திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தேர்தலில் வெற்றி - தோல்வியை முடிவு செய்யுமா?

மலை உச்சியில் இருப்பது விளக்குத்தூணா சர்வே கல்லா என்பதில் விவாதம் உள்ளது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் கடந்த டிசம்பர் மாதம் அந்தப் பகுதியையே பதற்றத்திற்கு உள்ளாக்கியது. நான்கு மாதங்களே கழிந்திருக்கும் நிலையில், நடக்கும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த விவகாரம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்?

மதுரை நகரிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம்.

திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் என பல பழங்கால தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள ஒரு பகுதி இது. இப்படி நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இந்தத் திருப்பரங்குன்றம், கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பெரும் சர்ச்சையின் மையமாக உருவெடுத்தது.

2025-ஆம் ஆண்டின் கார்த்திகை மாதம் நெருங்கியபோது, திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்கும் தர்காவில் இருந்து சற்றுத் தூரத்தில் உள்ள தூண் ஒன்றில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோர ஆரம்பித்தன. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு சாதகமான தீர்ப்பும் வழங்கப்பட்டது.

ஆனால், இது ஒரு புதிய வழக்கம் எனக் கூறிய இந்து சமய அறநிலையத் துறை அந்தத் தூணில் தீபம் ஏற்ற மறுத்தது.

இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் குவிந்தனர். இதற்கடுத்த சில நாட்களுக்கு பதற்றம் நிறைந்த பகுதியாக விளங்கியது திருப்பரங்குன்றம்.

இப்போது நான்கு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில், 2026ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது மதுரை நகரம் முழுவதுமே இது குறித்த பேச்சாக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் இந்த விவகாரம் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

திருப்பரங்குன்றம் மலை

வேட்பாளர்கள் யார்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி, என்னதான் மதுரைக்கு நெருக்கமாக இருந்தாலும், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி.

இந்தத் தொகுதியில் இதுவரை நடந்திருக்கும் 17 தேர்தல்களில் (2 இடைத் தேர்தல்கள் உட்பட) ஐந்து முறை மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்றிருக்கிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.கவின் ராஜன் செல்லப்பாவே, இந்த முறையும் அக்கட்சியின் சார்பில் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து தி.மு.கவின் சார்பில் கிருத்திகா தங்கபாண்டி போட்டியிடுகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சி.டி.ஆர். நிர்மல்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்தியா தேவி என்பவர் களத்தில் இறங்கியிருக்கிறார்.

சின்ன அனுப்பானடி, அவனியாபுரம், திருநகர் , திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி போன்ற பகுதிகளைவிட்டுவிட்டால், பெரும்பாலும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதி இது.

பெரும்பாலானவர்கள் குடிசைத் தொழில்கள், விவசாயம் போன்றவற்றைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

"இந்தத் தொகுதிக்கென தனிப்பட்ட பிரச்சனைகள் என எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நகரமயமாக்கல் வேகமாக நடந்துவருவதால், அதற்கேற்றபடி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமெனச் சொல்லலாம். மதுரை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொகுதிகளில் எல்லாமே, மதுரைக்கென உள்ள பொதுவான பிரச்னைகளையே எதிரொலிக்கும். திருப்பரங்குன்றத்திலும் அப்படித்தான்" என்கிறார் மதுரையைச் சேர்ந்த செயற்பாட்டாளரான ஆ. முத்துகிருஷ்ணன்.

மதம் சார்ந்த பிரச்னைகளை அரசு தணிக்க வேண்டும் என்கிறார் பாசித்
படக்குறிப்பு, மதம் சார்ந்த பிரச்னைகளை அரசு தணிக்க வேண்டும் என்கிறார் பாசித்

மக்கள் கூறியது என்ன?

இந்த நிலையில், பிபிசியின் 'உங்கள் குரல்' நிகழ்ச்சிக்காக மதுரை மாவட்ட வாக்காளர்களிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது பலர் மத விவகாரங்களை அரசியலாக அணுகக்கூடாது என்றே தெரிவித்தனர்.

"மதம் சார்ந்த பிரச்னைகளை அரசியலாக்க வேண்டாம். ஆன்மிக உணர்வு எல்லோருக்கும் இருந்தாலும் இதில், அரசியல் தேவையில்லை" என்று தெரிவித்தார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பரசுராமன்.

இளைஞரான அப்துல் பாசித், "மதம் சார்ந்த பிரச்னைகள் எழுவதை தணிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ஆனால், சில அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவே விரும்பின.

குறிப்பாக, அ.தி.மு.கவுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.கவைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தவே நினைத்திருக்கிறது.

தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த பிரதமர் மோதி, திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றார்.

இதற்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தீபம் பிரச்னைக்காக இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக நினைவு கூர்ந்தார்.

"பூரணசந்திரன் என்ற இளம் பக்தர் உயிர்த் தியாகம் செய்தார் என்பதை நினைத்துப் பார்த்தேன். அவரது மனைவி இந்துமதியையும் அவரது இரு குழந்தைகளையும் சந்தித்தபோது அவர்களின் துக்கத்தை என்னால் உணர முடிந்தது. தி.மு.க. அரசின் நியாயமற்ற தன்மையால்தான் இது நடந்திருக்கிறது, தி.மு.க. என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்" என்று குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்றார்.

திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்த பின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோதி
படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்த பின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோதி

கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, தனது பிரசாரத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்னையை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், பா.ஜ.கவின் நிலைப்பாட்டை ஒட்டியே தனது நிலைப்பாட்டையும் வைத்திருக்கிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான ராஜன் செல்லப்பா, "நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றும் வகையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும்" என்று தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டார்.

ஆனால், தி.மு.கவைப் பொறுத்தவரை இந்த விவகாரம் சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருதுகிறது.

பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "திருப்பரங்குன்றம் விவகாரம் தேர்தலில் எதிரொலிக்காது" என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிதாகக் களமிறங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகமும் இதேபோன்ற கருத்தையே கொண்டிருக்கிறது.

பிபிசியிடம் பேசிய அந்தக் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதியின் வேட்பாளரான சி.டி.ஆர். நிர்மல்குமார், "மதரீதியான உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை திருப்பரங்குன்றம் மக்கள் எடுக்க மாட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் எப்படி இருந்ததோ அப்படி இருப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக" குற்றம் சாட்டினார்.

அதே நேரத்தில் தி.மு.க. மீதும் குற்றம்சாட்டுகிறார் அவர்.

"சிறுபான்மையினர் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த பிரச்னையை வளர அனுமதித்தது தி.மு.கதான்" என்கிறார் அவர்.

பா.ஜ.கவும் தி.மு.கவும் ஒரே குரலில் இது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விஷயமே அல்ல என்கிறார்கள்.

பிபிசியிடம் இது குறித்துப் பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் என்பது தேர்தல் தொடர்பானது அல்ல. இது முழுக்க முழுக்க இந்துக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விவகாரம். இதனை யாரும் தேர்தல் பிரச்னையாகவே பேசவில்லை. ஆகவே இதற்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை" என்கிறார்.

தி.மு.கவும் இதே பாணியில்தான் இந்த விவகாரத்தை அணுகுகிறது.

"சட்டப்பேரவைத் தேர்தலில் இது ஒரு பிரச்னையே கிடையாது. காரணம், இந்த விவகாரம் அங்குள்ள மக்களின் பிரச்னை அல்ல அது. வெளியிலிருந்து வருபவர்கள்தான் பிரச்னையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அது ஒரு விஷயமே அல்ல. அது எடுபடவும் செய்யாது" என்கிறார் தி.மு.கவின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ். பாரதி.

திருப்பரங்குன்றம்

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஆனால், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரான வாஞ்சிநாதன், இந்த விவகாரம் தேர்தலில் ஒரு சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.

"திருப்பரங்குன்றம் விவகாரத்தில், பா.ஜ.கவைப் பொறுத்தவரை தி.மு.க. அரசு கார்த்திகை தீபமே ஏற்றவிடாமல் தடுப்பதாக பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், தீபம் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் ஏற்றப்பட்டது. இந்த விஷயத்தைக்கூட தி.மு.க. தனது பிரசாரத்தில் சொல்வதில்லை. பா.ஜ.கவின் பிரசாரம் பல இடங்களுக்கும் சென்று சேர்கிறது. ஆனால், தி.மு.க. இதற்குப் பதில் சொல்லாமல் ஒதுங்கியே இருக்கிறது. ஆகவே, இது தேர்தலில் ஒரு சிறிய அளவிலாவது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் விவகாரமாக இது இருக்காது" என்கிறார் அவர்.

ஆனால், மதுரையைச் சேர்ந்த செயற்பாட்டாளரான ஆ. முத்துகிருஷ்ணன், இது தேர்தல் விவகாரமாகவே ஆகவில்லை என்கிறார்.

"பிரதமர் இந்த விவகாரத்தை லேசாகப் பேசினார் என்றாலும்கூட, கீழ்மட்டத்தில் அதை வைத்துப் பிரசாரம் நடப்பதில்லை. ராஜன் செல்லப்பாவைப் பொறுத்தவரை யாராவது பேட்டிகளில் இது தொடர்பாக கேள்வி கேட்டால், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவோம் என்று சொல்கிறாரே தவிர, அவராக இதைப் பேசுவதில்லை. அவர் இதுவரை ஐந்து துண்டறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். ஐந்திலும் திருப்பரங்குன்றம் தீபம் குறித்து ஏதும் கிடையாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தைத் தொட வேண்டாம் என நினைக்கிறார்கள்" என்கிறார் அவர்.

சிக்கந்தர் அவுலியா தர்கா
படக்குறிப்பு, சிக்கந்தர் அவுலியா தர்கா

திருப்பரங்குன்றம் பிரச்னையின் பின்னணி என்ன?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் ஒரு புறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றும் நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சற்று மேலே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள தீப மண்டபத்தில், கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது, தர்காவிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு தூணின் மீதுதான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் அவ்வப்போது முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரான ராம. ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கார்த்திகை தினத்தன்று அதாவது டிசம்பர் 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென டிசம்பர் 2ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, டிசம்பர் மூன்றாம் தேதி திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யாரும் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து தூணில் தீபம் ஏற்றாத விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக டிசம்பர் 4ஆம் தேதி எடுத்துச் சென்றார் ராம. ரவிக்குமார். இதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இராம. ரவிக்குமார் மற்றும் 10 பேர் கார்த்திகை தீபம் ஏற்ற காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு என டிசம்பர் 16ஆம் தேதி குறிப்பிட்டார் நீதிபதி.

இந்த நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 6 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு