அன்புமணியுடன் வெடித்த மோதல் - ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்ன?

அன்புமணியுடன் வெடித்த மோதல் - ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல் இன்று வெடித்துள்ளது.

சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையில் மைக்கை வீசிவிட்டுச் சென்றார். மறுநாள் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்ட, தங்களுக்கு இடையில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினாலும், கட்சியை யார் வழிநடத்தப் போகிறர்கள் என்ற விவாதம் இருந்துக் கொண்டே இருந்தது.

பனையூரில் தனி அலுவலகம் தொடங்கி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அன்புமணி அங்கு சந்தித்து வந்தார்.

பிறகு கடந்த ஏப்ரல் மாதம் "நானே கட்சியின் தலைவர்" என்று ராமதாஸ் அறிவித்தார். அது வரை தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக அறிவித்தார்.

தன்னை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது குறித்து வருத்தம் தெரிவித்து தருமபுரியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி, "நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், நான் என்ன தவறு செய்தேன்" என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன் என்றும் ராமதாஸ் கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு