You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஆழ்கடலில் 19,685 அடி ஆழத்திற்குச் செல்ல தயாராவது ஏன்?
சமுத்ரயான் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கியை வடிவமைத்து வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கருத்துரு மற்றும் வடிவமைப்பில், அதன் வளாகத்திலேயே உருவாக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியை பிபிசி தமிழ் குழுவினர் பார்வையிட்டோம்.
இந்த நீர்மூழ்கியை சென்னை கடல் பகுதியில் விரைவில் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்யவிருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக 2026இல் ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தத் திட்டம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்ஸயா 6000 குழுவினரை சந்தித்தோம்.
இந்த ஆண்டு முழுவதும் பல கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள விஞ்ஞானிகள், அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தால் 2026இல் மத்திய இந்தியப் பெருங்கடலின் 6000 மீட்டர் ஆழத்தில் இந்திய விஞ்ஞானிகள் தடம் பதிப்பார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டு சீனா, உலகின் மிகவும் ஆழமான மரியானா ஆழ்கடல் அகழிக்கு 10,909 மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களை நீர்மூழ்கியில் அனுப்பியது. அதோடு, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மனிதர்களை இதுவரை அனுப்பியுள்ளன. அந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணையப் போவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக கடல் தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், பல நீர்மூழ்கிகளை வடிவமைத்துள்ளது.
"இந்தியாவிலேயே நீர்மூழ்கியை தயாரிக்கும் திறனுடைய ஒரே நிறுவனம் இதுதான். ஆகவே, எங்கள் விஞ்ஞானிகளே இதை முற்றிலுமாகத் திட்டமிட்டு, வடிவமைத்து, நாட்டில் முதல்முறையாக மனிதர்களை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்லக்கூடிய நீர்மூழ்கியை உருவாக்கியுள்ளோம்," என்கிறார் திட்ட இயக்குநர் முனைவர் வேதாச்சலம்.
''மத்ஸயா 6000 நீர்மூழ்கி, அதை இயக்கப்போகும் ஒரு மாலுமி, அவருக்குத் துணையாக இருக்கும் இணை-மாலுமி மற்றும் ஒரு விஞ்ஞானி ஆகியோரை ஆழ்கடலுக்குள் கொண்டு செல்லும்" என்று விளக்கினார் அதன் திட்ட இயக்குநரான முனைவர் வேதாச்சலம்.
இதன் வடிவமைப்புப் பணியில் இருந்தே இதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானியான ரமேஷ் ராஜுவே மாலுமியாக நீர்மூழ்கியை இயக்கப் போவதாகக் கூறும் வேதாச்சலம், "அவருக்குத் துணைபுரியும் இணை-மாலுமியாக இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒருவர் இருப்பார் மற்றும் மூன்றாவதாக ஆழ்கடலை ஆய்வு செய்யப் போகும் விஞ்ஞானி ஒருவர் உடன் செல்வார்," என்று தெரிவித்தார்.
"இந்த நீர்மூழ்கியின் மூலம், உலகளவில் இதைச் சாதித்துக் காட்டிய மிகச் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும்" என்று பிபிசி தமிழிடம் கூறிய மத்ஸயா 6000 குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் முகம் பெருமிதத்தால் பூரித்தது.
திட்ட இயக்குநர் வேதாச்சலத்தின் கூற்றுப்படி, மத்ஸயா 6000 நீர்மூழ்கி, ஆய்வு செய்யவுள்ள பகுதிக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கடலில் இறக்கப்படும்.
"கப்பலில் இருந்து பெருங்கடலின் மேற்பரப்பில் இறக்கிவிடப்பட்டு, மனிதர்களை அமர வைத்த பிறகு, அங்கிருந்து நேராகக் கீழ்நோக்கி அனுப்பப்படும்," என்று அவர் விளக்கினார்.
நீளமான டைட்டானியம் உலோகத்தால் ஆன ஒரு கட்டமைப்பில் பேட்டரி முதல் நீர்மூழ்கி இயங்கத் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் விஞ்ஞானிகள் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். அதன் முன்பகுதியில் இருந்த உருளை வடிவ பாகத்தில்தான் மூன்று பேர் உட்கார்ந்து பயணிக்கப் போகிறார்கள்.
மத்ஸயாவின் மின்னணு அமைப்புகளை வடிவமைக்கும் முனைவர் ரமேஷ்தான் அதை இயக்கவும் போகிறார். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளில்லா தானியங்கி நீர்மூழ்கிகளைக் கடலில் இயக்கிய அனுபவமுள்ளவர்.
நீர்மூழ்கி கீழ்நோக்கிச் செல்லும்போது அதிக ஆற்றலைச் செலவழிப்பதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட ஆழத்தை நெருங்கும்போது நீர்மூழ்கியின் அனைத்து செயல்பாடுகளும் தொடங்கும் எனவும் கூறுகிறார் ரமேஷ்.
முதல் சவால் காரிருள். மேற்பரப்பில் இருப்பதைப் போன்று ஆழ்கடலில் சூரிய ஒளி புகாது. அதுமட்டுமின்றி, அங்கு செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வேலை செய்யாது.
அத்தகைய சூழலில் நீர்மூழ்கியின் இருப்பிடத்தைக் கண்டறிவது முதல் அதன் பாதையில் இருக்கும் இடர்பாடுகளை அறிவது வரை அனைத்துமே சவால் நிறைந்திருக்கும்.
இதைச் சமாளிக்க ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கிலம், டால்பின் போன்ற ஆழ்கடல் உயிரினங்களைப் போல ஒலியைப் பயன்படுத்தி தனது சுற்றத்தை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பமே ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம். இதே வகையில் ஒலி அலைகளை அனுப்புவதன் மூலமே மேலே கப்பலில் இருந்து நீர்மூழ்கியுடனான தொடர்புகளும் அமையும்.
மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் திசையறிதல் குறித்த பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானியான முனைவர் பால நாக ஜோதி இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார்.
"ஆழ்கடலில் ஒரு பொருளின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்டறிவது மிகவும் சவாலானது. அங்கு ஜிபிஎஸ் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அதாவது, ஆழ்கடல் உயிரினங்களைப் போலவே, கடலடியில் மத்ஸயா 6000இன் இருப்பிடத்தை அறிவது, அதன் பாதையைத் தீர்மானிப்பது, அதில் பயணிப்போருடன் தொடர்புகொள்வது ஆகியவற்றைச் செய்வோம்," என்று விளக்கினார் பால நாக ஜோதி.
இதைவிட மிக முக்கியமான மற்றொரு சவால் அதீத அழுத்தம். நிலப்பரப்பில் இருக்கும் சரசாரி அழுத்தத்தைவிட ஆழ்கடலில் அழுத்தம் பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று விவரித்தார் சத்யநாராயணன்.
"ஆழ்கடலில் ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் அழுத்தம் 100 மடங்கு அதிகரித்துக்கொண்டே போகும். ஆக, 6000 மீட்டர் ஆழத்தில் இங்கு நாம் உணரும் அழுத்தத்தைவிட 600 மடங்கு அதிக அழுத்தம் இருக்கும். அதைச் சமாளிக்க, டைட்டானியம் உலோகத்தில் நீர்மூழ்கி உருவாக்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார்.
மேலும், மனிதர்கள் அமர்ந்து பயணிக்கும் உருளை வடிவ உட்பகுதியை டைடானியம் உலோகத்தில் தயாரித்துக் கொடுக்க இஸ்ரோ உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)