You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அபுதாபியில் இந்து கோவில் - மோதி பயணம் பற்றி அந்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?
ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருக்கும் பிரதமர் மோதி, அபுதாபியில் உள்ள சுவாமிநாராயண் கோவிலை நாளை திறந்து வைக்கிறார். அவரது இந்தப் பயணம் பற்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஊடகங்கள் பல்வேறு வகையான கருத்துகளுடன் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும், அங்குள்ள ஆன்லைன் ஊடகங்களிலும் அவரது வருகை குறித்து ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை மாலை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் 'அஹ்லான் மோடி' என்ற நிகழ்வு நடந்தது. அதில் பிரதமர் மோதி அங்கு வசிக்கும் இந்தியர்களிடம் உரையாற்றினார். மோதியின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 60 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழும் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.
அரபு மொழியில் விருந்தினர்களை வரவேற்க 'அஹ்லன்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சகிப்புத்தன்மைக்கான அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல்-நஹ்யானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்று கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“2015-ம் ஆண்டு துபாயில் இந்தியர்களுடனான மோதியின் முதல் சந்திப்புக்குப் பிறகு, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இந்தியர்கள் கலந்துகொள்வது இது இரண்டாவது முறையாகும்” என்று அந்த இதழ் எழுதியுள்ளது.
கோவிட் தொற்றுநோய்களின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக அவர் மோதி நன்றி தெரிவித்தார் என்று கல்ஃப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
'நெருங்கிய ஒருவரின் வீட்டிற்கு வந்ததைப் போன்ற உணர்வு'
தனது 40 நிமிட உரையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான வலுவான உறவுகள் குறித்து பேசிய மோதி, இரு நாடுகளும் இணைந்து வரலாற்றின் புதிய அத்தியாயத்தை எழுதுவதாகக் கூறினார் என்று தி நேஷனல் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
'அஹ்லான் மோடி' நிகழ்ச்சி பற்றியும், அங்கு மோதி பேசியது பற்றியும் நேஷனல் நியூஸ் விரிவாக எழுதியுள்ளது. மோதி மாலை ஏழு மணிக்கு ஸ்டேடியத்தை அடைந்ததாகவும், ஆனால் சில இந்தியர்கள் காலை 10.30 மணிக்கே அங்கு வந்துவிட்டதாகவும் அந்த இதழ் கூறியுள்ளது.
அவர் தனது உரையில், "2015-ம் ஆண்டு எனது முதல் வருகை எனக்கு நினைவிருக்கிறது. நான் மத்திய அரசில் இணைந்து அதிகக் காலம் ஆகியிருக்கவில்லை. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு அது ஒரு இந்தியப் பிரதமரின் வருகை. அப்போது பட்டத்து இளவரசர் என்னை வரவேற்க விமான நிலையம் வந்தார். அந்த அரவணைப்பு என்னால் மறக்கவே முடியாது. அந்த முதல் சந்திப்பிலேயே, நான் நெருங்கிய ஒருவரின் வீட்டிற்கு வந்தது போல் உணர்ந்தேன்."
பிரதமர் மோடிக்கு முன், இந்திரா காந்தி 1981ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்தார்.
"10 ஆண்டுகளில் இது எனது 7வது ஐக்கிய அரபு எமிரேட் பயணம். இன்றும் கூட விமான நிலையத்தில் என்னை வரவேற்க சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் வந்தார். அவருடைய அரவணைப்பும் அதே பாசமும் அவரை மிகவும் சிறப்பானவர் ஆக்குகிறது" என்று மோதி பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில், "சகோதரர் ஷேக் முகமது இந்தியாவுக்கு நான்கு முறை வந்துள்ளார், அவர் இங்கு வந்தபோது, இங்குள்ள மக்கள் அவரை முழு மனதுடன் வரவேற்றனர். நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதாரத்திற்கு அங்கு குடியேறிய இந்தியர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்."
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருக்கும் மோதி, அங்கு அதிபரைச் சந்தித்து, பல ஒப்பந்தங்களையும் குறிப்பாக இருதரப்பு முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தையும் அறிவித்ததாக கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதிபரைச் சந்தித்த போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் வலுவான உறவுகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் இங்கு வந்து உங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் போதெல்லாம், நான் என் வீட்டிற்கு, என் மக்கள் மத்தியில் வந்திருப்பதை எப்போதும் உணர்கிறேன். கடந்த ஏழு மாதங்களில் நாங்கள் ஐந்து முறை சந்தித்ததே எங்களுக்கு இடையிலான நெருங்கிய உறவுக்கு ஒரு சான்று. சந்திப்பு நடந்தது, இது அசாதாரணமானதாக இருக்கலாம்."
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் UPI அறிமுகம்
இரு நாடுகளுக்கும் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
மே 2022 இல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா-இந்தியா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது தவிர, இப்போது இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இது வரும் காலங்களில் இரு நாடுகளிலும் முதலீட்டை அதிகரிக்க உதவும்.
இரு நாடுகளுக்கும் இடையில் எந்த தடையும் இல்லாமல் பண பரிவர்த்தனைகள் சாத்தியமாகும் வகையில், UPI பரிவர்த்தனைக்கான உடன்பாடும் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக, இந்தியாவின் UPI உடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இன் AANI பரிவர்த்தனை அமைப்புடன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில், நிலையான ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற ஆற்றல் சேமிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்திய மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் தொடர்பாக ஜி 20 யின் போது ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பின்னர், இது குறித்த விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இது கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும்.
இதே போல் இரு நாடுகளின் தேசிய ஆவணக் காப்பகங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இதன் கீழ் பழைய முக்கிய ஆவணங்களை புதுப்பிக்கும் மற்றும் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
குஜராத்தின் லோதலில் உள்ள கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய இந்திய மாணவர்களின் கல்விக்காக அபுதாபியில் புதிய ஐஐடி திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் முதல் கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ-யின் புதிய அலுவலகமும் துபாயில் கட்டப்பட்டு வருகிறது.
கோவிலுக்கான நிலத்தை அன்பளிப்பாக வழங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர்
நரேந்திர மோதி திறக்க இருக்கும் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள கோவிலின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து ஏழு மூத்த மதகுருக்கள் அபுதாபி சென்றிருப்பதாக கல்ஃப் நியூஸ் எழுதியுள்ளது.
“27 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு அதிபர் அல்-நஹ்யான் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த கோவிலில் ஏழு கோபுரங்கள் உள்ளன, அவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஏழு எமிரேட்களைக் குறிக்கின்றன.” என்று அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.
ராஜஸ்தானின் சுமார் 25 ஆயிரம் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட 30 ஆயிரம் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இதில் நிறுவப்பட்டுள்ளன. யானை, மயில், மாடு போன்ற உருவங்களில் இந்திய வேதங்கள் தொடர்பான கதைகளைக் கூறுகின்றன.
இந்தியாவின் மூன்று நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியைக் குறிக்கும் மூன்று நீர் குளங்கள் கோவிலில் உள்ளன. அங்குள்ள வோஹ்ரா சமூகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த கோவிலில் ஒரு 'நல்லிணக்கச் சுவர்' கட்டப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வர்த்தக உறவுகள்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
1970களில், இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு 180 மில்லியன் டாலர் வர்த்தகம் மட்டுமே இருந்தது, அது இன்று 85 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
2021-22ல், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருந்தது.
2022-23 ஆம் ஆண்டில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்தியா அதிக ஏற்றுமதி செய்தது. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியா 31.61 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
வெளிவிவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் ஏழாவது பெரிய முதலீட்டாளராக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.
இந்தியா முக்கியமாக பெட்ரோலியப் பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், கற்கள், நகைகள், கனிமங்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள், பொறியியல் மற்றும் இயந்திரத் தயாரிப்புகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவிற்கு நான்காவது பெரிய எண்ணெய் விற்பனையாளர். இதனுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எல்பிஜி மற்றும் எல்என்ஜி சப்ளை செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 35 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். 2022-ஆம் ஆண்டு கணக்குப்படி அவர்கள் 20 பில்லியன் டாலர்களை சம்பாதித்து இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு வரும் பணம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 1970 மற்றும் 80 களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் இந்தியர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் தொழிலாளர்களாக இருந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது 35 சதவீத இந்தியர்கள் அதிகாரிகள் நிலையிலான வேலைகளில் உள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)