You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை புறநகரில் திருடிய தாய், 3 மகன்கள் கைது - வீட்டைச் சுற்றி தோண்டத்தோண்ட தங்க நகைகள்
மதுரை புறநகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக, இரவில் கதவை திறந்து வைத்து தூங்கும் வீடுகளை குறி வைத்து ஒரு கும்பல் கைவரிசை காட்டி வந்தது. இது தொடர்பாக பல புகார்கள் போலீசாருக்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து மதுரையில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் டூவீலரில் வந்த இரு இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்கள், கையுறைகள் வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களது வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தோண்டத்தோண்ட தங்க நகைகள் கிடைத்தன.
மொத்தமாக போலீசார் 180 சவரன் தங்க நகைகள், 9 லட்சம் ரொக்கத்தை, பறிமுதல் செய்து இது தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட்ட 4 பேரை கைது செய்தனர்.
மதுரையில் திறந்த வீடுகளைக் குறி வைத்து திருடிய கும்பல் போலீசிடம் சிக்கியது எப்படி? மாவட்ட எஸ்.பி கூறுவது என்ன?
மீண்டும் கைவரிசை காட்டிய திருட்டு கும்பல்
மதுரை புறநகர் பகுதிகளான சிலைமான், திருமங்கலம், கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இரவில் கதவை திறந்து வைத்து தூங்குவோரின் வீடுகளை குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்து கொண்டே இருந்தது. இது தொடர்பான புகார்கள் புறநகர் காவல் நிலையங்களில் பதிவாகி வந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக சிலைமான் பகுதியில் ஒரு வீட்டில் நகை திருடப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து எஸ்.பி தனிப்படை போலீசார் மிக தீவிரமாக தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது கல்மேடு பகுதியில் கொள்ளைக் கும்பல் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கல்மேடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி அதில் வந்த இளைஞர்களிடம் விசாரணை செய்து வாகனத்தை சோதனையிட்ட போது அதில் கொள்ளையடிக்க ஆயுதங்கள், கையுறை, முகமூடி உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைக் கொண்டு இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் மதுரை சக்கிமங்கலம் இளமனூர் புதூரைச் சேர்ந்த நரி என்ற சின்னச்சாமி, சோனைச்சாமி ஆகிய சகோதரர்கள் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை செய்ததில் இவர்களுடைய அண்ணன் பொன்னுச்சாமி மற்றும் அவரது தாயார் ஆசைப் பொண்ணு ஆகியோருடன் இணைந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிலைமான், கருப்பாயூரணி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் திறந்து இருக்கும் வீடுகளை குறி வைத்து இரவு நேரம் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட திருட்டு நகைகள்
போலீசார் 4 பேரையும் கைது செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் வீட்டைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் தோண்டி பார்த்தபோது அங்கு பல இடங்களில் திருடப்பட்ட நகைகளை புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. நகைகள், பணத்தை மீட்ட போலீசார் 4 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
"கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு இளைஞர்கள் நகைகளை கொள்ளை அடித்துச் சென்று அவர்களது அண்ணன் மற்றும் அவரது தாயாரிடம் கொடுக்க அதனை வீட்டை சுற்றி பதுக்கி வைத்ததுடன் 30 சவரனுக்கு மேலான நகைகளை தேசிய வங்கிகளில் வைத்து அதற்கான ரசீதுகளை வீட்டில் வைத்திருந்தனர்.
வீட்டில் ஆய்வு செய்த போது காவல்துறையினர் அந்த ரசீதுகளை பறிமுதல் செய்து இருக்கின்றனர். சட்ட ரீதியாக அணுகி வங்கியில் வைக்கப்பட்ட நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்", என பிபிசி தமிழிடம் கூறினார்.
30 வழக்குகளில் 200 சவரனுக்கு மேல் திருட்டா?.
இது தொடர்பாக கருப்பாயூரணி காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை எஸ்.பி சிவ பிரசாத் கூறும் போது
"இந்த குற்ற சம்பவம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு மட்டுமே 12 வழக்குகள் சிலைமான், கருப்பாயூரணி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவாகின.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஊமச்சிகுளம் டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையிலான ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது அந்த தனிப்படையினர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த குற்ற சம்பவங்களை ஈடுபட்டவர்களை கண்காணித்து வந்தனர்.
போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இளமனூரைச் சேர்ந்த சின்னசாமி, சோனை சாமி வாகன சோதனையில் பிடித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது அண்ணன் கருப்பசாமி, தாயார் ஆசை பொண்ணு 4 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது வீடுகளை சுற்றிப் புதைக்கப்பட்ட 180 சவரன் நகைகள், 9 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது. இது தொடர்பான 2021-ல் பதிவான 7 வழக்குகள், 2022-ல் 5 வழக்குகள் 2023- 12 வழக்குகள் உட்பட 30 வழக்குகள் இன்று முடித்து வைக்கப்பட்டது.
திருடப்பட்ட நகைகள் அனைத்து மீட்கப்பட்டதா?
இந்த கும்பலால் திருடப்பட்ட நகைகள் அளவு 240 சவரனை தாண்டுகிறது ஆனால், 180 சவரன் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது. அதேபோல் 16 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டது
அதில் 9 லட்சம் ரொக்கம் மட்டுமே மீட்கப்பட்டது. நகைகள், பணத்தை கொண்டு வாகனம், வீடுகள் வாங்கி உள்ளனர். இதனால் அனைத்தையும் மீட்பதில் சிக்கல் உள்ளது. கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை செய்தால் மேலும் எத்தனை குற்றத்தில் இவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என தெரியவரும்.
இந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இதற்கு முன் எந்த வழக்கிலும் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால் இவர்களை பின் தொடர்ந்து கைது செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது", என எஸ் பி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)