இஸ்ரேலிய தாக்குதலில் 6 அணு விஞ்ஞானிகள் பலி, இரான் பதிலடி - அமெரிக்கா என்ன செய்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்று அதன் வெளியுறவு செயலர் ரூபியோ தெரிவித்துள்ளார். இரானும் இதற்குப் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனாலும், இந்த தாக்குதலை அமெரிக்காவின் ஆதரவுடன் தான் இஸ்ரேல் நடத்தியிருப்பதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், இஸ்ரேல் தங்களது பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் இரான் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், டெஹ்ரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ன சொல்கிறார்?

பட மூலாதாரம், Getty Images
6 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறும் இரான்
இஸ்ரேலிய தாக்குதல்களில் 6 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டு இருப்பதாக இரான் உறுதி செய்துள்ளது.
அதன்படி, ஒருவர் இரான் அணுசக்தி அமைப்பின் (AEOI) முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அபாசி. அந்த அமைப்பே இரானின் அணுசக்தி நிலையங்களுக்குப் பொறுப்பாக உள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில் டெஹ்ரான் தெருவில் நடந்த ஒரு படுகொலை முயற்சியில் அபாசி உயிர் தப்பினார். மற்றொருவர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தின் தலைவர் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி.
அப்துல்ஹமீத் மினௌசெர், அஹ்மத் ரெசா சோல்ஃபாகரி, அமிர்ஹோசைன் ஃபெக்கி ஆகியோர் டெஹ்ரானின் ஷாஹித் பெஹெஷ்டி பல்கலைக் கழகத்தில் கல்வியாளர்களாக இருந்தனர்.
உயிரிழந்த 6வது விஞ்ஞானி, மொட்டல்லெபிசாதே என்ற அவர்களின் குடும்பப் பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
புரட்சிகர காவல்படை தலைவர் இறந்தார் - இரானிய அரசு ஊடகங்கள்
இரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், அதன் தாக்குதல்கள் "இரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற ராணுவ இலக்குகளை," குறிவைத்ததாகக் கூறினார்.
புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது தாக்குதல் - இரானிய அரசு ஊடகம்
டெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரான் ஆயுதப்படைகளின் ஒரு கிளை மட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும்.
மேலும், டெஹ்ரானுக்கு அருகில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் தாக்கியதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெஹ்ரானில் உள்ள மக்களிடமிருந்தும் வெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரானிய அரசு ஊடகங்களின்படி, டெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
டெஹ்ரானின் இமாம் காமனெயி சர்வதேச விமான நிலையம் இரானிய தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு கூறும் டிரம்ப்
இரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்திற்கு வருமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் ஏற்கெனவே டெஹ்ரானுக்கு "அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கியதாக" கூறியுள்ளார்.
அமெரிக்கா இரான் இடையிலான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமையன்று ஆறாவது சுற்றுக்குள் நுழையவிருந்தது.
"நான் அவர்களிடம் 'அதைச் செய்யுங்கள்' என்று மிகவும் வலுவான வார்த்தைகளில் கூறினேன். ஆனால், எவ்வளவு கடினமாக முயன்றாலும் அவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"ஏற்கெனவே பெரும் மரணமும் அழிவும் ஏற்பட்டுள்ளன. ஆனால் அடுத்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவையாக இருப்பதால், இதை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நேரம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
"எதுவும் மிச்சமில்லாமல் போவதற்கு முன்பாக இரான் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு, ஒரு காலத்தில் இரானிய பேரரசு என்று அழைக்கப்பட்ட தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தாமதமாவதற்கு முன்பாக அதைச் செய்யுங்கள்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பே அதன் திட்டங்கள் குறித்துத் தனக்குத் தெரியும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார். ஆனால், அமெரிக்க ராணுவத்திற்கு இந்த நடவடிக்கையில் எந்தப் பங்கும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

பட மூலாதாரம், Reuters
"தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்"
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத்திட்டத்தின் 'இதயத்தை' குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.
இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார்.
ஏப்ரல் 2021-இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது.
"அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள" இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் "எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று எச்சரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல், அமெரிக்காவுக்கு இரான் எச்சரிக்கை
இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த தாக்குதல்களுக்காக 'பெரும் விலை' கொடுக்கும் என்று இரான் எச்சரித்துள்ளது.
இரான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களுக்கு 'பெரும் விலை' கொடுக்கும் என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
"இந்த சியோனிச தாக்குதலுக்கு ஆயுதப்படைகள் நிச்சயமாக பதிலடி கொடுக்கும்" என்று இரானிய செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷேகார்ச்சி கூறினார்.
இந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் "மோசமான தன்மையை" வெளிப்படுத்துகின்றன என்று இரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி கூறியுள்ளார். இந்த தாக்குதலின் மூலம் இஸ்ரேல் "தனக்கென ஒரு கசப்பான விதியைத் தேடிக் கொண்டுள்ளது. அதை இஸ்ரேல் நிச்சயமாகப் பெறும்." என்று அவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது,
இரான் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் மீண்டும் வெடிச்சத்தங்கள் கேட்டது என்று மக்கள் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரான் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல், இரானில் தாக்குதல்களை நடத்தியதாக இரான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டிக்க உலக நாடுகளுக்கு இரான் வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த தாக்குதல் "உலகளாவிய பாதுகாப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது" என்று இரான் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளர் என்று அது குறிப்பிடும் அமெரிக்கா, இந்த தாக்குதலின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று இரான் கூறுகிறது. ஆனால், இந்த தாக்குதலில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா முன்பு கூறியது.

பட மூலாதாரம், Reuters
தாக்குதல்கள் குறித்து தனக்கு முன்பே தெரியும் - டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் பற்றி ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ளார்.
இஸ்ரேலின் திட்டங்கள் குறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும், ஆனால் அமெரிக்க இராணுவம் இந்த நடவடிக்கையில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்று அவர் மீண்டும் நம்பிக்கை தெரிவித்தார்.
"இரான் அணு குண்டு வைத்திருக்க முடியாது, நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவோம் என்று நம்புகிறோம். பார்க்கலாம்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.
இஸ்ரேல் தாக்குதலில் பல இரானியத் தலைவர்கள் இறந்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு தனது நிர்வாகம் மத்திய கிழக்கில் உள்ள ஒரு முக்கிய கூட்டாளியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக டிரம்ப் கூறினார். ஆனால், அது எந்த நாடு என்று அவர் கூறவில்லை.

பட மூலாதாரம், X@Wahid
அமெரிக்கா கூறுவது என்ன?
இரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா பங்கெடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்றிரவு, இஸ்ரேல் இரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. இரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முதன்மையான முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும்.
இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது. அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

"இஸ்ரேல் தாக்க தயாராக இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும்"
இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா சில அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கும், இராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததற்கும் இதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு இரானின் எதிர்வினை என்ன?
வெள்ளிக்கிழமை காலை இஸ்ரேலை நோக்கி ஈரான் சுமார் 100 ட்ரோன்களை இரான் ஏவியது. இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றுப்படி அவற்றில் பல ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டன.
இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயி, இஸ்ரேல் "கடுமையான தண்டனையை எதிர்பார்க்க வேண்டும்" என்றும், ராணுவப் படைகள் "அதைத் தண்டிக்காமல் விடாது" என்றும் கூறினார்.
இரானின் வெளியுறவு அமைச்சகம், அதன் ஆயுதப் படைகள் "முழு பலத்துடனும், அவர்கள் பொருத்தமானதாகக் கருதும் விதத்திலும் இரானின் இறையாண்மையைக் காக்கத் தயங்காது" என்று கூறியது.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












