You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'20 பேர் பலியான விபத்தில் பேருந்தை கொழுந்து விட்டெரிய செய்த ஸ்மார்ட்போன்கள்' - புதிய தகவல்
- எழுதியவர், சேஹர் அசாஃப்
இந்தியாவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்போன்களே தீ வேகமாக பரவக் காரணம் என்று தடயவியல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை, பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதன் எரிபொருள் டேங்க் உடைந்து, பின்னர் வெடிப்பு ஏற்பட்டதால் பேருந்து முழுவதும் தீப்பற்றியது.
பேருந்தின் உள்ளே சுமார் 40 பயணிகள் இருந்தனர். தீ வேகமாகப் பரவியதால் அவர்கள் தப்பிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும், பேருந்துக்குள் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் விரைந்து செயல்பட்டு மீட்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
"பேருந்தில் 234 செல்போன்கள் இருந்திருக்கின்றன. அவை சரக்குப் பெட்டகம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்திருக்கலாம்" என தடயவியல் அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.
"பேருந்தில் இருந்த பேட்டரிகள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் செல்போன்கள் போன்றவை தீயை மேலும் பரவச் செய்து, இந்தத் துயரச் சம்பவத்துக்கு வழிவகுத்தன" என கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் படேல் தெரிவித்ததாக சிஎன்என் நியூஸ் 18 செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ஆந்திரப் பிரதேச தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பி. வெங்கடராமன் கூறுகையில், "பேருந்தின் ஏர் கண்டிஷனிங் அமைப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மின் பேட்டரிகளும் வெடித்து தீயை மேலும் மோசமாக்கியது" என்றார்.
இதுகுறித்துப் பேசியபோது, "உருகிய இரும்பு ஷீட் வழியே எலும்புகளும் சாம்பலும் விழுவதை நாங்கள் கண்டோம்," என்று அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ. 4.6 மில்லியன் (சுமார் 39,000 யூரோ அல்லது 52,000 டாலர்) மதிப்புடையவை என்றும், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருவில் உள்ள ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் என்டிடிவி செய்தி கூறுகிறது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் உள்ளன. அவை சேதமடைந்தால் தீப்பற்றும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம், அவை கட்டுப்படுத்த முடியாத வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இது ஒரு பேட்டரியிலிருந்து அருகிலுள்ள பிற பேட்டரிகளுக்கும் பரவும். இதனை வழக்கமான தீயணைப்பு முறைகளால் நிறுத்துவதும் கடினம்.
இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது விபத்துக்குக் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இறந்தவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, உலகிலேயே இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு