You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யாஹ்யா சின்வார் மரணம்: காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் வருமா?
காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. .
சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு விழுந்த பெரிய அடி. ஹமாஸை அவர் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றினார், அதன் விளைவாக இஸ்ரேல் அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
சின்வார் இஸ்ரேல் சிறப்புப் படைகளின் திட்டமிட்ட நடவடிக்கையில் கொல்லப்படவில்லை, மாறாக காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் தற்செயலாக ரோந்து மேற்கொண்ட இஸ்ரேலியப் படைகள் நடத்திய ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், போர் உடை அணிந்திருந்த சின்வார் ஷெல் குண்டு வீச்சு தாக்குதலில் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இறந்து கிடந்ததைக் காட்டுகிறது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ வீரர்களைப் பாராட்டிய அதே சமயத்தில், எவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், அது போரை முடிவுக்குக் கொண்டு வராது என்றார்.
நெதன்யாகு மேலும் கூறுகையில், "நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். தீமையை `நன்மை’ வீழ்த்தியதை இன்று மீண்டும் ஒருமுறை உலகிற்குக் காட்டியுள்ளோம். ஆனால் போர் இன்னும் முடிவடையவில்லை. இது கடினமான நேரம். நாம் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது” என்றார்.
"நமக்கு முன்னால் இன்னும் பெரிய சவால்கள் உள்ளன. நமக்கு சகிப்புத்தன்மை, ஒற்றுமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு தேவை. நாம் ஒன்றாகப் போராட வேண்டும், கடவுளின் உதவியால், நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்றும் அவர் கூறினார்.
காஸா போரை ஆதரிக்கும் நெதன்யாகு மற்றும் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் வெற்றிக்காக காத்திருக்கின்றனர்.
நெதன்யாகு தனது போர் இலக்குகளை பலமுறை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார். "ஹமாஸின் அரசியல் மற்றும் ராணுவ பலத்தை அழித்து இஸ்ரேல் பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்." என்பதே அவரின் இலக்கு.
ஒரு வருடமாக தொடரும் போரில் குறைந்தது 42,000 பாலத்தீனர்களைக் கொன்று, காஸாவின் பெரும் பகுதிகளை தரைமட்டம் ஆக்கிய போதிலும், இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்று இஸ்ரேல் கருதுகிறது.
மீதமுள்ள பணயக்கைதிகளின் விடுதலை, இஸ்ரேலிய படைகள் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பதே இஸ்ரேலின் நோக்கம்.
சின்வாரைக் கொன்றது இஸ்ரேல் விரும்பிய வெற்றி என்ற போதிலும் போரின் மற்ற இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு கூறுகிறார்.
காஸாவில் எஞ்சியிருக்கும் 101 இஸ்ரேல் பணயக்கைதிகளில் பாதி பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது. பணயக் கைதிகள் பிடித்துச் செல்லப்பட்ட அதே இடத்தில் அவர்களின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, அவர்களை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
பணயக்கைதியான மதன் ஜாங்கவுக்கரின் தாயார், “நெதன்யாகு, பணயக்கைதிகளை புதைத்து விடாதீர்கள். மத்தியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அணுகி, புதிய முயற்சியை முன்வையுங்கள். பணயக்கைதிகளை மீட்பது உங்களால் மட்டுமே முடியும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில் "நெதன்யாகு இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ஒரு புதிய இஸ்ரேலிய ஒப்பந்தத்தை முன்வைக்க முன்வரவில்லை என்றால் அவர் பணயக்கைதிகளாக இருக்கும் எங்கள் குடும்பங்களை கைவிட்டுவிட்டார் என்று தான் அர்த்தம்.”
"அவர்களுக்காக போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. மாறாக நெதன்யாகு போரை இன்னும் அதிகப்படுத்தி வருகிறார். அனைவரும் திரும்பும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ” என்றார்.
"சின்வாரும் அவரது ஆட்களும் இஸ்ரேலைத் தாக்கும் அளவுக்கு அதன் பாதுகாப்பு பலவீனமாக இருந்துள்ளது. நெதன்யாகு, இந்த பாதுகாப்புத் தோல்விகளில் தனது பங்கை மறைக்கவும், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை காலவரையின்றி ஒத்திவைக்கவும் காஸா போர் சூழலை ஆதரிக்கிறார்." என்று அவர் குற்றம்சாட்டினார்.
நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். காஸாவில் ஹமாஸை வீழ்த்தி "முழுமையான வெற்றி" கண்டால் மட்டுமே இஸ்ரேலிய பாதுகாப்பை மீட்டெடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
இஸ்ரேல் காஸாவுக்குள் செய்தி நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. ராணுவ மேற்பார்வையின் கீழ் அரிதான பயணங்களை மட்டுமே அனுமதிக்கிறது. பிபிசிக்கும் இதே நிலைதான்.
சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸில், பிபிசிக்காக சில நம்பகமான உள்ளூர் பத்திரிகையாளர்கள் பாலத்தீனர்களை பேட்டி கண்டனர். அவர்களும் போர் தொடரும் என்றே கூறினார்கள்.
டாக்டர் ரமலான் ஃபாரிஸ் கூறுகையில் “இந்தப் போர் சின்வார், ஹனியே அல்லது மிஷால் அல்லது எந்தத் தலைவரையோ அல்லது அதிகாரியையோ சார்ந்தது அல்ல, இது பாலத்தீன மக்களுக்கு எதிரான அழிவுகரமானப் போர். இது நாங்கள் அனைவரும் அறிந்து கொண்ட உண்மை. சின்வார் உள்ளிட்டவர்களை தாண்டி இது மிகப்பெரிய பிரச்னை” என்றார்.
சிலர் சின்வாரின் மரணத்தால் சோகமாக இருப்பதாகவும், மற்றவர்கள் அலட்சியமாக இருப்பதாகவும் அட்னான் அஷூர் கூறினார்.
அஷூர் மேலும் கூறுகையில், "அவர்களுக்கு நாங்கள் மட்டுமல்ல, முழு மத்திய கிழக்கும் வேண்டும். அவர்கள் லெபனான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடனும் சண்டையிடுகிறார்கள். இது 1919 முதல், அதாவது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான போர்" என்று கூறினார்.
சின்வாரின் மரணம் ஹமாஸை பாதிக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. "இல்லை என்று நம்புகிறேன், ஹமாஸ் என்பது வெறும் சின்வார் என்ற தனி நபரை சார்ந்தது அல்ல" என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)