You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீவிர புயலாக மாறும் 'மோன்தா' - சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (அக்டோபர் 26) மதியம் 2.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 780 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, 'இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து 28-ஆம் தேதி காலை தீவிர புயலாக உருவெடுக்க உள்ளது."
"மேலும் தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆந்திராவில் காக்கிநாடா அருகில் மச்சிலிபட்டணம் மற்றும் கலிங்கப்பட்டணம் இடையே 28-ஆம் தேதி மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கின்றபோது காற்றின் வேகம் 90-100 கிமீ என்கிற நிலையிலிருந்து 110 கிலோமீட்டர் வரை செல்லக்கூடும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
அக்டோபர் 26
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும்
அக்டோபர் 27
ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28
திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அக்டோபர் 28-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்திருக்கிறது. அப்போது தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 35-45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டலாம்.
ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் அக்டோபர் 29-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'மோன்தா' புயல்
இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, 'மோன்தா' என பெயரிடப்பட உள்ளது. புயல் உருவான பிறகே அந்த பெயரை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும். 'மோன்தா' என்ற பெயர் தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது ஆகும்.
புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?
உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை திகழ்கிறது.
உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.
டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.
பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன.
சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.
பெயர் சூட்டுவதற்கென உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஒரு நாடு தலா 13 பெயர்களை பரிந்துரைக்கலாம். இந்த பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு