சாதனை அளவை எட்டிய தங்கம், வெள்ளி விலையில் திடீரென கடும் சரிவு ஏன்?

தங்கம் மற்றும் வெள்ளி விலை இவ்வளவு கடுமையாக ஏன் வீழ்ந்தது? இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வெள்ளிக்கிழமை பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.

ஜனவரி 30-ஆம் தேதி தங்கத்தின் விலை 12 சதவீதமும், வெள்ளியின் விலை 26 சதவீதமும் குறைந்தது. அதேபோல் பிளாட்டினம் விலை 18 சதவீதம் சரிந்தது.

இன்று (31-01-2026) காலையும் தங்கம், வெள்ளி விலை மேலும் குறைந்தது. சென்னை நகைக் கடைக்காரர்கள் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தகவலின் படி, சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் 1,300 ரூபாய் குறைந்து 14,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,800 ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது.

ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய் விலை குறைந்து 350 ரூபாயாக இருந்தது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,50,000ஆக இருந்தது.

முன்னதாக, தங்கம், வெள்ளி ஆகிய இரு உலோகங்களின் விலை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்தது.

"இது சந்தை உச்சத்தை எட்டியதற்கான வழக்கமான நிலை. குழப்பமும் உறுதியற்ற நிலையும் நிலவுகிறது. அனைவரும் தெளிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்," என்று பான்மியூர் லிபெரம் நிறுவனத்தின் கமாடிட்டிஸ் பிரிவு பகுப்பாய்வாளர் டாம் ப்ரைஸ், ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

எம்கேஎஸ் பிஏஎம்பி நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் நிக்கி ஷீல்ஸ், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்பட்ட இந்த கடும் ஏற்றத்தாழ்வுகள், மதிப்புமிக்க உலோகங்களின் வரலாற்றிலேயே அதீத நிலைத்தன்மையற்ற மாதம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தின் முடிவில் நிகழ்ந்ததாக கூறினார்.

வெனிசுவேலா, கிரீன்லாந்து, இரான் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் உலகளாவிய குழப்பங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிலைப்பாடுகளில் அதிகரிக்கும் உறுதியின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக மதிப்புமிக்க உலோகங்களை நாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"ஒவ்வொரு நாளும் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன," என்று ஷீல்ஸ் கூறினார். "இந்த உயர்வு மிக அதிகமாகவும், மிக விரைவாகவும் ஏற்பட்டது."

"முன்பு காணப்பட்ட அதீத விலை ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, அதிக நிலையற்ற தன்மையை எதிர்பார்க்க வேண்டும்" என்று பிக்டெட் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மூத்த மல்டி-அசெட் மூலோபாய நிபுணரான அருண் சாய், ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

மத்திய வங்கிகளின் கையிருப்பு மேலாளர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பரவலாக்குவதன் மூலம், தங்கம் தொடர்ந்து பயன் தரும் என்ற நம்பிக்கையை அந்த நிறுவனம் இன்னும் வைத்திருக்கிறது.

அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க் தகவலின்படி, இந்த வீழ்ச்சி 1980களின் தொடக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய ஒரே நாள் (இன்ட்ரா-டே) சரிவாகும். வெள்ளியும் அதேபோல் சாதனை அளவிலான ஒரே நாள் சரிவைக் கண்டது. இந்த விற்பனை அழுத்தம் முழு உலோக சந்தையையும் பாதித்தது.

இந்த உலோகங்களில் ஏற்பட்ட திடீர் மற்றும் கடும் உயர்வுக்குப் பிறகு, விலை வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு இருந்ததாகவும், சில செய்திகள் அதற்கான காரணமாக அமைந்ததாகவும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை இவ்வளவு கடுமையாக ஏன் வீழ்ந்தது? இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், AFP via Getty Images

சாதனை வீழ்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளும் சந்தையை தொடர்ந்து குலைக்கின்றன.

கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஓராண்டில் மதிப்புமிக்க உலோகங்களுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான தேவை ஏற்பட, தொடர்ந்து சாதனை அளவான விலையேற்றம் பதிவானது.

இந்த திடீர் உயர்வு, அனுபவமிக்க வர்த்தகர்களைக் கூட ஆச்சரியப்படுத்தியதுடன், விலைகளில் கடும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தியது.

ஜனவரி மாதத்தில் இந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்தது. நாணய மதிப்பு பலவீனமடைவது, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் சுயாட்சி குறித்த கவலைகள், வர்த்தகப் போர்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக, முதலீட்டாளர்கள் பாரம்பரியமான பாதுகாப்பான முதலீடுகளைக் நாடினர்.

