பாகிஸ்தானில் தேர்தலுக்கு முந்தைய நாளில் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு - யார் காரணம்?
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த இருவேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்நாட்டில் நாளை பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பிஷின் (Pishin) மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் கட்சி அலுவலகம் முன்பு நிகழ்ந்த முதல் குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது குண்டுவெடிப்பு அங்கிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குயில்லா சைஃப் உல்லா (Qillah Saif Ullah) மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இதில், 8 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பிஷின் மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பில் 25 பேர் காயமடைந்திருப்பதாக மாகாண அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இரண்டாவது குண்டுவெடிப்பு பற்றிய விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. JUI-F கட்சியின் தேர்தல் அலுவலகத்தை குறிவைத்து கிலா சைஃபுல்லாவின் பிரதான சந்தை பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஏ.எஃப். பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெறும் என பலுசிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



