You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மது வடலரா 2: ஸ்பெஷல் ஏஜென்டாக மாறும் டெலிவரி பாய்ஸ் - சினிமா விமர்சனம்
- எழுதியவர், ஶ்ரீங்கவரப்பு
- பதவி, பிபிசி தெலுங்குக்காக
பொதுவாக பார்வையாளர்களின் வாழ்க்கையோடு இணைந்து போகும் அம்சங்களைக் கொண்ட எளிய கதை, சிறிய பட்ஜெட் படங்கள் என்றுமே ஹிட் ஆகிவிடும். 2019ஆம் ஆண்டு கீரவாணியின் மகன் ஶ்ரீசிம்ஹா நடித்த படமும் அப்படியான கதையைக் கொண்டதுதான்.
மது வடலரா என்ற பெயரில் வெளியான அந்தப் படத்தில் மொத்தமாகவே நான்கு அல்லது ஐந்து முக்கியக் கதாப்பாத்திரங்கள்தான் இடம் பெற்றிருந்தன.
நகைச்சுவையாக இருந்தாலும் கூடவே பயத்தைத் தரும் அந்த த்ரில்லர் படத்தில் நிறைய கதாப்பாத்திரங்களும், தெலுங்கு படங்களுக்கே உரிய பாணியிலான படப்பிடிப்பு தளங்களும் இல்லாமல் இயல்பான ஒரு படமாக அமைந்திருந்தது.
இந்தப் படத்திற்குப் பிறகு ஶ்ரீசிம்ஹா நான்கைந்து படங்களில் நடித்திருப்பார். ஆனால் அது ஒன்றும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்படியான சூழலில்தான் 2019ஆம் ஆண்டு வெளியான படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கத் துவங்கினார்.
ஏற்கெனவே முதல் படம் வெற்றியைப் பெற்றுத் தந்ததால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது என்றே கூறலாம். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மது வடலரா பாகம் 2 படம் எப்படி இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.
இந்தப் படத்தின் கதைதான் என்ன?
முதல் படத்தில் டெலிவரி பாய்ஸாக இருந்த பாபுவும் யேசுதாஸுவும் இந்தப் படத்தில் ஸ்பெஷல் ஏஜெண்டுகளாக வலம் வருகின்றனர். அவர்கள் எப்படி சிறப்பு காவல்துறையினராக மாறினார்கள்? ஒரு வழக்கை விசாரிக்கும்போது அவர்கள் அதில் எப்படி மாட்டிக் கொண்டார்கள்? அதில் இருந்து எப்படி வெளியே வந்தார்கள்? ஆப்ரேஷன் தஸ்கரா என்றால் என்ன? ஸ்லேவ் போதை என்றால் என்ன?
இதுதான் இந்தப் படத்தின் கதை.
க்மது வடலரா படத்தில் பாபு மற்றும் யேசுதாஸாக நடித்த ஶ்ரீசிம்ஹா, சத்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்காள். இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களுக்கு எந்தக் குறையும் வைக்காமல் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் இருந்து இந்த கதாப்பாத்திரங்கள் இரண்டாம் பாகத்திற்குள் நுழைவதால் ரசிகர்களால் எந்தக் குழப்பமும் இன்றி எளிதாக கதாப்பாத்திரங்களோடு இணைந்து பயணிக்க முடிகிறது.
மது வடலரா பாகம் ஒன்றில் நகைச்சுவை காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் இடம் பெறவில்லை. ஆனால் இரண்டாம் பாகம் அதற்கு முற்றிலும் வேறாக, ஆரம்பம் முதலே முழுநீள நகைச்சுவைப் படமாகவே ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. முதல் பாகம் கதையை நம்பி நகர்ந்த படம் என்றால், இரண்டாம் பாகம் கதாப்பாத்திரங்களை நம்பி நகரும் படமாக அமைந்துள்ளது.
நகைச்சுவை, தீவிரமான திரைக்கதை அம்சங்கள் மற்றும் ஆக்ஷனுக்கு குறைவில்லாமல் இருக்கும் இந்தப் படம் முற்றிலுமாக ஒரு மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.
படத்தின் வேகம் திருப்தி அளிக்கிறதா?
மது வடலரா இரண்டாம் பாகத்தில் இருக்கும் நகைச்சுவை பகுதிகளுக்கு முக்கியத்துவம் தருவதற்காக, தீவிரமான அம்சங்களை படத்தின் ஆரம்பக் காட்சிகள் மற்றும் இடைவேளையை ஒட்டி வைத்திருப்பது படத்திற்குக் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. பிற்பாதியில் கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல இந்த அம்சங்கள் சிறப்பாகக் கை கொடுத்துள்ளது.
என்னதான் டெலிவரி பாய்ஸ் கதாப்பாத்திரம் மாற்றப்பட்டு ஸ்பெஷல் ஏஜெண்டுகளாக நடிகர்கள் வலம் வந்தாலும் அவர்களின் கதாப்பாத்திரங்களின் அடிப்படை அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்ததால் படம் மிகவும் இயல்பான உணர்வை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. கதை தீவிரமாக நகரும்போது ஆங்காங்கே வரும் நகைச்சுவைக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன.
ஆரம்பத்தில் படம் ஜாலியாக சென்றாலும் சிறிது நேரத்தில் படத்தின் கதை தீவிரமடைந்து, இடைவேளையின் போது ரசிகர்களை இருக்கையின் முன் பகுதிக்குக் கொண்டு வந்துவிடும் அளவுக்கு விறுவிறுப்புடன் நகர்கிறது.
பலமான திரைக்கதை, எங்கேயும் பெரிய அளவில் தொய்வு ஏதும் இல்லை, நல்ல கதை இந்தப் படத்தின் கூடுதல் அம்சம் என்றே கூறலாம்.
யார் எப்படி நடித்திருக்கிறார்கள்?
கதையின் நாயகனாக வரும் ஶ்ரீசிம்ஹா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நகைச்சுவை டைமிங், டையலாக் டெலிவரி என்று பாபு கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
இதுநாள் வரை குணச்சித்திர நடிகராக வந்த சத்யா இந்தப் படத்தில் முழுக்க முழுக்க சிறந்த எண்டெர்டெய்னராக மாறிவிட்டார். நகைச்சுவைக் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்.
படத்தில் எத்தனை கதாப்பாத்திரங்கள் வந்தாலும் அனைவரின் கண்களும் யேசுதாஸாக வரும் சத்யாவின் மீதேதான் இருக்கிறது. சத்யாவின் இந்த மாயாஜாலம் படத்திற்குக் கூடுதல் பலம்.
மைக்கேலாக சுனில் நடித்திருக்கிறார். நிதியாக ஃபரியா நடித்துள்ளார். ஃபரியாவின் வசன உச்சரிப்புகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் இவர்களின் கதாப்பாத்திரங்கள் யாவும் பாபு, யேசு அளவுக்குப் பலமானதாக இல்லை.
சுனிலும் ஃபரியாவும் நன்றாகத்தான் நடித்துள்ளனர். ஆனால் அவர்களின் கதாப்பாத்திரங்களும் வலுவாக அமைக்கப்பட்டிருந்தால் படம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
தொழில்நுட்ப அம்சங்கள் எப்படி இருக்கிறது?
காலபைரவா, மது வடலரா படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர். அதன் பின்னர் கார்த்திகேயா 2, கலர் போட்டோ போன்ற படங்களுக்கு இசை அமைத்து தனக்கான இடத்தை தெலுங்கு திரையுலகில் உருவாக்கிக் கொண்டவர். அவரது பின்னணி இசை இந்தப் படத்தோடு சேர்ந்து பயணிக்கிறது.
ஒளிப்பதிவு படம் பார்க்கும் அனுபவத்தை மெறுகேற்றியுள்ளது. மற்ற கதாப்பாத்திரங்கள் பலவீனமாக இருந்தாலும் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பலமான திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, ஒளிப்பதிவுடன் இந்தப் படம் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக அமைந்துள்ளது.
படத்தின் பலம்
- படத்தின் முதல் பாகத்தில் இருந்து கதாப்பாத்திரங்களை விரிவுபடுத்தி இரண்டாம் பாகத்தில் அதை எளிதாகத் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கியிருப்பது
- சத்யாவின் நகைச்சுவைக் காட்சிகள்
- சத்யா - ஶ்ரீசிம்ஹாவின் கூட்டணி
- பலமான திரைக்கதை
- இசை, ஒளிப்பதிவு
பலவீனம்
- நகைச்சுவை சில இடங்களில் சரியாக பொருந்திப் போகவில்லை
- துணை நடிகர்களுக்கான ஸ்கோப் குறைவாக இருப்பது
- ஃபரியா கதாநாயகியாக நடித்திருந்தாலும், கதாப்பாத்திரம் பலமானதாக இல்லை
(இதில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் அனைத்துமே விமர்சகரின் தனிப்பட்ட பார்வையே)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)