You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம்: டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசியது என்ன?
டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு ‘ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பொதுக்கூட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில், சிவசேனா (யுபிடி), சமாஜ்வாதி கட்சி, என்சிபி (சரத் பவார்), திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திமுக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், “எனது கணவரை சிறையில் அடைத்த பிரதமர் நரேந்திர மோதி செய்தது சரியா? கேஜ்ரிவால் சிறையில் இருக்கிறார், அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். அவர் ராஜினாமா செய்ய வேண்டுமா?”
மேலும், ”உங்கள் கேஜ்ரிவால் சிங்கம், அவரை நீண்ட நாட்கள் சிறையில் அடைக்க முடியாது” என்றார். ”அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருந்து நாட்டிற்கு அளித்த ஆறு உத்தரவாதங்களையும்” சுனிதா கேஜ்ரிவால் குறிப்பிட்டார்.
“24 மணிநேர மின்சாரம், ஏழைகளுக்கு இலவச மின்சாரம், நல்ல பள்ளிகள், மொஹல்லா கிளினிக்குகள் ஆகியவை அதில் அடங்கும்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “பாஜக இந்தத் தேர்தலில் ஜெயிக்க ‘மேட்ச் ஃபிக்சிங்கில்’ (சூதாட்டத்தில்) ஈடுபட முயல்வதாக” குற்றம் சாட்டினார்.
பாஜகவின் இந்த முயற்சியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் மும்முரமாக வேலை செய்து வருவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். மேலும், பாஜகவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால் நம் அரசமைப்பு முடிவுக்கு வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
”இது சாதாரண தேர்தல் அல்ல, இது அரசமைப்பு சட்டத்தைப் பாதுகப்பதற்கான தேர்தல். நாட்டைப் பாதுகாப்பதற்கான தேர்தல். ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேர்தல்” எனவும் ராகுல் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “உங்களுக்கு ஜனநாயகம் வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் விஷம் போன்றது. அதைச் சுவைத்தால் உங்களுக்கு மரணம் நேரிடும்,” எனப் பேசினார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற முகமைகள் பாஜகவின் அங்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
“நீங்களும் நானும் குரல் எழுப்பினால், மோதி மற்றும் அவருடைய கட்சியின் பிரிவுகள் (அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை) நம்மை துன்புறுத்துவார்கள்.
”லாலு பிரசாத் பல முறை துன்புறுத்தப்பட்டுள்ளார். என் மீதும் என் தாய், சகோதரிகள், மைத்துனர்கள், என் தந்தையின் உறவினர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பிகாரில் எங்கள் கட்சி தலைவர்கள் பலரிடம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், நாங்கள் இதற்கு அஞ்சுபவர்கள் அல்ல” எனப் பேசினார்.
திமுக சார்பில் கலந்துகொண்ட மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை அவர் வாசித்தார்.
அதில், “டெல்லி முதலமைச்சரும் என் நண்பருமான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தனிப்பட்ட ரீதியாகவும் என் கட்சி சார்பாகவும் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலிமையான கூட்டணி அமைத்துள்ள விரக்தியில் பாஜக தவறுகள் செய்து வருகிறது. ‘இந்தியா’ என்ற வார்த்தையே அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது” என்றார்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதில் மலிவான யுத்திகளை பாஜக கையாள்வதாக மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
”சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகின்றனர். அதற்கு அஞ்சுபவர்கள் பாஜகவில் இணைகின்றனர். அவர்களுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், “பாஜகவினர் மாயையில் உள்ளனர். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டு பழமையான கதையை கூற விரும்புகிறேன்.
ராமர் சத்தியத்திற்காக சண்டையிட்டபோது அவரிடம் அதிகாரமோ வளங்களோ இல்லை. ஆனால், ராவணனிடம் எல்லாமே இருந்தது. ஆனால், ராமனிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, தைரியம் இருந்தது” எனப் பேசினார்.
'இந்தியா' கூட்டணியின் ஐந்து கோரிக்கைகள்
பிரியங்கா காந்தி தனது உரையில், இந்தியக் கூட்டணியின் ஐந்து கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்தின் முன்வைத்தார்.
“முதல் கோரிக்கை, மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் சமபலத்துடன் போட்டியிடுவதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது கோரிக்கையாக, எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கையை, தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும்.
தேர்தலில் முறைகேடு செய்வதையே நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் பலவந்தமாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, "ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது எங்கள் மூன்றாவது கோரிக்கை. நான்காவது கோரிக்கை, தேர்தலின் போது எதிர்க்கட்சிகளை நிதி ரீதியாக கழுத்தை நெறிக்கும் சர்வாதிகார நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஐந்தாவது கோரிக்கை, பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பெற்ற நிதி மற்றும் அக்கட்சியின் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.” என்று கூறினார் பிரியங்கா காந்தி.
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் கட்சி) தலைவர் சரத்பவார் பேசுகையில், “மத்திய அரசு டெல்லி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்களை கைது செய்தது. பல்வேறு மாநிலங்களில் பல தலைவர்களை சிறையில் அடைத்துள்ளது. இந்தச் செயல், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான தாக்குதல். அதை காப்பாற்றுவது நம் கடமை” என்றார்.
இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “இந்தியா கூட்டணியில் கேஜ்ரிவால் இணைந்ததால் தான் மத்திய பாஜக அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இது அப்பட்டமான சர்வாதிகாரம், அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை. அவரது கைதை அமெரிக்கா மற்றும் ஐநா சபை கண்டித்துள்ளது.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை பயன்படுத்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது மத்திய அரசு. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது. இந்தப் போரில் வென்று இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சியமைக்கும்” எனக் கூறினார்.
பங்கேற்றவர்கள் யார்?
இந்த பொதுக்கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கலந்துகொண்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)