முஸ்லிம் முதியவரின் கடை பெயரை எதிர்த்து கூடிய கூட்டம் - அங்கு வந்த 'முகமது தீபக்' செய்தது என்ன?

தீபக்' மற்றும் வக்கீல் அகமது

பட மூலாதாரம், Asif Ali/BBC

படக்குறிப்பு, உத்தரகண்டின் கோட்வாரில் ஜனவரி 26 அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு 'முகமது தீபக்' மற்றும் வக்கீல் அகமது முதல்முறையாகச் சந்தித்தனர்.
    • எழுதியவர், ஆசிஃப் அலி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒரு ஜிம் பயிற்சியாளர் மற்றும் ஒரு முதியவர் - இரு வேறு தலைமுறைகள், வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் மனிதர்கள். ஆனால் ஒரு சம்பவம் இவர்கள் இருவரின் வாழ்க்கையையும் நேருக்கு நேர் கொண்டு வந்துவிட்டது.

உத்தரகண்டின் கோட்வாரில் ஜனவரி 26 அன்று ஆடை விற்பனை கடை ஒன்றின் பெயரைப் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு, இவர்கள் இருவரும் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளனர்.

அந்தச் சம்பவம் இவர்கள் இருவரின் வாழ்க்கையையும் வெவ்வேறு விதமாகப் பாதித்துள்ளது.

தீபக் காஷ்யப் மற்றும் சர்ச்சை தொடங்கிய 'பாபா கலெக்ஷன்' கடை உரிமையாளர் வக்கீல் அகமது ஆகியோர் ஒன்றாக பிபிசியிடம் பேசினர்.

இவர்கள் இருவரின் சந்திப்பும் தீபக்கின் பிறந்தநாள் அன்று நிகழ்ந்தது. பிறந்தநாள் சந்தர்ப்பத்திலும், இந்த முழு நிகழ்வுகளுக்கு மத்தியிலும் வக்கீல் அகமதுவைப் பார்த்தது தனக்கு நிம்மதி அளிப்பதாக அவர் கூறுகிறார்.

"அவரது உடல்நிலை முன்பை விடச் சிறப்பாகத் தெரிகிறது. உண்மையிலேயே நன்றாக இருக்கிறது" என்றார் தீபக்.

தீபக்கிற்கு இது வெறும் முறையான சந்திப்பு மட்டுமல்ல, அந்த நாளில் பாதியில் நின்ற உரையாடலை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.

சம்பவத்திற்குப் பிறகு தான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நலமாக இல்லை, அதனால்தான் இந்தச் சந்திப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது என்கிறார் வக்கீல் அகமது.

அவர் கூறுகையில், "இன்று உடல்நிலை சற்று தேறிய நிலையில் நான் தீபக்கைச் சந்திக்க வந்துள்ளேன். நான் கடந்து வந்த அந்தத் தருணம் இன்றும் நினைவுக்கு வருகிறது" என்றார்.

அன்று சூழல் மாறியபோது...

ஜனவரி 26 அன்று வக்கீல் அகமது தனது கடையில் இருந்தார். அன்று சில இளைஞர்கள் தனது கடைக்கு வந்து கடையின் பெயர் குறித்துக் கேள்வி எழுப்பத் தொடங்கியதாக அவர் கூறினார்.

பெயரை மாற்றுவதில் இருந்து பேச்சு தொடங்கியதாகவும், ஆனால் அவர்களின் தொனியும் அழுத்தமும் நிலைமையை பதற்றமாக்கியதாகவும் அவர் கூறுகிறார்.

நிலைமையைப் புரிந்து கொண்ட தனது மகன் கடையின் பெயரை மாற்ற கால அவகாசம் கேட்டதாகவும், ஆனால் உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில் தீபக் அங்கு வந்ததாக வக்கீல் அகமது கூறுகிறார். ஒரு முதியவர் அழுத்தத்தில் இருப்பதை தீபக் உணர்ந்தார்.

அந்த நாளைப் பற்றித் தீபக், அங்கே ஒரு முதியவர் இருப்பதையும் அவருக்கு முன்னால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருப்பதையும் கண்டதாகக் கூறுகிறார்.

"பல இளைஞர்கள் ஒரு முதியவரிடம் இவ்வாறு பேசுவது எனக்குச் சரியெனத் தோன்றவில்லை. அதனால்தான் நான் தலையிட்டேன்."

அந்த நேரத்தில் கூட்டத்திற்கு நடுவில் வேறு யாரும் பேசத் தயாராக இல்லை என்பதை வக்கீல் அகமது ஒப்புக்கொள்கிறார்.

"கூட்டம் வந்த விதம், அவர்கள் தங்கள் கருத்தை ஏற்கச் செய்ய எந்த எல்லைக்கும் சென்றிருக்கலாம். நாங்கள் பயந்துவிட்டோம்." என்கிறார் வக்கீல் அகமது.

'தீபக்கின் வருகை ஒரு ஆதரவைப் போல இருந்தது'

தீபக் மற்றும் வக்கீல் அகமது

பட மூலாதாரம், Asif Ali/BBC

படக்குறிப்பு, அன்று தீபக் முன்வந்தது தனக்கு ஒரு ஆதரவைப் போல இருந்ததாக வக்கீல் அகமது கூறுகிறார்

இந்தச் சம்பவத்தின் போது தீபக்கிடம் பெயர் கேட்கப்பட்டபோது, அவர் தனது பெயரை "முகமது தீபக்" என்று கூறினார்.

விஷயம் பின்னர் விவாதப் பொருளானது, ஆனால் தீபக் இதை ஒரு உத்தியாகக் கருதாமல் அந்தத் தருணத்தின் தேவையாகக் கூறுகிறார்.

அந்த நேரத்தில் சூழல், மதம் மற்றும் அடையாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார். மனிதநேயம் என்பது ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பதைத் தான் உணர்த்த விரும்பியதாக அவர் கூறுகிறார்.

வக்கீல் அகமதுவுடன் தனக்கு முன்பு நெருக்கமான பழக்கம் எதுவும் இல்லை என்று தீபக் கூறுகிறார். அவர் ஒரு முதியவர் என்பதால் வழியில் பார்க்கும்போது மரியாதை நிமித்தமாக வணக்கம் கூறிக்கொள்வதோடு சரி என்கிறார்.

வக்கீல் அகமதுவிற்கும் இது அறிமுகம் சார்ந்த விஷயமாக இருக்கவில்லை.

அவரைப் பொறுத்தவரை, இது யாரோ ஒருவர் எதையும் யோசிக்காமல் தனக்கு ஆதரவாக நின்ற ஒரு தருணம்.

பொதுவாக இத்தகைய சூழல்களில் மக்கள் மௌனமாக இருந்துவிடுவதாலேயே அன்று நடந்த விஷயம் அசாதாரணமான ஒன்றாக மாறியது என்பதில் இருவருமே உடன்படுகிறார்கள்.

ஆதரவு, பயம் மற்றும் எதிர்காலப் பாதை

சம்பவத்திற்குப் பிறகு தீபக் சமூக ஊடகங்களில் வைரலானார்.

தொலைபேசி அழைப்புகள், சந்திக்க வரும் நபர்கள், புகைப்படங்கள் என அனைத்தும் அவருக்குப் புதியதாக இருந்தன.

ஒரு சாதாரணத் தலையீடு இவ்வளவு பெரிய விஷயமாக மாறும் என்று தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று தீபக் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, தனக்கு எது சரியெனத் தோன்றியதோ அதைத்தான் அவர் செய்தார்.

உதவி செய்பவர்கள் துன்பங்களைச் சந்திக்க நேரிட்டால், மக்கள் உதவ முன்வரப் பயப்படுவார்கள் என்ற கவலை வக்கீல் அகமதுவிடம் உள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் சிலரைச் சிந்திக்கத் தூண்டியுள்ளதாகவும் அவர் நம்புகிறார்.

இன்று மக்கள் ஏன் ஒருவருக்கொருவர் ஆதரவாக முன்வருவதில்லை என்ற கேள்வியைப் பற்றியும் இருவரும் பேசுகிறார்கள்.

பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்களின் போராட்டம்

பட மூலாதாரம், Screen Grab

"இன்று நாம் மௌனமாக இருந்தால், நாளை நம் குழந்தைகளும் அதே மௌனத்தையே கற்றுக் கொள்வார்கள்," என தீபக் நம்புகிறார்,

மனிதநேயம் என்பது ஏதோ ஒரு மதத்தின் சொத்து அல்ல என்று வக்கீல் அகமது கூறுகிறார்.

'இதோடு முடிந்துவிடாது'

எதிர்காலத்தில் மீண்டும் அத்தகைய சூழல் ஏற்பட்டால் தனது நிலையில் மாற்றம் இருக்காது என்றும், அன்று முன்வந்தது போலவே மீண்டும் செய்வேன் என்றும் தீபக் கூறுகிறார்.

அன்று நிலைமை எந்தத் திசையில் சென்றிருக்கக்கூடும் என்று நினைப்பதே கவலையளிப்பதாக வக்கீல் அகமது ஒப்புக்கொள்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, அந்த நேரத்தில் தீபக் அங்கு இல்லையென்றால், விஷயம் வெறும் விவாதத்தோடு நின்றிருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஒருவர் யார், எங்கிருந்து வந்தார் என்று பார்க்காமல் மற்றவரின் நலனைப் பற்றிச் சிந்திப்பவரே நல்ல மனிதர் என்கிறார் வக்கீல் அகமது.

பேச்சின் முடிவில், இந்தச் சந்திப்பு இதோடு முடிந்துவிடாது என்கிறார் தீபக்.

எப்போதெல்லாம் அந்த வழியாகச் செல்கிறாரோ, அப்போதெல்லாம் வக்கீல் அகமதுவைச் சந்திப்பதே தனது முன்னுரிமையாக இருக்கும் என்கிறார் தீபக். பெரியவர்களின் ஆசீர்வாதம் தான் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் என்கிறார் அவர்.

பகிர்ந்து கொள்ளப்பட்ட நம்பிக்கை

தீபக் மற்றும் வக்கீல் அகமது

பட மூலாதாரம், Asif Ali/BBC

படக்குறிப்பு, தீபக் கூறுகையில், 'பெரியவர்களின் ஆசீர்வாதம் தான் வாழ்க்கையின் மிகப்பெரிய பலம்' என்றார்.

இருவரும் தொடர்ந்து சந்திப்போம் என்று கூறுகிறார்கள்.

கோட்வாரில் நடந்த இந்தச் சந்திப்பு ஏதோ ஒரு சர்ச்சையின் தீர்வல்ல, மாறாகச் சத்தங்களுக்குப் பிறகும் உரையாடலுக்கான வாய்ப்பு மிச்சமிருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

இந்த உரையாடலின் மிக முக்கியமான விஷயம், இது ஏதோ ஒரு விவாதம் அல்லது குற்றச்சாட்டுகளின் கதை அல்ல. இது இரு மனிதர்கள் தங்கள் நினைவுகள், பகிரப்பட்ட பயங்கள் மற்றும் பகிரப்பட்ட நம்பிக்கைகளை பகிர்ந்துகொள்ளும் கதை.

ஒரு ஜிம் பயிற்சியாளர் மற்றும் ஒரு முதிய கடைக்காரர் - இன்று ஒன்றாக அமர்ந்து மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முழு விவகாரம்

தீபக் காஷ்யப் ஜனவரி 26 அன்று கோட்வாரின் படேல் சாலையில் பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்தவர்களுடன் விவாதிக்கும் வீடியோ வைரலானபோது கவனத்தைப் பெற்றார்.

குடியரசு தினத்தில், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் கோட்வாரில் உள்ள "பாபா கலெக்ஷன்" என்ற கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் 75 வயதான வக்கீல் அகமதுவின் கடையின் பெயரிலிருந்து 'பாபா' என்ற சொல்லை நீக்குமாறு அழுத்தம் கொடுத்தனர்.

அந்த நேரத்தில் தீபக் இடையில் வந்த பிறகு அவர்கள் திரும்பிச் சென்றனர், ஆனால் மீண்டும் ஜனவரி 31 அன்று பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த டஜன் கணக்கானவர்கள் கோட்வாருக்கு வந்து முழக்கமிட்டனர்.

பின்னர் காவல்துறை இரு தரப்பினர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது, அதில் தீபக்கின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு