You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காவி' உடையில் அம்பேத்கர் இருக்கும் சர்ச்சை போஸ்டர்கள் - கும்பகோணத்தில் என்ன நடந்தது?
அம்பேத்கரின் நினைவு தினமான இன்று, அவர் காவி உடையும் திருநீறும் பூசியது போன்ற புகைப்படத்துடன் கும்பகோணம் நகரில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலரால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பேத்கரின் நினைவு தினமான இன்று கும்பகோணம் நகரின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்து, விபூதி - குங்குமம் பூசி தோற்றத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
"காவி(ய) தலைவனின் புகழைப் போற்றுவோம்" என்ற வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றிருந்தன.
இந்த போஸ்டர்களைப் பார்த்த பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு, இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த சுவரொட்டிகள் அகற்றப்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறினர். இதையடுத்து, இந்த சுவரொட்டிகளை காவல்துறை அகற்றியது.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தையும் சுவரொட்டிகளை அடித்த மாநிலச் செயலாளர் டி. குருமூர்த்தியையும் கைது செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நீலப் புலிகள் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போஸ்டர்களை ஒட்டிய இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரான டி. குருமூர்த்தி என்பவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. இதற்குப் பிறகு அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து சுவரொட்டிகளை அடித்து ஒட்டியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
"சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை - தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப்பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக, இந்த சுவரொட்டி தொடர்பாக வழக்கறிஞர்கள் சிலர் கோஷமிட்டனர்.
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் மறியல் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினரை தடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்