ஒடிஷா ரயில் விபத்தில் உயிர் பிழைத்து சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்த பயணி நெகிழ்ச்சி
ஒடிசாவில் விபத்தில் சிக்கி காயமடைந்த தமிழகப் பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தமிழக பயணிகள் 137 பேருடன் சிறப்பு ரயில் அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 11க்கு வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் வரவேற்றனர்.
முன்னதாக ரயிலில் வந்த பயணிகளை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்கள் ரயில் நிலையத்திற்கு வெளியே தயார் நிலையில் இருந்தன. பயணிகளை அவரவர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல டாக்சிகளும், பேருந்துகளும் வரவழைக்கப்பட்டிருந்தன. ரயிலில் வரும் தாய்மார்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், தாய், சேய் ஊர்திகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
சிறப்பு ரயிலில் சென்னை வந்து சேர்ந்த பயணிகளில் சிலர், விபத்து குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். காயமடைந்த பயணிகளை ஒமந்தூரார், ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுத்தப்பட்டிருந்தது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஒடிஷாவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

பட மூலாதாரம், ANI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



