You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: ராஜபக்ஸ குடும்பத்தை மக்கள் அரசியலில் இருந்து புறக்கணித்து விட்டார்களா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ், இலங்கை
நடந்து முடிந்த இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது.
இனி ராஜபக்ஸக்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
நான்கு ஆண்டுகளில் தலைகீழாக மாறிய இலங்கையின் அரசியல்
2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது மக்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தார்கள். 2015ல் நடந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்திரி பால சிறிசேன, இவர்களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கவில்லை.
மேலும், 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புகளும் மக்களிடம் பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் உருவாக்கியிருந்தன.
இந்தப் பின்னணியில்தான், 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பின் (Sri Lanka People's Freedom Alliance) சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஸ 69,24,255 வாக்குகளைப் பெற்று மகத்தான ஒரு வெற்றியைப் பெற்றார்.
அதற்கடுத்து 2020ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டமைப்பிற்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 68,53,690 வாக்குகளும் 145 இடங்களும் கூட்டமைப்பிற்குக் கிடைத்தன.
இந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வெறும் 4,18,553 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தது. அதையொட்டி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்கு நான்காவது இடமே கிடைத்தது. நாடாளுமன்றத்தில் அதற்கு மூன்று இடங்களே கிடைத்தன.
ஆனால், நான்கே ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாகிவிட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றதோடு, இப்போது நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வி
மாறாக ராஜபக்ஸக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. 225 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்தலில், மக்களால் தேர்வுசெய்யப்படும் தொகுதிகளில் இரண்டும் தேசியப் பட்டியலில் ஒன்றுமாக மொத்தம் 3 இடங்களையே இக்கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அக்கட்சிக்கு சுமார் 3,50,000 வாக்குகளே கிடைத்துள்ளன.
இந்த நிலையில்தான், ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் குறித்தும் அவர்களது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
"பொதுஜன பெரமுன மீள்வதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. குறைந்தது 15 - 20 ஆண்டுகள் ஆகலாம். தற்போது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் நல்ல பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில், ராஜபக்ஸக்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை, முறைகேடுகளை வெளியில் அம்பலப்படுத்தக்கூடும். அப்படியான சூழலில் ராஜபக்ஸக்கள் மீதான அதிருப்தி மேலும் அதிகரிக்கலாம். அப்படி நடந்தால் அவர்கள் வெளியில் வந்து அரசியல் செய்வது மிகவும் கடினம். ஒருவேளை தற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டால்கூட, அந்த அதிருப்தி இவர்களுக்கான ஆதரவாக உருமாறுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். சிவராஜா.
இலங்கை அரசியல் வரலாற்றில் ராஜபக்ஸக்களின் பங்கு
இலங்கையின் அரசியலில் மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1936லேயே இலங்கையில் ஸ்டேட் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் அம்பாந்தோட்டை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் டான் மேத்யூ ராஜபக்ஸ.
இவர் விரைவிலேயே காலமாகிவிட, இவருடைய சகோதரர் டான் ஆல்வின் ராஜபக்ஸ அரசியலில் களமிறங்கினார். 1947ல் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு சென்றார் டான் ஆல்வின்.
இந்த டான் ஆல்வினுக்கு சமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, ப்ரீத்தி, பசில், டட்லி, கந்தானி என ஒன்பது குழந்தைகள். இவர்களில் மூன்றாவது குழந்தையான மஹிந்தவும் ஐந்தாவது குழந்தையான கோட்டாபயவும் பிற்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியானார்கள்.
தன் தந்தை இறந்தவுடன் 21 வயதிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தார் மஹிந்த. படிப்படியாக உயர்ந்து 2005ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியானார் அவர்.
அவரது சகோதரர் கோட்டாபய, பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, இந்த சகோதரர்களின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டது. அதற்கு அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றி மஹிந்தவுக்குக் கிடைத்தது. இந்தத் தருணத்தில், இலங்கையின் மிக சக்தி வாய்ந்த குடும்பமாக மஹிந்தவின் குடும்பம் உருவெடுத்தது.
மீண்டு வந்த ராஜபக்ஸவுக்கு மீண்டும் தோல்வி
ஆனால், 2015ல் அவரது செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியே கிடைத்தது.
இந்தத் தருணத்தில்தான், தான் சார்ந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கியிருந்தார் மஹிந்த. ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தாலும் அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர்.
விரைவிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முரண்பாடு ஏற்பட, பிரதமராக நியமிக்கப்பட்டார் மஹிந்த. அந்த நியமனம் நீடிக்கவில்லையென்றாலும்கூட, அரசியலில் அவரது மறுவருகை தொடங்கிவிட்டதை இந்த நிகழ்வு உணர்த்தியது.
2019ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு, ஆளும் அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி கிடைக்க, தம்பி ஜனாதிபதியாக இருக்க அண்ணன் மஹிந்த பிரதமரானார்.
ஆனால், அதைத் தொடர்ந்த கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, அதையொட்டி கோட்டாபய எடுத்த சில அதிரடி முடிவுகள் நாட்டை மிகப் பெரிய நெருக்கடிக்கு தள்ளியது. இதையடுத்து உருவான மாபெரும் மக்கள் போராட்டத்தையடுத்து, மஹிந்தவும் கோட்டபயவும் பதவிவிலக நேர்ந்தது. இவர்களது செல்வாக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தது.
மோசமான ஆட்சியே காரணம்
"இப்போது ராஜபக்ஸ என்ற பெயரே மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திக்குரிய பெயராகிவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் சொந்தத் தொகுதியான முள்கிரிகல தொகுதியிலேயே அவர்களது கட்சி படுதோல்வி அடைந்தது. இவர்களுடைய செல்வாக்கு இந்த அளவுக்கு சரிய, கோட்டாவின் ஆட்சிக்காலம்தான் மிக முக்கியக் காரணம். நாட்டு மக்களின் மனநிலையை அறியாமல் முடிவுகளை எடுத்தார் அவர். ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்பட்டார்.
உதாரணமாக, ரசாயன உரத்திற்குப் பதிலாக இயற்கை உரத்தைப் பயன்படுத்த விவசாயிகளை நிர்பந்திக்கும் முடிவை யாரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்தார். அதேபோல, அரிசி ஆலை அதிபர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்றார். இது நடக்கவில்லை. அங்கேதான் இந்தச் சரிவு ஆரம்பித்தது. இலங்கையின் வரலாற்றிலேயே, அவர் விரட்டப்பட்டதைப் போல, ஒரு ஜனாதிபதி விரட்டப்பட்டதில்லை. அதற்குப் பிறகு இப்போதுவரை மக்களை அவரால் நேரடியாக சந்திக்க முடியவில்லை. மக்கள் அவர்களை முழுவதுமாக நிராகரித்துவிட்டார்கள். அதிலிருந்து இவர்கள் மீள்வதற்கான சாத்தியமே இல்லை" என்கிறார் சிவராஜா.
கொரோனா பரவலை அடுத்து சுற்றுலா வருவாய் குறைந்து இலங்கையின் அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ரசாயன உரங்களின் இறக்குமதிக்குத் தடை விதித்தார் அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய.
இது விவசாயத்தைக் கடுமையாகப் பாதித்தது. உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவே, அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. இதனால், அந்நியச் செலாவணி மேலும் குறைய ஒரு கட்டத்தில் எரிபொருள் வாங்கக்கூட டாலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. இதையடுத்து மக்கள் போராட்டத்தில் இறங்க கோட்டாபய ராஜபக்ஸவும் மஹிந்தவும் பதவியிலிருந்து விலகினர்.
