You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாகியும் தாமதம் ஏன்? இன்றைய முக்கிய செய்தி
இன்றைய (23/06/2025) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகளை இங்கு காண்போம்.
சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையில் தாமதம் ஏன் என்பது குறித்து வழக்கறிஞர்கள் காரணங்களை கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், "தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அரங்கேறியது.
இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கின் விசாரணை முடிவடையாதது ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளதாக அச்செய்தி கூறுகிறது.
இதுகுறித்து ஜெயராஜ்-பெனிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர்கள் கூறுகையில், "இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்துக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 3 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க மதுரை நீதிமன்றதுக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதுவரை இந்த வழக்கை 4 நீதிபதிகள் விசாரித்து உள்ளனர். தற்போது 5-வது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்துக்கு பொறுப்பு நீதிபதியாகவே இருந்து வருகிறார்." என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இது ஒரு முக்கியமான வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் ஒரே நீதிபதி மூலம் விசாரணையை மேற்கொண்டால் தான் விரைவில் நீதி கிடைக்கும். ஆனாலும், இதை ஒரு உரிமையாக கோர முடியாது என்பதால் எங்களால் இந்த விவகாரத்தில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அதேவேளையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேருக்கும் தனித்தனியாக 9 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 9 பேரும் தனித்தனியாக சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் 105 பேரிடமும் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.
இது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை. இதை எந்தவிதத்திலும் தடுக்க முடியாது. அதேவேளையில், இதை விரைந்து முடிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை." என தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.
மேலும், "இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் செயல்படுவதும் தெரிகிறது. அவ்வாறு செயல்படுவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தடுக்க வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நிரந்தர நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" என வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.
சென்னையில் உதவி பேராசிரியராக திருநங்கை நியமனம்
சென்னை லயோலா கல்லூரியில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த முனைவர் ஜென்சி பள்ளிப்படிப்பு மற்றும் தன் இளங்கலை பட்டப்படிப்பை அரசு கல்வி நிறுவனங்களிலேயே பயின்றதாக அச்செய்தி கூறுகிறது.
"நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே பெண்மையுடன் இருப்பதை உணர்ந்தேன், அது எனக்குப் பிடித்திருந்தது. அக்கம்பக்கத்தினர் என்னை கடிந்துகொண்டனர், ஆனால் நான் நானாக இருந்தேன். திருநங்கைகள் குறித்து நான் முன்பு பயத்தில் இருந்தேன். நான் கல்வி பயின்று, கடுமையாக உழைக்க வேண்டும் என முடிவு செய்தேன். 12ம் வகுப்பில் என் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்தேன்."
"பள்ளியில் அப்போது ஆங்கில ஆசிரியர் இல்லை, எனவே ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்றேன். திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் எனக்கு முன்பு இரு இடங்களில் இருந்த மாணவர்கள் கலந்தாய்வுக்கு வராததால் எனக்கு அதிர்ஷ்டவசமாக அங்கு இடம் கிடைத்தது," என ஜென்சி கூறியதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் எம்.ஃபில் பட்டம் பெற்றார் (M.phil).
இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் தங்கப் பதக்கங்கள் பெற்றதாக அவர் கூறுகிறார்.
லயோலா கல்லூரியில் பிஹெச்.டி படித்தபோது, அவருடைய தாய் பூ விற்று வந்ததாக அவர் தெரிவித்தார்.
"ஆனால், நான் என் படிப்பை முடிக்கும் வரை அம்மா உயிருடன் இல்லை என்பது வேதனையளிக்கிறது," என அவர் தெரிவித்தார்.
இயற்கை மற்றும் இலக்கியத்துக்கு இடையேயான தொடர்பு குறித்து அவர் தன் பிஹெச்.டி படிப்பில் ஆய்வு செய்துள்ளார். ஆங்கில துறையின் தற்போதைய தலைவரும் அவருடைய வழிகாட்டியுமான பி. மேரி வித்யா பொற்செல்வி, தான் ஆய்வை முடிக்க உதவியதாக ஜென்சி தெரிவித்தார்.
இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு