மேற்கு வங்கத்தில் பாபர் மசூதிக்கு அடிக்கல்: திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ ஹுமாயுன் கபீர், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் 'பாபர் மசூதி' என்ற பெயரில் ஒரு புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டினார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பெல்தாங்காவை ஒட்டியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் இணைந்து, அடிக்கல் நாட்டியதற்கு அடையாளமாக அவர் ரிப்பன் வெட்டினார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பரத்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ தான் ஹுமாயுன் கபீர்.
டிசம்பர் 6-ஆம் தேதி பரத்பூரில் உள்ள பெல்தாங்காவில் 'பாபர் மசூதி' கட்டுவதற்கு தான் அடிக்கல் நாட்டப்போவதாக அவர் கடந்த சில நாள்களாகவே கூறிவந்துள்ளார்.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கண்டிப்பாக மசூதியை கட்டுவதாக ஹுமாயுன் கபீர் கூறியிருந்தார். டிசம்பர் 22-ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
ஹுமாயுன் கபீர் வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய திரிணாமுல் காங்கிரஸ், அவரைக் கட்சியிலிருந்து நீக்கியது.
ஹுமாயுன் கபீர் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மசூதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் 'அயோத்தி பாபர் மசூதியின் மாதிரியில்' கட்டப்படவுள்ள மசூதிக்கு ஹுமாயுன் கபீர் அடிக்கல் நாட்டினார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடிக்கல் நாட்டியதற்கு அடையாளமாக, விருந்தினர்களாக வந்திருந்த மதகுருக்களுடன் சேர்ந்து கபீர் ரிப்பனை வெட்டினார்.
இந்த நேரத்தில், "நாரா-இ-தக்பீர், அல்லாஹு அக்பர்" என்ற கோஷங்கள் அரங்கில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அங்கு காலையிலிருந்து ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
அடிக்கல் நாட்டு விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் பேசிய ஹுமாயூன் கபீர், "முர்ஷிதாபாத் பெல்தாங்காவில் தனித்துவமிக்க பாபர் மசூதி கட்டப்படும் என ஓராண்டுக்கு முன்பே அறிவித்திருந்தேன். இன்று டிசம்பர் 6-ஆம் தேதி மதியம் 1:10 மணிக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அடிக்கல் நாட்டினர்." என்றார்.
மேலும், "மசூதியுடன் சேர்த்து, இஸ்லாமிய மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, ஹோட்டல்-உணவகம், பூங்கா, ஹெலிபேட் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் செய்து முடிக்க 300 கோடி ரூபாயில் திட்டம் உள்ளது. எனக்கு உறுதுணையாக இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தை என்றும் மறக்க மாட்டேன். அவர்களுக்கு நன்றி." என்றும் அவர் கூறினார்.
' நெருப்போடு விளையாடுகிறார்'

பட மூலாதாரம், ANI
இந்த மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படுவதற்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் வகுப்புவாத பிரிவினையை உருவாக்குகிறது என்று பாஜக குற்றம் சாட்டியது.
பாஜக தலைவர் அமித் மாளவியா, "மமதா பானர்ஜி, அரசியல் லாபத்திற்காக முஸ்லிம் மக்கள் உணர்வுகளை திரட்ட 'இடைநீக்கம் செய்யப்பட்ட' எம்எல்ஏ ஹுமாயூன் கபீரை பயன்படுத்துகிறார். மமதா பானர்ஜி நெருப்போடு விளையாடுகிறார்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பெல்தாங்காவிலிருந்து வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
பாபர் மசூதி என்று அவர் வர்ணித்த கட்டடத்தின் கட்டுமானத்திற்காக கபீரின் ஆதரவாளர்கள் செங்கற்களை எடுத்துச் சென்றதாக மாளவியா கூறினார்.
தனக்கு காவல்துறையின் ஆதரவு இருப்பதாக ஹுமாயுன் கபீர் கூறியதாக மாளவியா தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸில் இருந்து ஹுமாயுன் கபீர் நீக்கப்பட்டதையடுத்து, மமதா பானர்ஜி திட்டமிட்டே வகுப்புவாத பிரிவினையை உருவாக்குகிறார் என்று மேற்கு வங்க பா.ஜ.க கூறியது.
ஹுமாயூன் கபீர் இந்துக்களை எச்சரிக்கும் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறும் பாஜக, அவரை வெளியேற்றிய முடிவைக் கேள்வி எழுப்பியுள்ளது. ''முர்ஷிதாபாத்தில் 70 சதவீதம் இஸ்லாமியர்கள், 30 சதவீதம் இந்துக்கள் என்று அவர் சொன்னபோது அவரை ஏன் மமதா பானர்ஜி வெளியேற்றவில்லை.'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறது.
மே 2024-இல், மக்களவைத் தேர்தலின்போது, "முர்ஷிதாபாத் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் முஸ்லிம்கள். பாஜக ஆதரவாளர்கள் பாகீரதி ஆற்றில் வீசப்படுவார்கள்." என்று ஹுமாயுன் கபீர் கூறியிருந்தார்.
"ஹுமாயூன் கபீரிடம் இருந்து தன்னைப் விலக்கிக் கொள்கிறார் என்றாலும், மமதா பானர்ஜி முஸ்லிம்களை திரட்ட முயற்சிக்கிறார். பெல்தாங்காவில் மசூதிக்காக முஸ்லிம்கள் கற்களை ஏந்திச் செல்கிறதைக் காண்கிறோம்," என்று மேற்கு வங்க பாஜக எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
பாஜக மற்றும் திரிணாமுல் என்ன சொல்கின்றன?

மசூதிக்கு அடிக்கல் நாட்டுவது குறித்து மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளாக மமதா பானர்ஜியின் திருப்திப்படுத்தும் மற்றும் மதவாத அரசியலின் விளைவை இன்று நாம் காண்கிறோம். இதற்கு மமதா பானர்ஜியின் முழு ஆதரவு உள்ளது. இன்றும் ஹுமாயுன் கபீர் காவல்துறையினரிடம் முழு ஒத்துழைப்பு பெறுகிறார்." என்றார்.
"பாபர் மசூதி கட்டப்படுவதை மமதா பானர்ஜி உண்மையில் விரும்பவில்லை என்றால், அவர் ஹுமாயுன் கபீரை கைது செய்திருக்க வேண்டும். பாஜகவினர் ஒரு நிகழ்ச்சியை நடத்தும்போது, போலீசார் மேடையை கூட அகற்றுகிறார்கள், அது ஏன் இங்கு நடக்கவில்லை?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
'வெறும் நாடகமே'
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷ் கூறுகையில், "பாஜகவுக்கு நாங்கள் சொல்லிக்கொள்ளும் ஒரே விஷயம் 'கேலா ஹபே' (ஆட்டம் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்தும் வங்க மொழி சொல்லாடல்). 2026-இல் மமதா பானர்ஜி நான்காவது முறையாக வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பார். ஏனெனில் மேற்கு வங்க மக்கள் அவருடன் இருக்கிறார்கள். மேலும் அவர் மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றி பெறப் போகிறார்" என்றார்.
''யார் வேண்டுமானாலும் கோவில் கட்டலாம், யார் வேண்டுமானாலும் மசூதி கட்டலாம், ஆனால் இதன் பின்னணியில் மதக் கலவரத்தை பரப்பும் நோக்கம் யாருக்காவது இருந்தால், அவர்கள் பாஜகவிடமிருந்து நிதியுதவி பெறுவார்கள் என்றும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்க பாஜக அவர்களைத் தூண்டிவிடும் என்றும் எல்லோருக்கும் தெரியும்.'' என அவர் கூறினார்
யார் இந்த ஹுமாயுன் கபீர்?

பட மூலாதாரம், ANI
62 வயதான ஹுமாயுன் கபீர் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2012 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்ற ஒரு வருடம் கழித்து, அவர் காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார்.
ஆனால், 2015-ஆம் ஆண்டு, கட்சிக்கு எதிராகப் பேசியதற்காக ஹுமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
2018-ஆம் ஆண்டில், ஹுமாயுன் கபீர் பாஜகவில் இணைந்து முர்ஷிதாபாத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021-இல், அவர் திரிணாமுல் காங்கிரஸுக்குத் திரும்பினார்.
இப்போது சமீபத்திய சர்ச்சைக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கவில்லை என்றும், 2026 தேர்தலுக்குப் பிறகு மமதா பானர்ஜி முதல்வராக முடியாது என்றும் ஹுமாயுன் கபீர் கூறியிருக்கிறார்.
"2011-ல் மமதா பானர்ஜி முதலமைச்சரானபோது மாநிலத்தில் 400 ஆர்.எஸ்.எஸ் கிளைகள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 12,000 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதல்வர் யாருக்காக உழைக்கிறார் என்பது நிரூபணமாகிறது. ஜெகநாதர் கோயிலை கட்டுவதற்கு அரசின் கருவூலத்தை செலவிட்டது யார்? அப்படியென்றால் மசூதி கட்ட ஆசைப்பட்டதற்கு என் மீது ஏன் இவ்வளவு கோபம்?" என்றும் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
ஹுமாயுன் கபீர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் பரத்பூர் எம்எல்ஏ-வாக இன்னும் தொடர்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












