You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை சென்ற இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ் கட்சிகள் முன்வைத்த கோரிக்கை
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயலினால் ஏற்பட்ட வரலாறு காணாத பாதிப்புகளில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக இந்தியா ஆரம்பம் முதலே பாரிய உதவிகளைச் செய்து வருகின்றது.
இலங்கையில் புயலின் தாக்கம் குறைவதற்கு முன்னதாகவே பல்வேறு நிவாரண உதவிப் பொருட்களுடன் இந்திய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அயலவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக இந்தியாவின் உதவிகள் இலங்கையை மீண்டெழுவதற்குக் கரம் கொடுத்து வருகின்றன.
நிவாரண உதவிகள், மீட்புக் குழுவின் உதவிகள், இந்திய ராணுவத்தின் உதவிகள், சாலை புனரமைப்பு மற்றும் பாலங்களின் நிர்மாணத்திற்கான உதவிகள் எனப் பலவற்றில் இந்தியா உதவி செய்துள்ளது.
இந்த நிலையில், புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பர் 22ஆம் தேதி கொழும்பு வந்தடைந்தார்.
மோதியின் விசேட கடிதத்தை எடுத்துக்கொண்டு, இலங்கையை வந்தடைந்த எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை 23ஆம் தேதி சந்தித்து, அதை வழங்கி இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
"அயலவருக்கு முன்னுரிமை' எனும் எங்கள் கொள்கை மற்றும் முதலில் பதிலளிப்பவராக இருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டின்படி, திடீரென ஏற்பட்ட சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக 'சாகர் பந்து' நடவடிக்கையை நாம் ஆரம்பித்தோம். இந்திய கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் நிவாரணப் பொருட்களையும் அவசரமாகத் தேவையான பொருட்களையும் கொண்டு வந்தன."
எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்
"மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும், அவசர மருத்துவ சேவைகளை வழங்கவும், பாதிக்கப்பட்ட தகவல் தொடர்பு கட்டமைப்புகளை மீளமைக்கவும் இந்திய விசேட குழுக்கள் அனுப்பப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காப்பாற்ற 'சாகர் பந்து' நடவடிக்கை உதவியதோடு இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் பரந்த மற்றும் ஆழமான வெளிப்பாடாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்" என பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ''இலங்கை தற்போது அடுத்த கட்டம் குறித்து கவனம் செலுத்தியுள்ள வேளையில், நம்பகமான பங்காளியாகவும் நம்பகமான நண்பராகவும் இந்தியா சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்பதில் நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், தாங்குதிறனை உறுதிப்படுத்துவதிலும் கடந்த காலத்தைப் போன்றே நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம். இந்தச் சூழலில், இந்தியா ஒரு விரிவான சலுகைப் பொதியை வழங்குகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
"சலுகைப் பொதியை எவ்வாறு சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்பது குறித்து உங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அறிவித்துள்ளோம். இலங்கை எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக எழுச்சி பெறும் என்று நான் நம்புகிறேன்.
இந்தப் பயணத்திலும், தேசிய அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திலும், இந்தியா எப்போதும் இலங்கைக்கு நெருக்கமாக இருக்கும்'' எனவும் இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இலங்கையை கட்டியெழுப்ப இந்தியா பாரிய நிதியுதவி
புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான நிதியுதவி பொதியொன்றை வழங்கியுள்ளது.
இதன்படி, இந்தியாவால் வழங்கப்படும் 450 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான நிதியுதவி பொதியில், 350 மில்லியன் அமெரிக்க டாலர் சலுகை வட்டி அடிப்படையிலான கடனுதவி என்பதுடன், எஞ்சிய 100 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீளக் கட்டியெழுப்புதல், சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த உதவித் திட்டத்தை வழங்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்களை வழங்கியமை, மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கியமை மாத்திரமன்றி, சேதமடைந்த வீதிகளை மீளமைத்தல், மருத்துவமனைகளைப் புனரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியா வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
எதிர்கட்சிகளுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
திட்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவுக்கு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவினால் அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் திட்டத்திற்கும் தனது நன்றியை எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சரியான அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்கத் தவறியதாலேயே, இந்த புயலினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டிற்கு முறையான அனர்த்த முகாமைத்துவ திட்டமும் துறைசார் அமைச்சொன்றையும் ஸ்தாபிப்பது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, இந்திய அரசு வழங்கும் உதவிகள் மிகவும் வெளிப்படையான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என சஜித் பிரேமதாச உறுதியளித்ததோடு, இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
தமிழ் கட்சிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இலங்கை தமிழரசு கட்சி உள்ளிட்ட வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட மலையக தமிழ் கட்சிகளுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இலங்கையில் நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான அழுத்தங்களை இந்தியா இலங்கை அரசுக்கு பிரயோகிக்க வேண்டும் என வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள், இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், மலையக மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கையளித்தார்.
திட்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுத் தமது வீடுகளை இழந்துள்ள மலையக மக்களுக்கு நிரந்தர வீடு திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை அந்தக் குடும்பங்களுக்குத் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுவதாக செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிக வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தேயிலை தொழில்துறையுடனும், உள்நாட்டு பொருளாதாரத்துடனும் இணைந்ததான சுயதொழில் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவிக்க இந்தியாவின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், தேயிலை தொழிலாளர் சமூகத்திற்கு மருத்துவ காப்புறுதி திட்டத்தை விரிவுப்படுத்துகின்றமை தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் இவ்வாறான கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை, திட்வா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மலையக பகுதிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவூட்டியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா வழங்கிய உதவித் திட்டத்திற்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவையும், மலையக மக்களின் நலன் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான கூட்டு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு