You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை ரயிலில் 4 பேர் கொலை வெறுப்பு வன்முறையா? முகமது குடும்பத்திற்கு என்ன பதில்? ரயில்வே கூறுவது என்ன?
- எழுதியவர், சந்தன் ஜாஜ்வாடே
- பதவி, பிபிசி நியூஸ்
ரயில்வே பாதுகாப்புப் படை அதாவது RPF (RAILWAY PROTECTION FORCE), இரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும். ஆனால் அதன் வீரர்களில் ஒருவரின் தோட்டாக்கள் பயணிகளின் உயிருக்கு உலைவைத்துள்ளது.
இந்த சம்பவம் இந்திய அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை காலை ஜெய்ப்பூர்-மும்பை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சேத்தன் சிங் நான்கு பேரை சுட்டுக் கொன்றார்.
இவர்களில் மூன்று பேர் பயணிகள், ஒருவர் ரயில்வே பாதுகாப்புப் படையின் காவல் துணை உதவி ஆய்வாளர்.
வேலை தேடி மும்பைக்கு சென்ற பிகாரைச் சேர்ந்த முகமது அஸ்கரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டார்.
உயிரிழந்தவரின் குடும்ப நிலை
அஸ்கர் மதுபானி மாவட்டத்தின் பிஸ்ஃபி பிளாக்கில் உள்ள பர்வட்டா கிராமத்தில் வசித்துவந்தார்.
அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அஸ்கரின் மரணத்திற்குப் பிறகு அவரது கிராமத்தில் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக ஜெய்ப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அஸ்கர், அங்குள்ள வளையல் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அஸ்கரின் சகோதரர் ஜிக்ருல்லா கூறுகையில், மும்பையில் உள்ள மசூதியில் வேலை பார்க்க அவர் முடிவு செய்ததாகவும், அது தொடர்பாக அவர் மும்பைக்கு பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இப்பயணத்தின் போது, அஸ்கர் மும்பையை அடைவதற்கு முன், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முகமது அஸ்கர் இதற்கு முன்பும் மும்பையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்திருக்கிறார். அப்போது அவரது குடும்பம் கிராமத்திலேயே வசித்து வந்தது.
ஒரு வருடத்திற்கு முன்பு ஜெய்ப்பூரில் உள்ள வளையல் தொழிற்சாலையில் வேலை செய்ய ஆரம்பித்து குடும்பத்தை ஜெய்ப்பூருக்கு மாற்றினார்.
48 வயதான அஸ்கருக்கு மனைவியும், நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்த குழந்தைகளின் வயது மூன்று முதல் பதினான்கு வயது வரை இருக்கும். அவர் வீட்டில் அஸ்கரின் தாயும் வசித்துவரும் நிலையில், அவருக்கு ஐந்து சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
குடும்பத்தின் பிழைப்புச் செலவுக்காக, அஸ்கரின் சகோதரர்களில் ஒருவர் நாக்பூரில் எலக்ட்ரீஷியனாகவும், ஒருவர் டெல்லியில் உள்ள ரேஷன் கடையிலும் வேலை பார்த்து வருகின்றனர். மீதமுள்ள மூன்று சகோதரர்கள் இன்னும் சிறுவயதினராக இருக்கிறார்கள்.
இதற்கிடையே, அஸ்கர் தனது சகோதரிக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வேறு வேலை தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சம்பவம் எப்படி நடந்தது?
அஸ்கரின் சகோதரர் ஜிக்ருல்லா பிபிசியிடம் பேசியபோது, தனது சகோதரனின் மரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் தனக்குத் தெரிவித்ததாகவும், உடலைக் கொண்டுவருவதற்காக நாக்பூரில் இருந்து டெல்லிக்கு வந்ததாகவும் கூறினார்.
தனது சகோதரரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஏன் சுட்டுக் கொன்றார் என்பதை ரயில்வே நிர்வாகம் கூறவில்லை என்று ஜிக்ருல்லா தெரிவித்த்ர்.
ஏற்கெனவே வெளியாகியுள்ள செய்திகளின்படி, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் சிங் மற்றும் அவரது மூத்த காவல் துணை உதவி ஆய்வாளர் திகாராம் மீனா ஆகியோர் அவர்களது சக பணியாளர்களுடன் ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
காவல் துணை உதவி ஆய்வாளர் திகாராம் மீனா மற்றும் மூன்று பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக சேத்தன் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, மும்பை சென்ட்ரலின் கோட்ட ரயில்வே மாலாளர் நீரஜ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், துப்பாக்கி சூடு நடத்திய சேத்தன் சிங் பின்னர் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு
துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் துணை உதவி ஆய்வாளர் திகாராம் மீனா மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் சிங் சவுத்ரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இக்கருத்துகளின் அடிப்படையில், இச்சம்பவம் வெறுப்பு வன்முறையுடன் தொடர்புடுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பு அவர் அது போல் ஒருநாளும் பேசியதில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சேத்தன் சிங்குடன் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவரது சக ஊழியர் கன்ஷ்யாம் ஆச்சார்யா, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, சேத்தன் தனது உடல்நலக்குறைவு குறித்து கூறியதாக கூறியுள்ளார்.
சேத்தன் சிங் சவுத்ரி ஒரு ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் என்றும், சம்பவம் நடந்த போது ரயிலில் தனது பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ரயில்வே காவல் ஆணையர் பேசும் போது, "அவர் (சேத்தன் சிங்) உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இது குறித்து அவர் ஏற்கெனவே அவருடன் பணியாற்றுபவரிடம் தெரிவித்திருக்கிறார். அதிகாலை 5 மணியளவில் அவர் திகாராம் மீனா என்ற காவல் துணை உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் மேலும் மூன்று பேரை அவர் அதே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்," என்று கூறியுள்ளார்.
சேத்தன் சிங்குடன் ரயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த அவரது சக ஊழியர் கன்ஷ்யாம் ஆச்சார்யாவும், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, சேத்தன் தனது உடல்நலக்குறைவு குறித்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
உண்மை கண்டறியும் குழு
துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜிக்ருல்லா, இது ரயில்வே பாதுகாப்புப் படை வீரரின் வேலை அல்ல என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும் இது தொடர்பாக மேற்கு ரயில்வே செய்தி தொடர்பாளரிடம் பேசி அதன் உண்மை தன்மையை அறிய முயற்சித்தோம்.
ஆனால் மேற்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர், அந்த வீடியோ குறித்து கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
"இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு சம்பவமும் விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின் அறிக்கை அளிக்கப்படும்"
கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகள்
அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் குற்றச்சாட்டுகளும், எதிர்க் குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகின்றன.
குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் அரசியல் கருத்துக்கள் அடங்கிய முழக்கங்களை எழுப்பியதாக பின்னர் வெளியாகும் பல வீடியோக்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்த கருத்துகளின் அடிப்படையில், இந்த சம்பவம் வெறுப்பு வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்பி மனோஜ் ஜா, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் சிங் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ட்வீட் செய்து குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த மனநோய் சமூகத்தில் பரவலாக நாடு முழுவதும் பரவி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
அதிகார பேராசையில் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பியதன் விளைவு இது போன்ற சம்பவம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கார்கே ஒரு ட்வீட்டில் மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு ட்வீட்டில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் செய்த கொலைகள் 'மனிதர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை பிளவுபடுத்தும் சூழ்நிலையின் விளைவு,' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
12956 என்ற எண்ணைக் கொண்ட ஜெய்ப்பூர்-மும்பை சூப்பர்பாஸ்ட் ரயிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
இது சிறுபான்மையினர் மீதான பயங்கரவாத தாக்குதல் என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி ட்வீட் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவி
ரயிலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அஸ்கரின் மற்றொரு சகோதரர் முகமது சனாவுல்லா, தனக்கு இழப்பீடு தொடர்பாக எந்தத் தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.
மறுபுறம், மதுபானி மாவட்ட நிர்வாகமும் அஸ்கரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மதுபானியின் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பரிமல் குமார் பிபிசியிடம் பேசியபோது, அந்த குடும்பத்திற்கு மாநில அரசால் எந்த வகையிலும் உதவ முடியுமானால், அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மதுபானி மாவட்ட நிர்வாகத்திற்கு திங்கள்கிழமை மாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுபானி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் வர்மா பிபிசியிடம் பேசியபோது, ஒரு குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தினர் மீளாத் துயரில் தவிப்பது இயல்பானது என்றும், எனவே அந்த குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் ஆறுதல் கூற சில அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது, முகமது சனாவுல்லா தனது சகோதரரின் உயிரிழப்பைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, வீட்டில் சகஜநிலை திரும்பிய பின் அனைவரும் அவரவர் வேலைக்குத் திரும்புவார்கள்.
முகமது அஸ்கரின் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அஸ்கர் ஏன் உயிரிழந்தார் என்பது கூடத் தெரியாது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்