ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கை எதிரொலி - முதலீட்டாளர்களுக்கு செபி கூறியது என்ன?

ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கை எதிரொலி - முதலீட்டாளர்களுக்கு செபி கூறியது என்ன?

அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்தக் குற்றாச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர்.

அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் தனிநபர் ஆவணங்களை மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது.

செபி தலைவர் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இருவரும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுடைய வாழ்க்கையும் நிதிப் பரிமாற்றங்களும் திறந்த புத்தகம் போல வெளிப்படையானவை,” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள அதானி குழுமமும் தனது அறிக்கையில் அவை ஆதாரமற்றவை எனவும் அவை ஏற்கெனவே விசாரிக்கப்பட்டுவிட்டன என்றும் கூறியுள்ளது.

இந்த விஷயத்தில் செபி தனது தரப்பு விளக்க அறிக்கையை அளித்துள்ளது. அதில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், "அதானி குழுமத்திற்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், செபியால் முறையாக விசாரிக்கப்பட்டன, இந்தக் கூற்றுகள் பொருத்தமற்றவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை சொல்வது என்ன?

அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியா இன்ஃபோலைனின் ‘இ.எம். ரீசர்ஜண்ட் ஃபண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்’ நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செபி தலைவர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இவ்வாறு செயல்பட்டுள்ளதால், செபியின் வெளிப்படைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. செபி தலைமை மீது இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி தொடர்பான தகவல்கள் மிகவும் தெளிவற்றதாகவும் சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டதாகவும் இருப்பதாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.

மாதபி பூரி புச்சின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் செபியின் தலைவராக அவருடைய பங்கு ஆகியவை குறித்து இந்த அறிக்கை கேள்விகளை எழுப்பியுள்ளது. அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.

மாதவி-தவல் தம்பதி விளக்க அறிக்கை

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் கூட்டாக ஒரு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், “ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதியில் செய்யப்பட்ட முதலீடு 2015-இல் அவர்கள் [மாதபி மற்றும் தவல் புச்] இருவரும் சிங்கப்பூர் குடிமக்களாக இருந்தபோது செய்யப்பட்டது,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “மாதபி செபியின் முழு நேர உறுப்பினராகச் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த முதலீடு செய்யப்பட்டது,” என்று கூறப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கை மேலும், “தலைமை முதலீட்டு அதிகாரியான அனில் அஹுஜா, பள்ளி மற்றும் ஐஐடி டெல்லி காலத்திலிருந்தே தவலின் நண்பர் என்பதாலும், சிட்டி பேங்க், ஜேபி மோர்கன், மற்றும் 3ஐ குரூப் பிஎல்சி ஆகியவற்றின் முன்னாள் ஊழியர் என்பதாலும், பல தசாப்தங்களாக வலுவான முதலீட்டுத் தொழிலைக் கொண்டிருந்ததாலும் இந்த நிதியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது,” என்கிறது.

“அனில் அஹுஜா உறுதிப்படுத்தியபடி, எந்தவொரு அதானி குழும நிறுவனத்தின் எந்தவொரு பத்திரம், பங்கு, அல்லது டெரிவேட்டிவ் ஆகியவற்றில் எந்த நேரத்திலும் நிதி முதலீடு செய்யவில்லை,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“2019-ஆம் ஆண்டு தவல், பிளாக்ஸ்டோன் தனிநபர் ஈக்விட்டி நிறுவனத்துக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இது மாதபி செபியின் தலைவராகும் முன்பு நடந்தது. அதன்பின் இந்த நிறுவனத்தின் மீது முடிவெடுக்கும் உரிமை மாதபிக்கு இல்லை என செபியின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது,” என்கிறது அந்த அறிக்கை.

செபியின் அத்தனை விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும், இந்தியாவில் பல விதிமீறல்களுக்காக விளக்கம் கேட்கப்பட்டிருக்கும் ஹிண்டன்பர்க், செபி மீதும் அதன் தலைவர் மீதும் அவதூறு பரப்புகிறது, என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செபியின் விளக்க அறிக்கை சொல்வது என்ன?

இந்த விஷயத்தில் செபி தனது தரப்பு விளக்க அறிக்கையை அளித்துள்ளது.

அதில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழுமத்திற்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், செபியால் முறையாக விசாரிக்கப்பட்டன, என்று கூறப்பட்டுள்ளது. “அத்தகைய விதிமுறைகள், ஒழுங்குமுறைகளில் மாற்றங்கள் அல்லது சுற்றறிக்கைகள் ஒரு பெரிய பன்னாட்டு நிதிக் குழுமத்திற்கு சாதகமாக இருந்தன என்ற கூற்றுகள் பொருத்தமற்றவை,” என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், “சுய பிரதிபலன்கள் சார்ந்து செய்யப்படும் செயல்களை விசாரிக்க செபியிடம் முறையான வழிமுறைகள் உள்ளன. பத்திரங்களின் கையிருப்பு மற்றும் அவற்றின் இடமாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான, பொருத்தமான, வெளிப்படையான அறிக்கைகள் செபி தலைவரால் அவ்வப்போது செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தியமான முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைவரும் தன்னைத் தானே விலக்கிக் கொண்டார்,” என்று அவ்வறிக்கை கூறுகிறது.

முதலீட்டாளர்கள் அமைதியாக இருக்கவும், ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றும் முன் சரியான புரிதலைப் பின்பற்ற வேண்டும் என்றும் செபி கேட்டுக்கொண்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)