ஓவர்சீஸ்-சைனீஸ் வங்கிக் கழகத்தைச் சேர்ந்த மூலோபாய நிபுணர் கிறிஸ்டோபர் வாங் கூறியதாக ப்ளூம்பெர்க் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க பெடரல் வங்கியின் இயக்குநர்கள் குழு தலைவராக கெவின் வார்ஷ் நியமனம் செய்யப்படுவதாக வந்த செய்தியே இந்த பெரிய வீழ்ச்சிக்கு தூண்டுதலாக இருந்தாலும், அதற்கு முன்பே சந்தையில் ஒரு திருத்தம் அவசியமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பெடரல் வங்கியின் இயக்குநர்கள் குழு தலைவராக கெவின் வார்ஷை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை கனடா பிரதமர் மார்க் கார்னியும் வரவேற்று, "இந்த கடினமான காலகட்டத்தில் உலகின் மிக முக்கியமான ஃபெடரல் வங்கியை வழிநடத்த கெவின் ஒரு சிறந்த தேர்வு" என்று கூறினார்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை இவ்வளவு கடுமையாக ஏன் வீழ்ந்தது? இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், AFP via Getty Images

"இவ்வளவு கடுமையான மற்றும் அபூர்வமான உயர்வுக்கு முடிவுகட்ட சந்தை காத்திருந்த காரணம் இதுதான்," என்று கிறிஸ்டோபர் வாங் கூறினார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு (profit booking) செய்ததாகவும் ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

ப்ளூம்பெர்க் தகவலின்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை சாதனை அளவிலான சரிவை சந்தித்தன. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய டாலர், ஸ்வீடன் க்ரோனா போன்ற நாணயங்கள் விற்கப்பட்டதன் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் நியமிக்கப்பட்டதாக வந்த செய்தியையடுத்து, டாலர் வலுவடைந்தது. தற்போதைய ஃபெட் தலைவர் ஜெரோம் பவெலின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தால், அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் (government shutdown) அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் கூறியிருப்பதும், மத்திய கிழக்கில் பதற்றம் குறைவதற்குக் காரணமாகியுள்ளது.

ப்ளூம்பெர்க் தகவலின்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவதற்கான இன்னொரு காரணம், இந்த இரு உலோகங்களும் 'அதிகமாக வாங்கப்பட்ட நிலை' (overbought category) என்ற நிலைக்குச் சென்றுவிட்டதே ஆகும். அவற்றின் Relative Strength Index (RSI) மதிப்பு 90-ஐ எட்டியது. இது கடந்த பல தசாப்தங்களில் காணப்பட்ட மிக உயர்ந்த நிலையாகும்.

RSI மதிப்பு 70 அல்லது அதற்கு மேல் இருந்தால், அது அதிக அளவிலான வாங்குதல் நடந்துள்ளது என்பதையும், விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிட்டது என்பதையும் குறிக்கிறது. அத்தகைய சூழலில் விலைகளில் ஒரு திருத்தம் அவசியமாகிறது.

ஆனால், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சரிவுக்குப் பிறகும், இந்த மாதத்தில் தங்கம் 13 சதவீதம் நிகர உயர்வையும், வெள்ளி 19 சதவீதம் நிகர உயர்வையும் பதிவு செய்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலோக சந்தையையும் பாதித்த சரிவு

உலோக சந்தையில் ஏற்பட்ட இந்த சரிவு, முக்கிய சுரங்க நிறுவனங்களின் பங்குகளையும் பாதித்தது. இந்திய பங்குச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ETF-கள் சுமார் 10 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. அதேபோல் தாமிர உலோகத்தின் பங்குகளும் கடுமையாக சரிந்தன.

நியூயார்க் வர்த்தகத்தில், நியூமான்ட் கார்ப், பாரிக் மைனிங் கார்ப், அக்னிகோ ஈகிள் மைன்ஸ் போன்ற முன்னணி தங்க சுரங்க நிறுவனங்களின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன.

நியூயார்க் சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை 8.9 சதவீதம் குறைந்து, ஒரு அவுன்ஸ் 4,894.23 அமெரிக்க டாலராக முடிந்தது.

வெள்ளியின் விலை 26 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸ் 85.20 அமெரிக்க டாலராக நிறைவடைந்தது. பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் ஆகியவற்றின் விலையும் குறைந்தது.

ப்ளூம்பெர்க் டாலர் ஸ்பாட் குறியீடு (Bloomberg Dollar Spot Index) 0.9 சதவீதம் உயர்ந்தது.

லண்டன் மெட்டல் எக்சேஞ்சில் தாமிரம் ஒரு டன்னுக்கு 13,157.50 அமெரிக்க டாலராக நிறைவடைந்தது. வியாழக்கிழமை அது ஒரு டன்னுக்கு 14,000 அமெரிக்க டாலரைத் தாண்டி உயர்ந்திருந்தது. இது 2008-க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஒரே நாள் (இன்ட்ரா-டே) உயர்வாக இருந்தது. அதன் பின்னர் விலை சரிந்தது.

அமெரிக்க டாலர் வலுவடைவதால், டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் பொருட்கள் (கமாடிட்டிகள்) பிற நாணயங்களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு அதிக விலை உடையவையாக மாறுகின்றன.

ப்ளூம்பெர்க் தகவலின்படி, ஹெரேயுஸ் பிரெஷியஸ் மெட்டல்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் டொமினிக் ஸ்பெர்செல், சந்தை மிகவும் நிலைத்தன்மையற்று இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை 5,000 அமெரிக்க டாலர் என்ற உளவியல் முக்கியத்துவம் கொண்ட விலை பலமுறை உடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

"வரும் காலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் தொடரும் என்பதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

தங்கம் விலை உயர்வில் சீன முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் பெரும் கொள்முதலை கருத்தில் கொண்டு, மதிப்புமிக்க மற்றும் தொழில்துறை உலோகங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஷாங்காய் ஃப்யூச்சர்ஸ் எக்சேஞ்ச் பல நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு