்களில் நாம் கண்ட அதே அளவிலான பனிப்பொழிவைக் கொண்டுவருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை." எனவும் தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் கிட்டத்தட்ட அமெரிக்காவின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகரில் அவசரநிலையை அறிவித்த வாஷிங்டன் மேயர் முரியல் பௌசர், "இந்த வார இறுதியில் டிசியில் ஒரு தசாப்தத்தில் இல்லாத மிகப்பெரிய பனிப்புயலை நாங்கள் அனுபவிக்கிறோம்" எனக் கூறினார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் ஏற்கனவே வகுப்புகளை ரத்து செய்து வருகின்றன. திங்கள்கிழமை மாலையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வாக்கெடுப்பை அமெரிக்க செனட் ரத்து செய்துள்ளது.

டகோட்டாஸ் மற்றும் மின்னசோட்டா போன்ற வடக்குப் பகுதிகள் குளிர்காலத்தில் உறைபனிக்குக் குறைவான பழக்கப்பட்டிருந்தாலும், டெக்சாஸ், லூசியானா, டென்னசி போன்ற பகுதிகள் இவ்வளவு கடுமையான குளிரை காண்பது அசாதாரணமானதாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஆர்க்டிக்குக்கு மேல் உருவாகும் மிகவும் குளிர்ந்த காற்று சக்திவாய்ந்த புயலுக்கு வழிவகுக்கும் என வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களின் கூற்றுப்படி, காற்று வலுவாக இருக்கும்போது, ​​அவை அதே இடத்திலேயே இருக்கும், இருப்பினும் காற்று பலவீனமடையும் போது, ​​சுழல் மேலும் தெற்கே சுழன்று குளிர்ந்த காற்று அமெரிக்காவை நோக்கி செல்கிறது.

இந்த நிலையில், தற்போது உருவாகியுள்ள குளிர்கால புயல் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி நகர்ந்து, செவ்வாய்க்கிழமைக்குள் கனேடிய கடற்பரப்பை சென்றடையும். ஆனால், அது அதிக குளிர்ந்த காற்றை விட்டுச்செல்கிறது. இதனால் பிப்ரவரி தொடக்கத்தில் ஆபத்தான குளிர் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு