You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தன்பாலின திருமணத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தால் என்ன நடக்கும்? நாளை தீர்ப்பு
- எழுதியவர், டீம் பிபிசி இந்தி
- பதவி, .
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளிக்கவுள்ளது.
LGBTQ சமூகத்தினர் இந்த தீர்ப்பை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர்.
தன்பாலின ஈர்ப்பாளரான அபிஷேக், டெல்லி ஐஐடியில் பிஎச்டி படித்துவருகிறார். 28 வயதான அபிஷேக், 28 வயது வழக்கறிஞரான சூரஜ் தோமரை ஒரு டேட்டிங் செயலியில் சந்தித்தார். இருவருக்கும் இடையே அறிமுகம் மற்றும் உரையாடல் தொடர்ந்தது. இது பின்னர் காதலாக மாறியது. இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறார்கள்.
தன்பாலின திருமணத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கும் என்பதில் இருவருக்கும் முழு நம்பிக்கை உள்ளது. "இரண்டு ஆண்களோ அல்லது இரண்டு பெண்களோ குழந்தைகளுக்கு அன்பைக் கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமானால், சுகாதாரம், வீட்டுக் கடன் போன்ற அரசு சலுகைகளை நாங்களும் பெற முடியும்,”என்று அவர்கள் தெரிவித்தனர்.
சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால் தங்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றும் இருவரும் கூறுகின்றனர். தன்பாலின திருமணம் தங்களது அடிப்படை உரிமை என்றும் அது தங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சமூகத்தை தன்பாலின ஜோடிகள் எப்படி நோக்குகின்றன?
நாக்பூரைச் சேர்ந்த 30 வயதான சுபோத், ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். 2011 ஆம் ஆண்டு தனது தன்பாலின ஈர்ப்பு பற்றி தனது அம்மாவிடம் அவர் கூறினார். “இதையெல்லாம் என் குடும்பத்தாரிடம் எப்படிச் சொல்வது என்று பயந்தேன். ஆனால் அதை என் குடும்பத்தாரிடம் சொன்னபோது எல்லோருமே அதை ஏற்றுக்கொண்டார்கள்,” என்று அவர் கூறினார்.
“377வது பிரிவு அங்கீகரிக்கப்பட்டுவிட்ட நிலையில் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படாதது ஏன்? தன்பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டால் எங்களை யாரும் சுரண்டலுக்கு உட்படுத்த முடியாது” என்றும் அவர் சொன்னார்.
குழந்தை தத்தெடுப்பு பற்றிப்பேசிய அவர்,"ஒற்றை பெற்றோர் குழந்தையை தத்தெடுக்க முடியும் என்றால் நாங்கள் ஏன் அதை செய்யக்கூடாது? குழந்தை ஒரு தந்தை அல்லது ஒரு தாயிடமிருந்து அன்பையும் பராமரிப்பையும் பெற முடியும் என்றால், ஒரே பாலின திருமணத்திற்குப் பிறகு இரண்டு தந்தைகள் மற்றும் இரண்டு தாய்களிடமிருந்து ஏன் அன்பை பெற முடியாது,” என்று வினவினார்.
தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் கிடைத்தாலும்கூட மக்களின் சிந்தனை மாற நீண்ட காலம் எடுக்கும் என்று சுபோத் கருதுகிறார்.
அரசிடம் தன்பாலின ஜோடிகள் என்ன எதிர்பார்க்கின்றன?
"எங்கள் கோரிக்கைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்றமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். அரசு மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. உச்சநீதிமன்றத்தை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் 377வது சட்டப்பிரிவு வழக்கில் கூட, உச்ச நீதிமன்றம்தான் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது,” என்று லெஸ்பியன், பை செக்ஷூவல், டிரான்ஸ்பெர்சன் நெட்வொர்க் இன்ஸ்டிடியூட் அமைப்புடன் தொடர்புடைய ரித்திகா தெரிவித்தார்.
அங்கீகாரம் இல்லாததால் சொந்த நாட்டை துறந்த தன்பாலின ஈர்ப்பாளர்
37 வயதான பொருளாதார நிபுணரான சாத்விக், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பிசினஸ் எகனாமிஸ்ட் பிரிவில் பிஎச்டி படித்து வருகிறார். அவர் 2020 ஆகஸ்ட் மாதம் இந்தியாவை விட்டுச்சென்றுவிட்டார்.
சாத்விக் 2007 இல் தனது முதுகலை பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். 2009 இல் தனது முதுகலை படிப்பை முடித்த அவர் அதன் பிறகு அங்கேயே வேலை செய்யத் தொடங்கினார். அவர் தனது நாட்டின் கலாசாரத்தை நேசித்ததால் லண்டனை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார்.
ஆனால் இங்கே அவர் தனது தன்பாலின பார்ட்னருடன் நிறைய சிரமங்களை எதிர்கொண்டார்.
தனது துணையுடன் வாழ வீடு கிடைக்கவில்லை என்றும், அதன் காரணமாக தனது துணையுடன் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
"எங்களிடையே எட்டு வருட உறவு இருக்கிறது. இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள இப்போதும் நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அனுமதித்தால் மட்டுமே அது நடக்கும்" என்று அவர் கூறினார்.
தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைக்காததால் பல ஜோடிகள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இதனால் நாடு பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர் கருதுகிறார்.
கொல்கத்தா கோவிலில் நடந்தேறிய தன்பாலின திருமணம்
மௌஷ்மி பானர்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்தவர், அவருக்கு வயது 35 மற்றும் அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறார். தான் ஒரு லெஸ்பியன் என்றும் கடந்த பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார். இவரது திருமணம் கொல்கத்தாவின் ஷோபா பஜாரில் உள்ள கோவிலில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
”தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்காததால் அரசின் மருத்துவ சேவைகள் கிடைக்காமல் தவிக்கிறோம். ஒவ்வொரு சாதாரண தம்பதிக்கும் கிடைக்கும் அரசு அளிக்கும் வசதிகள், எங்களுக்கும் கிடைக்க வேண்டும். என் மனைவிக்கு எந்த அரசு திட்டங்களின் பயனையும் அளிக்க முடியவில்லை,” என்றார் அவர்.
”திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் எங்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கும். காலப்போக்கில் மக்களின் சிந்தனை மாறும். மக்கள் எங்களை வேறுவிதமாகப் பார்க்க மாட்டார்கள். சமூகத்தில் சமமான மரியாதையைப் பெறமுடியும்,” என்று மெளஷ்மி குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்