You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்த் உடல்நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை முடிவடைந்துள்ளதாகவும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய இதயத்திலிருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை இன்று அளிக்கப்பட்டது.
இதயவியல் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட மருத்துவக் குழு ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்தனர். ரத்தக் குழாய்க்குள் அனுப்பப்பட்ட சிறு குழாய் மூலம் (கேதீட்டர்) வீக்கம் ஏற்பட்டிருந்த பகுதியில் ஒரு 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
"திட்டமிட்டபடி சிகிச்சை நடைபெற்றது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இன்னும் இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என அவர் சிகிச்சைபெற்றுவந்த தனியார் மருத்துவமனை அளித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட பிரச்னை என்ன?
இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான ரத்தக் குழாயான aorta-வில் சில சமயங்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இந்த வீக்கம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் வயிற்றுப் பகுதியிலோ நெஞ்சுப் பகுதியிலோதான் ஏற்படும்.
வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டால் அது Abdominal Aortic Aneurysm என்றும் நெஞ்சகப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அது Thoracic Aortic Aneurysm என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த வீக்கத்தை அப்படியே விட்டுவிட்டால், ரத்தக் குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தாக முடியலாம். ஆனால், முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், பெரிய பிரச்னையின்றி வாழ்வைத் தொடர முடியும்.
உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது, புகைபிடிக்கும் பழக்கம் என இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன.
நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ரஜினிகாந்த்தின் உடல் நல பிரச்னைகள்
2011-ஆம் ஆண்டிலிருந்தே ரஜினிகாந்த்தின் உடல்நலம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கும் 'ராணா' என்ற படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்த போது ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
முதலில் சென்னையில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் பிறகு, சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர், இரு வாரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால், அவருடைய உடல் நலத்தில் என்ன பிரச்னை, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
2016-ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகு, அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சில பரிசோதனைகளைச் செய்து கொண்டதாகவே அப்போது தகவல்கள் வெளியாயின.
அங்கிருந்து திரும்பியவுடன் ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தின் படப்பிடிப்பில் நடித்தார். அந்தத் தருணத்தில் என்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ரஜினிகாந்த் தான் புதிய அரசியல் கட்சி துவங்கவிருப்பதாக 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் அதற்குப் பிறகு அக்டோபர் 2-ஆம் தேதி புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகுமெனவும் கூறப்பட்டது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் அந்த ஆண்டு இறுதியில், சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை எனக் கூறப்பட்டு, ஒரு அறிக்கை வெளியானது.
அதில் அவரது உடல் நலம் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, "2011ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஜினி வெளியிட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில், அவர் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத இந்த தருணத்தில் எனது அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு மருத்துவர்கள் கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் அதை உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியும். இப்போது உங்களுக்கு வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு எனவே கொரோனா காலத்தில் மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்" என்று அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை தான் வெளியிடவில்லையெனக் கூறிய ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் இருந்த தகவல்கள் உண்மைதான் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, உடல் நிலை காரணமாக, தான் அரசியல் கட்சி எதையும் துவங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு ரஜினிகாந்த் தீவிரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் நடித்து, த.ச. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)