You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியிருந்த பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்பட்டது - என்ன நடந்தது?
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்திகள்
- எழுதியவர், அஷ்ரஃப் படன்னா
- இருந்து, திருவனந்தபுரம், கேரளா
இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது.
கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது.
எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது.
அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது.
தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன.
கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
செவ்வாய்க் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ள அந்த விமானத்திற்கு, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது.
திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன.
"கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர்.
மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு