You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாதுகாப்பான பாஸ்வோர்டை எப்படி உருவாக்குவது? மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? - எளிமையான வழி
டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, இணையவழிப் பணப்பரிமாற்றம் போன்ற செயல்களைத் தவிர்த்து விட்டு வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நமது தகவல்கள் மற்றும் பிற பரிமாற்றங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்றால் அதற்கு பாதுகாப்பான கடவுச் சொல் (பாஸ்வோர்ட்) வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது.
இதை வலியுறுத்தும் விதத்திலேயே,ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமையன்று உலக கடவுச் சொல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடவுச் சொல்லைப் பயன்படுத்துவதில் அதிக கவனமாக இருந்தால் மட்டுமே பொருளாதார இழப்புக்கள், இணையவழி பாதிப்புக்களில் இருந்து நாம் விலகி இருக்க முடியும். எனவே கடவுச் சொற்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்து நாம் சரியான புரிதலைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம்.
அமேசான், மிந்த்ரா போன்ற ஷாப்பிங் செயலிகளைப் பயன்படுத்துதல்- ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகித்தல்- அல்லது மின் அஞ்சல், இணைய வங்கிச் சேவைகள் என அனைத்துத் தேவைகளுக்கும் தனித்தனியாக கடவுச் சொற்களை நாம் உருவாக்கவேண்டியுள்ளது.
இது மட்டுமின்றி அந்த கடவுச் சொற்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பதும் அவசியம் என்ற நிலையில், அதற்காக நாம் சில எளிமையான கடவுச் சொற்களை உருவாக்க முயல்கிறோம். ஆனால், அது நமக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
எளிமையான கடவுச் சொற்களை எப்போதும் பயன்படுத்தக்கூடாது
நீங்கள் உருவாக்கும் கடவுச் சொற்களில் உங்களது பெயர், அல்லது பெயருடன் 123 என எண்களை வரிசையாக வைத்திருந்தால்- உதாரணமாக Sachin123 or Preeti@789, qwerty, asdfg போன்ற கடவுச்சொற்களை உருவாக்குவது- அவற்றை எளிதில் யாரும் கண்டுபிடித்துவிட முடியும். அதனால் தான் இது போன்ற கடவுச் சொற்கள் மோசமான கடவுச் சொற்கள் என அறியப்படுகின்றன.
உங்களது கடவுச் சொல்லில் எப்போதும் உங்கள் பெயரின் முதல் பகுதியோ, பின்பகுதியோ இருக்கக்கூடாது.
வெளிப்படையாக நாம் பயன்படுத்தும் பெயர்கள் எளிதில் பிறரால் கண்டுபிடிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. உங்களுடைய வீட்டின் பெயர் / கணவன்/ மனைவி/ குழந்தைகள்/ செல்லப்பிராணிகள்/ செல்லப்பிராணிக்கு நீங்கள் வைக்கவிரும்பும் பெயர், உங்களுடைய பிறந்த தேதி - ஆண்டு போன்றவற்றை கடவுச் சொற்களாகப் பயன்படுத்தக்கூடாது.
அதே போல் பழைய கடவுச் சொற்களை மீண்டும் பயன்படுத்துவதையும் தவிர்க்கவேண்டும்.
பாதுகாப்பான கடவுச் சொல் என்றால் என்ன?
பாதுகாப்பான கடவுச் சொல் என்றால், அது எளிதில் மற்றவர்கள் யூகிக்கக்கூடியதாக இல்லாமல் அதே நேரம் நீங்கள் அதை எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடியதாக இருக்கவேண்டும். உங்கள் கடவுச் சொல்லில் எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை இணைத்துப் பயன்படுத்தவேண்டும்.
அது போன்ற கடவுச் சொல்லை எப்படி எளிமையாக உருவாக்குவது?
உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல், வசனம் அல்லது பழமொழிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பான கடவுச் சொற்களை உருவாக்கலாம்.
உதாரணமாக ஒரு கடவுச் சொல்லைப் பார்ப்போம்.
Twinkle Twinkle Little Star...
இந்த நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்- அதில் ஒரே ஒரு எழுத்தை மட்டும் பெரிய எழுத்தாக வைத்து மற்ற எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாக மாற்றுங்கள். அது இப்படி இருக்கும்: Ttls
இதனுடன் ஒரு குறியீட்டைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அது இப்படி இருக்கும்: Ttls*
இது எளிமையாக நினைவில் வைக்கக்கூடிய ஒரு கடவுச் சொல் தானே?
ஆக, உங்களுடைய கடவுச் சொல் இதுதான்: Ttls*
இத்துடன் நீங்கள் எளிமையாக நினைவில் வைக்கக்கூடிய எண்களையும் சேர்க்கலாம். நீங்கள் முதன் முதலில் வாங்கிய ஆனால் இப்போது பயன்படுத்தாத இருசக்கர வாகனத்தின் பதிவு எண், உங்களுடைய பிறந்த நாள் போன்ற தேதிகளைத் தவிர்த்து வேறு ஏதாவது முக்கிய தேதி / ஆண்டு போன்றவற்றைச் சேர்க்கலாம்.
இப்படி நாம் ஒரு பாதுகாப்பான கடவுச் சொல்லை உருவாக்கியுள்ளோம். அது இப்படி இருக்கும்: Ttls*2208
இது போல் நீங்கள் உருவாக்கும் கடவுச் சொற்களை நிச்சயமாக நினைவில் வைக்கமுடியும் என்றாலும், இது போன்ற கடவுச் சொற்களை பிறர் யாரும் எளிமையாக கண்டுபிடிக்க முடியாது.
கடவுச் சொற்களைப் பயன்படுத்தும் போது நினைவில் வைத்திருக்கவேண்டிய செயல்கள்
ஒரே கடவுச் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட பல கணக்குகளுக்குப் பயன்படுத்தாதீர்கள். உதாரணமாக மின் அஞ்சல், சமூக வலைதள கணக்கு, இணையவழி வங்கிப் பரிவர்த்தனை போன்ற அனைத்து செயல்களுக்கும் ஒரே கடவுச் சொல்லை வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்திருந்தால், ஏதாவது ஒரு இடத்தில் உங்களுடைய கடவுச் சொல்லை ஒருவர் திருடிவிட்டாலும், அதை வைத்தே அனைத்து கணக்குகளிலும் அவர் ஊடுறுவ முடியும்.
இதே போல் பல்வேறு கணக்குகளை இயக்க ஒரு குறிப்பிட்ட கடவுச் சொல்லை மட்டுமே பயன்படுத்துவதையும் தவிர்க்கவேண்டும். மேலும், நீங்கள் உங்களுடைய கடவுச் சொல்லை உங்கள் செல்ஃபோன் போன்ற ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பெடுத்து வைத்தால், அங்கே உள்நுழைவதற்கான ஐடி மற்றும் கடவுச் சொல்லை ஒரே இடத்தில் குறிப்பிட்டு வைத்திருக்காதீர்கள்.
ஒருவேளை நீங்கள் உங்களுடைய கடவுச் சொல்லை எங்காவது எழுதிவைக்கவேண்டும் என்றால், அதை உங்களுடைய மேசையிலேயே வைத்திருக்காதீர்கள். யாருடைய கண்களுக்கும் தெரியாத மாதிரி வேறு எங்காவது அதை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொதுவான கணினியில் உள்ள பிரவுசரில் கடவுச் சொல்லை சேமித்து வைக்காதீர்கள். மீண்டும் ஒரு முறை உள்நுழைவதற்கு வசதியாக இருக்கும் என பலர் இது போல் சேமித்து வைக்கின்றனர். உதாரணமாக அலுவலகங்களில் உள்ள கணினிகளை பலர் பயன்படுத்தும் போது, பிரவுசரில் சேமித்து வைக்கப்படும் கடவுச் சொற்களை மற்றவர்களும் பயன்படுத்த முடியும்.
நீங்கள் உங்களுக்கென்றே தனியாக வைத்திருக்கும் மடிக்கணினியில் கடவுச் சொற்களைச் சேமித்து வைத்திருந்தாலும், அதை யாராவது திருடிச் சென்றால் உங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இரண்டு அடுக்கு பாதுகாப்பு
இரண்டடுக்கு பாதுகாப்பு என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், அது நீங்கள் ஏற்கெனவே பூட்டிவைத்திருக்கும் பிரதான கதவுக்கு முன்னாள் உள்ள மற்றுமொரு பாதுகாப்பு கதவு என வைத்துக்கொள்ளலாம்.
இந்த முறையில் நீங்கள் கடவுச் சொற்களைப் பயன்படுத்தும் போது, அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு உங்களால் ஒரு கணக்கில் உள்நுழைய முடியாது. உங்களுடைய செல்ஃபோனை உங்கள் கணக்குடன் இணைத்து வைத்துக்கொண்டால், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய புதிய கடவுச் சொல் ஒன்று உங்கள் செல்ஃபோனுக்கு அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு முறை உங்கள் கணக்கில் உள்நுழையும் போதும் இதே போன்று இரண்டு கடவுச் சொற்களைப் பயன்படுத்தித் தான் உங்கள் பணிகளை மேற்கொள்ள முடியும்.
சில இடங்களில் நீங்கள் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையும் போது உங்கள் செல்ஃபோனில் ஒரு எண் தோன்றும். அந்த எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே நீங்கள் உள்நுழைய முடியும். இந்த வகையில் உங்கள் கணக்குகளில் நீங்கள் உள்நுழையும் போது, உங்களைத் தவிர வேறு யாருக்கும் அது சாத்தியமில்லை.
கடவுச் சொல் மேலாண்மை
நீங்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனி கடவுச் சொற்களை உருவாக்கும் போது, குறைந்தது 7 அல்லது 8 கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்கவேண்டிய தேவை உள்ளது. இது ஒரு எளிமையான செயல் அல்ல. இது போன்ற நிலைகளில் கடவுச் சொல் மேலாண்மை மூலம் நீங்கள் எளிதில் செயல்பட முடியும்.
இதற்கான மென்பொருள் மூலம் நீங்கள் உங்களுக்கான தனிப்பட்ட கடவுச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்த முடியும். நீங்கள் பயன்படுத்தும் கடவுச் சொல் பாதுகாப்பானது அல்ல என்றாலும் இந்த மென்பொருள் அதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவரும்.
நீங்கள் நினைவில் வைத்திருக்கவேண்டிய பிற தகவல்கள்
நாம் நமது செல்ஃபோன்களில் ஏராளமான செயலிகளை நிறுவிவைத்துள்ளோம். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கடவுச் சொற்களை வைத்திருப்பதற்குப் பதிலாக, நமது கூகுள் மெயில் அல்லது ஃபேஸ்புக் மூலம் உள்நுழைவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இப்படி நீங்கள் செய்யும்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் கூகுள் மெயில், ஃபேஸ்புக் போன்றவற்றை கண்காணிக்கவேண்டும். எத்தனை செயலிகளுடன் உங்கள் கூகுள் மெயில் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை இணைத்து வைத்துள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டிருப்பதோடு, நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை இந்த இணைப்பில் இருந்து துண்டித்துவிடவேண்டும். இல்லை என்றால் உங்களது செல்ஃபோன், மடிக்கணினி போன்றவற்றிலிருந்து அந்த செயலிகளை அழித்துவிடவேண்டும்.
இதே போல் ஒரு செயலியில் நீங்கள் உங்களுடைய செல்ஃபோன், மடிக்கணினி போன்ற பல்வேறு சாதனங்களின் மூலம் உள்நுழைவு செய்து வைத்திருந்தால், எங்கெல்லாம் நீங்கள் உள்நுழைவு செய்துவைத்துள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அந்த செயலியைப் பயன்படுத்துவதில்லை என்றாலோ, அதை அழித்தாலோ, அனைத்து சாதனங்களிலும் அந்த செயலியிலிருந்து வெளியேறுவதையும் மறந்துவிடாதீர்கள்.
பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் கை ரேகை, முகம், கருவிழியைப் பயன்படுத்தி உங்கள் கணக்குகளில் உள்நுழைய முடிகிறது. இவற்றைப் பயன்படுத்தியும் உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்.
உங்களுடைய எந்த ஒரு கணக்கிலும் கடவுச் சொல்லை மறந்துவிட்டால், அல்லது திருடப்பட்டால் அந்த கணக்கை மீட்பதற்கான வழிகள் இருக்கின்றன. உங்கள் கணக்கை உருவாக்கும் போது நீங்கள் அளிக்கும் மின் அஞ்சல் மற்றும் செல்ஃபோன் எண்களைக் கொண்டு அவற்றை மீட்க முடியும். அதனால் எப்போதும் இந்த விவரங்களை அவ்வப்போது சரிபார்ப்பதையும் நினைவில் வைத்திருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்