"பாரம்பரிய தேசியக் கட்சிகளுக்கு இனி வாய்ப்பு குறைவு"
இதற்குப் பிறகு நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவால் ஓரளவுக்கு நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்றாலும் பொருளாதார நெருக்கடியின் போது உயர்ந்த விலைவாசி அப்படியே நீடித்தது. வேலைவாய்ப்பின்மையும் தொடர்ந்தது.
இந்த நிலையில்தான் மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன.
ராஜபக்ஸக்கள் மட்டுமல்ல பாரம்பரிய தேசியக் கட்சிகளைச் சேர்ந்த வேறு எந்தத் தலைவர்களுக்கும் இனி அரசியல் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதவில்லை என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியரான அகிலன் கதிர்காமர்.
"ராஜபக்ஸக்கள் மட்டுமல்ல, கொழும்பிலுள்ள மேட்டுக்குடி அரசியலிலேயே மொத்தமாக ஒரு பெரிய குழப்பம் வந்திருக்கிறது. இனி பழைய பாணியில் இவர்கள் மக்கள் அணுகுவது கடினமாகவே இருக்கும். தேசிய மக்கள் சக்தி மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லாவிட்டாலும்கூட, கடந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய கட்சிகளுக்கு மீண்டும் ஆதரவு கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. புதிதாக ஒரு வலதுசாரி சக்தி உருவாகலாம் என்றுதான் நினைக்கிறேன்" என்கிறார் அவர்.
ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?
"ராஜபக்ஸ குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குரியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் ராஜபக்ஸ குடும்பத்தினர் மீதும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவை நிரூபிக்கப்பட்டால், அவர்களது அரசியல் எதிர்காலம் பெரும் ஆபத்தில் சிக்கும். 2029ஆம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தல் மூலம் தனது மகன் நாமல் ராஜபக்ஸவை ஜனாதிபதியாக்க வேண்டுமென நினைத்தார் மஹிந்த. ஆனால், இந்தத் தேர்தலில் அவர்கள் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், இது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை. அநுரவின் ஆட்சியும் பொருளாதார நடவடிக்கைகளும் சிறப்பாக இருந்தால், பொதுஜன பெரமுனவின் அரசியலும் ராஜபக்ஸவின் குடும்ப அரசியலும் இல்லாமல் போகலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆ. நிக்ஸன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுவது என்ன?
ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூற்றுகளையெல்லாம் புறந்தள்ளுகின்றனர்.
"நாங்கள் இப்படி ஒரு பின்னடைவைச் சந்திப்பது இது முதல்முறையல்ல. 2015லும் இதே போன்ற பின்னடைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் பல தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். ஆனால், நாங்கள் மிக வலுவாகத் திரும்பிவந்தோம். மேலும் இந்தப் பின்னடைவு எங்களுக்கு மட்டும் ஏற்பட்டதைப் போல சொல்வது சரியல்ல. எல்லா பழைய, பாரம்பரிய கட்சிகளுமே தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்திருக்கின்றன. கடந்த தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களித்தவர்கள் இந்த முறை அநுரவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
வாக்குகள் அப்படியே இடம் மாறியிருக்கின்றன. இலங்கையின் அரசியல் கலாசாரம் மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. அதனை தேசிய மக்கள் சக்தி விரைவிலேயே புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட்டனர். அதுதான் அவர்களது வெற்றிக்குக் காரணம்" என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினரான மிலிந்த ராஜபக்ஸ.
இந்த தேர்தல் தோல்வியால் ராஜபக்ஸ குடும்பத்தினர் அரசியலைவிட்டு விலகிவிட மாட்டார்கள் எனக் குறிப்பிடும் மிலிந்த, மஹிந்த ராஜபக்ஸவும் சமல் ராஜபக்ஸவும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் நாமல் ராஜபக்ஸ கட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்கிறார். மேலும், அடுத்த ஐந்தாண்டுகளில் அரசியல் என்பது நாடாளுமன்றத்திற்கு உள்ளே நடப்பதைவிட, வெளியில்தான் அதிகம் இருக்கும். அதுவே இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)